ஞாயிறு, மே 08, 2011

இலக்கு - 8

இலக்கு - 8

மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்பதில் வரும் சுகத்துக்கும், இந்த குறிப்பிட்ட சில தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) வந்த மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டு விவரிக்க முடியாத போதிலும் ஒரு விதமான திருப்தியை, முழுமையைக் காரணமாகச் சொல்லலாம். நான் இலக்காகத் தேடுவது இந்த இரண்டாம் வகை, முழுமை தரும், திருப்தி தரும் மகிழ்ச்சி. தினசரி வாழ்க்கையில் சுகங்கள் அதிகமாக வந்தாலும், இது போன்ற நிறைவு தரும் மகிழ்ச்சிகள் அதிகம் இல்லை. இது புலன்களில் இருக்கிறதா, அல்லது பார்க்கும் (கேட்கும், நுகரும்) பொருளில் இருக்கிறதா, அல்லது புலன்கள் வாயிலாக அறியும், உணரும் அறிவில் இருக்கிறதா?

வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான வரலாற்றாசிரியர் (William James Durant - 1885 - 1981). இவருடைய ஒரு படைப்பு கல்லூரியில் படிக்கும் போது எனக்கு அறிமுகமாயிற்று. இவர் எழுதிய 'நாகரீகத்தின் கதை' - பதினொன்று அத்தியாயங்கள் - ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இன்னமும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை - ஏழு அத்தியாயங்கள் படித்திருக்கிறேன், மற்றவைகளை முழுவதுமாக முடிக்கவில்லை. அவர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி விபரமாக எழுதியிருந்தாலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ, குறிப்பிட்ட அந்த அத்தியாய வரலாற்றை ஒட்டி தன் சொந்தக் கருத்துகளை, தன் மன பிரதிபலிப்பை எழுதியிருப்பார். அது மிகவும் யோசிக்க வைக்கும் விதமாக இருக்கும். அப்படி அவர் எழுதிய ஒரு கருத்து 'அழகு' சம்பந்தப்பட்டது. ஒரு நாகரீகத்தின் கலை, இசை பற்றி எழுதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "ஒரு மலர் அழகாக இருப்பதால் அது நமக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை; மாறாக அம்மலரைப் பார்ப்பதால், நுகர்வதால் நமக்கு வரும் மகிழ்ச்சியின் பொருட்டு அதை அழகு என்று வர்ணிக்கிறோம்."

வெளியுலக பொருள்களைப் பற்றிய அறிவு, அதன் தர நிர்ணயம், அது நமக்கு அளிக்கும் உணர்ச்சி போன்ற எல்லாமே நம் மன உணர்வுகளின் பிரதிபலிப்பால் வருகிறது என்ற கருத்தை இதற்கு முன்னமே பல தத்துவ ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இது போன்ற கருத்தை பழந்தமிழ் நூல்களிலும் காணலாம். உதாரணமாக திருமூலரின் "மரத்தில் மறைந்தது மாமத யானை" - மனம் மரமாகப் பார்க்கையில் மாமத யானை மறைகிறது; யானையாகப் பார்க்கையில் மரம் மறைகிறது. அது மரமா, மதயானையா என்பது மனதைப் பொறுத்தது. மனத்தைப் பொறுத்துத்தான் மற்றவைகள் இருக்கின்றன என்றால், இலக்கான என் மகிழ்ச்சி சரி, தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

ஸ்காட்லாந்தின் டேவிட் ஹூயூம் (David Hume - தத்துவ ஆசிரியர் 1711 - 1776) எழுதிய "கிளை விதி" (Hume's Fork Principle) பற்றிக் குறிப்பிடலாம். அவரின் சித்தாந்தப்படி எந்த ஒரு கருத்தும் மூன்று வகைகளுக்குள் அடங்கும். 1. அந்த கருத்து சரி, தவறு என்ற நிலை சம்பந்தப்பட்ட நிர்ணய வகை (உதாரணம்: நான் இன்று காலை வாழைப் பழம் சாப்பிட்டேன் - இது ஒரு நடந்த நிகழ்ச்சி - சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்). 2. அனுபவத்தை ஒட்டிய கருத்துகள் (உம்: எனக்கு இந்த அறை குளிர்ச்சியாக இருக்கிறது) 3. அறிவுக்கு அப்பாற்பட்டவை - இவை நடப்பை ஒட்டிய சரி/தவறு கணிப்பிலோ அல்லது அனுபவத்தை ஒட்டியோ இருக்காது (உம்: ஒற்றைக் கொம்புள்ள குதிரைகளின் கொம்பில் விஷமுண்டு. இந்த விதமான கருத்து சரி/தவறு என்று சொல்ல முடியாது; அனுபவத்திலும் உணர முடியாது). என் மகிழ்ச்சி என்பது ஒரு விதத்தில் கருத்து. அது எந்த வகைப் பிரிவுக்குள் அடங்கும்?

ராபர்ட் பிர்சிக் (Robert M Prisig - Zen and the art of motorcycle maintenance) எழுதிய பிரபலமான புத்தகத்தில் 'சிந்தனையில், கருத்தில் தரம் என்பது என்ன?' என்று ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலாக விளக்கமும் எழுதியிருக்கிறார். அவரின் விளக்கப்படி, சிந்தனையில், கருத்தில் தரம் என்பது சிந்திக்கும் நிலை தாண்டி உணரப்படுவது. அதனால் இந்தத் தரத்தை சிந்தனையால் வரும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதைப் பற்றி மேலும் எழுதுகையில் இந்த விளக்கத்திற்கும் 'எனக்குத் தெரியாது' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்கிறார். இந்த விளக்கம் "தரம்" சம்பந்தப் பட்டது - "மகிழ்ச்சி" பற்றி அல்ல. இதையும், ஜேம்ஸ் டுரன்ட்டின் 'அழகு' பற்றிய விளக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால், 'மகிழ்ச்சி'யும் விளக்கம் தாண்டி உணரப்படும் விஷயம் போலத் தோன்றுகிறது. எனக்கு ஒரு விஷயம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனதில் இன்பத்தை அளிக்கிறது என்று உறுதியாக முன்னமே விளக்க முடியவில்லை. இம்மாதிரி மகிழ்ச்சி தந்த கடந்த கால நிகழ்ச்சிகளை 'இந்தக் காரணத்தால் தான் மகிழ்ச்சி வந்தது' என்றும் கணித்துக் கூற முடியவில்லை.

டேவிட் ஹூம் எழுதிய கிளைத் தத்துவத்தின் படி என்னுடைய 'மகிழ்ச்சி என்கிற கருத்து' சரி/தவறு வகையில் அடங்கும் என்று தோன்றவில்லை. இது நிச்சயம் அனுபவம் சம்பந்தப்பட்டது; ஆனால் என்னால் விவரிக்க முடியாமல் போவதால், அறிவுதாண்டிய மூன்றாம் பிரிவில் சேருமோ என்றும் கேள்வி வருகிறது. இது அனுபவம் சம்பந்தப்பட்ட இரண்டாம் பிரிவில் வந்தாலும், அல்லது அறிவு தாண்டிய மூன்றாம் பிரிவில் வந்தாலும், 'சரி/தவறு' என்ற நிர்ணயம் இதற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. அதே சமயத்தில் விவேகானந்தர் சொன்ன 'இலக்கு சரி என்ற நிர்ணயம் வந்து விட்டால், இலக்கை அடையும் முறை தான் முக்கியம், இலக்கையே மறந்தாலும் பாதகமில்லை' என்ற வழிமுறையை நடைப்படுத்துவது கடினமாகிறது. மொத்தத்கில் "என்னுடைய இலக்கு மகிழ்ச்சி என்று நினைப்பது சரியா, தவறா" என்ற கேள்விக்கு என்னிடம் இந்தச் சமயத்தில் தீர்மானமான பதில் இல்லை.

கீதையில் இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் 'சிதப்பிரக்ஞன் என்பவனின் விளக்கம் என்ன?' என்று கேட்கையில், கிருஷ்ணன் இம்மாதிரி விடையளிக்கிறார்.
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥५५॥
"அர்ஜுனா! எப்பொழுது இந்த மனிதன் மனதிலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ, மேலும் ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் சிதப்பிரக்ஞன் என்று கூறப்படுகிறான்" (இது கீதாப்ரஸ், கோரக்பூர் வெளியிட்ட தத்வவிவேசனீ தமிழ் விரிவுரையிலிருந்து).

இதே பாடலுக்கு பாரதியார் தன் மொழிபெயர்ப்பில் இவ்வாறு விளக்கமளித்திருக்கிறார்:
ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களையனைத்தும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

இந்த விளக்கங்களில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - ஒன்று ஆசையைத் துறப்பது பற்றியது, இரண்டு ஆனந்தமாக இருப்பது. இந்த விளக்கங்களைப் படித்து நான் உணர்ந்து கொண்டது, ஆனந்தமாக இருப்பது சரி, எப்படி அந்த ஆனந்தம் வருகிறது என்பதுதான் முக்கியம்.

என்னுடைய இலக்கான மகிழ்ச்சிக்கும் இங்கு குறிப்பிட்ட ஆனந்தத்திற்கும் என்ன வித்தியாசம்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: