சனி, மே 09, 2009

இரயில் - 1

இரயில் - 1

ரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.

எழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் "இரும்பு குதிரைகள்" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).

என் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது!

இரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ!

மறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.

பிகு:
பின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.

4 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

இப்படி இருக்கிற நல்ல சப்ஜெக்ட்டை எல்லாம் எடுத்துக் கொன்டால் நாங்க எல்லாம் எதைப் பற்றி எழுதறது.:)

கருநீல விளக்கைப் பார்த்தால் வருவது அமைதி ரங்கா.
அதை சோகம்னு எடுத்துக்கக் கூடாது:)

அடுத்த பதிவு????

ரங்கா - Ranga சொன்னது…

என்னங்க நீங்க. நம்ம என்ன சப்ஜக்ட் பத்தி எழுதினாலும் அது நல்ல சப்ஜக்ட் தான் (காதலிக்க நேரமில்லை நாகேஷ் சொன்னா மாதிரி: நான் என்ன எழுதறேனோ அதான் கதை!).

இன்னும் வளர்ந்து, வாழ்க்கை புரிய ஆரம்பிச்சா அமைதி வரும்னு நினைக்கிறேன்.

வாரம் ஒரு பதிவு பதியறதா உத்தேசம்.

குமரன் (Kumaran) சொன்னது…

இரயிலைப் பற்றிய தொடரா? நல்லது. தொடர்வண்டியே சுவையானது; தொடர்வண்டியைப் பற்றிய தொடரும் சுவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. :-)

எனக்கும் தொடர்வண்டிப்பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவுவண்டியில் சிறுவயதில் சென்றதே எனக்கு நினைவில் இருக்கும் முதல் தொடர்வண்டிப்பயணம். பின்னர் கல்லூரிக்காலத்தில் கோவையிலிருந்து மதுரைக்குச் சென்ற தொடர்வண்டிப்பயணங்கள் நன்கு நினைவில் இருக்கிறது.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். ஆமாம் - தொடர் வண்டியைப் பற்றிய தொடர்! சிறு வயதிலிருந்து ரயில் சம்பந்தப்பட்ட நினைவுகளை அசை போடத்தான் இது :-)