வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இலக்கு - 1

இலக்கு - 1

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் அன்றாட காரியங்களில் ஆரம்பித்து (ஏழு மணி வண்டி பிடிக்க வேண்டும்) வார/மாத/தொலைநோக்கு பார்வைவரை (ஒருமுறையாவது தாஜ்மகால் பார்க்க வேண்டும்), பல விதமான இலக்குகள். ஆனால் மொத்த வாழ்க்கைக்கும் இலக்கு என்ன என்று யோசித்தால் வெகு சிலருக்கே விடை கிடைக்கிறது. இதிலும் இரு நிலைகள் - என் ஒருவனுடைய வாழ்விற்கு என்ன இலக்கு? மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா? அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா? நாளாக நாளாக கேள்விகள், அதுவும் சமீபகாலத்தில் இந்த மாதிரிக் கேள்விகள் தொடர்பான யோசனைகள் அதிகமாகி விட்டன. இதை மத்திய வயதுப் பிரச்சனை – mid life crisis – என்று கருதி ஒதுக்க முடியவில்லை. இந்தத் தொடரில் என் யோசனையில் தோன்றிய எண்ணங்களை, பிரதிபலிப்புகளைப் பதிய உத்தேசம்.

உயிர் வாழத் தேவையான விஷயங்கள் (காற்று, உணவு போன்ற சமாசாரங்கள்) இல்லை (அல்லது குறைவு) என்றால் இந்த 'இலக்கென்ன?' கேள்விக்கு விடை எளிது. அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய சித்தாந்தத்தைச் சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்! தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதில் எனக்கு அதிக நாட்டமில்லை. வகைப்படுத்துவதால் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும், இந்த வகைகள் எல்லொருக்கும் தொடர்ச்சியாக வருவதாகத் தோன்றவில்லை. தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதற்கு பதிலாக மனதில் தோன்றும் உணர்வுகளை வைத்து விவரித்தால், 'இலக்காக எதை நினைக்கிறோம்' என்பது புரிபடலாம்.

குழந்தையாய் பிறக்கையிலே இருக்கும் உணர்வுகள், வளர்ந்து மனிதனாக மாறுகையில் நிச்சயமாக மாறுபடுகின்றன. குழந்தையாய் இருக்கையிலே பசிக்காக அழுவது இயல்பாக வருகிறது. குழந்தைக்கு தேவை என்ன என்று பகுத்தறிந்து சொல்ல வராவிட்டாலும், அதன் உடலில், மூளையில் இருக்கும் இயல்பான செயல்பாடு அழுகையை வரவழைத்து தனக்கு வேண்டிய தேவையை ஒருவிதமாய் தெரியப் படுத்துகிறது. இந்த பசி விஷயம் பிறந்ததில் ஆரம்பித்து, இறக்கும் வரை தொடர்கிறது - இதனால் ஒரு விதத்தில் முதல் இலக்காக, தேவையாக, 'பசி' வந்து விடுகிறது. இங்கே பசி என்பதை 'உணவுத் தேவை' என்பதோடு மட்டும் நிறுத்தாமல், உயிர் வாழ அத்தியாவசியமான எல்லாவிதமான தேவைகளையும் - காற்று, நீர் உட்பட - உணர்த்தும் விதமாகவே உபயோகிக்கிறேன். இதனால் என் கருத்தில் “பசித் தேவை பூர்த்தியே” முதலாவதாக வரும் இலக்கு!

குழந்தை வளர வளர சுற்றுப்புற சூழ்நிலைகள் புரிய ஆரம்பிக்கின்றன. தன் உடலுக்கு எதெது தீங்கு விளைவிக்கும் என்றும் புரிய ஆரம்பிக்கிறது. பசிக்கு பால் தேவை, ஆனால் பால் சூடாக இருந்தால் ஒரு உறிஞ்சலுக்குப் பிறகு நிறுத்திவிடத் தெரிகிறது. வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் வரக்கூடிய அபாயங்கள் புரியப் புரிய அந்த அபாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவையும் தெரிய ஆரம்பிக்கிறது. இவைகளை தனியாக வகைப்படுத்தாமல் 'பசித் தேவை பூர்த்தி'யின் ஒரு பாதியாகவே கருதுகிறேன். எப்படி தேவை என்று கருதி "சேர்க்க வேண்டியவை" பட்டியலிட ஆரம்பிக்கிறோமோ, அதே போல "சேர்க்கக் கூடாதவை" என்று ஒரு பட்டியலும் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.

இந்தப் பட்டியல் வாழ்க்கையில் நம் அறிவும் அனுபவமும் வளர வளர பெரிதாகிக் கொண்டே வருகிறது. சேர்க்க வேண்டியது - உணவு; விலக்க வேண்டியது - விஷம்; என்ற ரீதியில் உடல், உயிர் காக்கும்/ தாக்கும் சமாசாரங்களை நம் அறிவு நினைவில் தேக்க ஆரம்பிக்கிறது. உடலுக்கும், உயிருக்கும் வரும் அபாயமெல்லாவற்றையுமே 'விலக்க வேண்டியவை' என்ற பட்டியலில் சேர்க்கலாம். ஒரு தேவையை முழுதாகப் புரிந்து கொள்ள சேர்க்க வேண்டியதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது; விலக்க வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேர்ப்பதும், விலக்குவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. உணவு சேர்க்க வேண்டியவை பக்கம் இருந்தாலும், அளவு அதிகமானாலோ, தரம் குலைந்து போனாலோ அதே உணவு விலக்க வேண்டியவை பக்கம் தானாக சென்றுவிடும். வளர வளர இந்த "பசித் தேவை பூர்த்தி" இலக்கு மாறாவிட்டாலும், இந்தத் தேவையின் புரிதல் பெரிதாகி முழுமையை நோக்கி வளர்கிறது. இந்தப் புரிதல் இறக்கும் வரை தொடர்கிறது. இதையே "வாழ வேண்டும்" அல்லது சுருக்கமாக "வாழ்தல்" என்றழைக்கலாம்.

இறைவன் (அல்லது இயற்கை) வீணாக எதையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஒரு உயிரைப் பிறக்க வைத்ததற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதனால் இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தான் என்று எண்ணி வாழ முடியவில்லை. என் பிறப்பின் காரணம் தெரியவில்லை. அந்தக் காரணம் தெரிந்தால் இவ்வாழ்கையின் முக்கியமான இலக்கும் தெரிந்துவிடும். அந்தக் காரணம் தெரியும் வரை, பிறந்த அந்த உயிரை தொடர்ந்து வாழ்ந்திருக்க என்ன தேவையோ அதுவே முதல் இலக்காகிறது. அதனால் என்னளவில் முதல் இலக்கு "வாழ்தல்"!

முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:

இலக்கை நோக்கிப் பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு!

அடுத்த வாரம் தொடர்கிறேன்.

கருத்துகள் இல்லை: