சனி, மே 28, 2011

இலக்கு - 9

என்னுடைய இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி"க்கும் சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் வரும் "ஆனந்த"த்திற்கும் வேறுபாடு இருந்தாலும் அடிப்படையில் சில ஒற்றுமைகளைக் காண்கிறேன். இரண்டிலுமே மற்றவர்களுக்கு எந்த விதமான கஷ்டமோ, தொந்திரவோ வர வாய்ப்பில்லை. மற்றவர்கள் மனம் நொந்து வரும் மகிழ்ச்சியில் நிறைவு இல்லை. அது மட்டுமல்ல, மனதில் இந்த மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அனுபவித்த பிறகு, அடைந்தவர் மனதில் எந்த விதமான குற்ற உணர்வோ, மனக்கசப்போ, தன்னிறக்கமோ வருவதில்லை. அனுபவித்த பிறகு மனதில் திருப்தியும் நிறைவும் தராத மகிழ்ச்சி முழுமையானதில்லை. இந்த இரண்டு குணாதிசயங்களும் இந்த மகிழ்ச்சியின் தூய்மையை, உன்னதத்தை உணர்த்துகிறது.

'அர்த்தமுள்ள இந்து மதம்' தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது: "யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனின் உணர்வுகளை இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது". மதத்தை விடுத்து பொது வாழ்க்கையின் தத்துவமாகப் பார்க்கையில் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உயர்வானதாகவே தோன்றுகிறது. அதிலும், மற்றவர்களுக்கும், தமக்கும் குறைவுதரும் பக்க விளைவுகள் (negative side effects) இல்லாத செயல்கள் அரிதாக இருக்கையில் அந்த மாதிரி செயலால் மகிழ்ச்சியும் வந்தால் அது சிறந்த விஷயம்தான். இந்த மாதிரியான நிறைவான மகிழ்ச்சியை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

நான் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட "மகிழ்ச்சி" எல்லாமே இதுவரை அனுபவித்த வாழ்க்கையில் இருந்துதான். இந்த எடுத்துக்காட்டுகளை (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி" உணர்வை விவரிப்பதற்காகக் குறிப்பிட்டிருந்தாலும், மகிழ்ச்சிக்காக இது போன்ற விஷயங்களை மட்டுமே தேடுகிறேன் என்று அர்த்தம் இல்லை. படிக்கும் எவரும் அவர்களுடைய வாழ்க்கையில் தொடர்பு படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமாறு பொதுவான உதாரணங்களைத்தான் தந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் கிடைத்த மகிழ்ச்சிக்கும், சிதப்பிரக்ஞன் ஆனந்தத்திற்கும் நான் புரிந்து கொண்ட முக்கிய வித்தியாசம் புலன்களின் தொடர்பு. இதுவரை நான் அனுபவித்த மகிழ்ச்சிக் கணங்கள் வருவதற்கு என் புலன்களின் தேவை மிகவும் முக்கியம்.

ஆனால் மகிழ்ச்சியை உணர்வதற்கு அனைத்துப் புலன்களும் தேவையாக இல்லை. சொல்லப் போனால் முழுதாக உணர சில புலன்கள் தடையாக இருந்ததால், மூளை தாமாகவே தேவையில்லாத புலன்களின் தன்மாத்திரை விஷயங்களை தடை செய்திருக்கிறது. தம்ஸ் அப் படப் புத்தகத்தை புரட்டும் ஆர்வத்தில், அந்த மகிழ்ச்சியை உணரும் தருவாயில், அம்மா கூப்பிட்டதை காதில் வாங்காதவாறு மூளை கண் பார்க்கும் படத்தில் ஊன்றிப் போனது. மனதுக்கு இன்பம் தரும் இசையைக் கேட்கையில் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும் மனிதர்கள் ஏராளம். மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் சாதாரணமான புலன்களின் மகிழ்ச்சியை உணரவே மற்ற புலன்கள் தடையாகி விடுகின்றன.

ஆசை என்பது புலன்களின் தேவையை நிரப்பும் உணர்வு; புலன்களின் பசி. ஆசையை பூர்த்தி செய்து வரும் மகிழ்ச்சிக்கு புலன்களின் தொடர்பு இன்றியமையாதவாக மாறி விடுகிறது. சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் 'ஆசையைத் துறந்து வரும் மகிழ்ச்சியே உன்னதமானது' என்று பொருள் வருகிறது. புலன்கள் இல்லாமல் எப்படி மகிழ முடியும் என்ற கேள்வி முன்னாளில் இருந்தது. மகிழ்ச்சியின் உச்சமாக 'ஆனந்தத்தை' அடைய எல்லாப் புலன்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை ஒரு சாத்தியமாக இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். சாதாரண புலன்களின் மகிழ்ச்சியின் உச்சத்தை உணர மற்ற புலன்கள் தடையாகின்ற போது, உன்னதமான மகிழ்ச்சியை அடைய அனைத்துப் புலன்களும் தடையாக இருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் எப்படி அதை அடைவது என்பதில் இன்னமும் தீர்மானமான வழி தெரியவில்லை.

தனக்கோ, மற்றவருக்கோ மனதிலும், உடலிலும் குறைவுதரும் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உன்னதமானது; ஆனந்தமானது. இதை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே தோன்றுகிறது. இதை அடைய புலன்களைத் தாண்டிய சிந்தனையில் வழியிருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்த வழியை அடைவது என் வளர்ச்சியிலும், அறிதலிலும் தான் இருக்கிறது - அதனால் தான் இவையிரண்டும் என் இலக்குகள். மேலும் அடுத்த பதிவில்.

கருத்துகள் இல்லை: