சனி, ஆகஸ்ட் 08, 2009

பார்வை வேறு, கோணம் வேறு.

பார்வை வேறு, கோணம் வேறு.

"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.

கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு!

பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.

எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.

மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.

அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.

கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.

மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.

அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.

மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.

பிகு:
இது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.

11 கருத்துகள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

வாவ்! பொய் சொல்லாதீங்க! இதான் நூறாவது பதிவா? நல்லா கவுன்ட் பண்ணீங்களா? இருநூறாவதா இருக்கப் போவுது!

வாழ்த்துக்கள் ரங்கா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

//ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்//

இதற்கும் வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு மேகத்துக்குள்ளும் கொஞ்சம் தண்ணீர் தான் இருக்கும்!
அதற்காக, மழை பொழியலாமா, வேணாமா-ன்னு எல்லாம் யோசிச்சா என்ன ஆகும்?
ஒரு மேகத்தைப் பார்த்து பல மேகங்களும் திரளும் போது, பயனுள்ள மழை தானாகவே பொழியும்! :)

நல்ல விஷயங்களை, எவ்வளவு சின்னதா இருந்தாலும், பலர் அறிய உடனே சொல்லி விடுங்கள்! அது எம்பெருமானுக்கு மிகவும் பிடித்தமானது! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

//ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள்//

:)
இரக்கப்படுதல் என்பதும் ஒரு வகையில் கொடிது தான்! இன்பத்தைத் துன்பமாகக் கருதும் போது!

//என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான்//

அருமை!
உயர்ந்த பரிசை வீட்டில் மாட்ட இடம் இல்லையே என்று வருத்தப்படுவார்களா? அதற்கு ஏற்றாற் போல் வீட்டின் உள் அமைப்பை மாற்றிக் கொள்வார்கள் இல்லையா?
Pride of Owning the Love is sweeter than Love itself! :)

வல்லிசிம்ஹன் சொன்னது…

இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளின் அணுகு முறை எத்தனையொ நன்றாக இருக்கிறது என்றுதான்
சொல்ல வேண்டும்.

இந்த மாதிரிக் குழந்தைகள் நிறைய உதவிகள் கிடைக்கின்றன.

அப்படி இருந்தும் பாதிக்கப் பட்ட குழந்தைகளிடம் பொறுமையில்லாமல் இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.
அந்தப் பெற்றோர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளட்டும்.
வாழ்த்துகள் ரங்கா. இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்ல பதிவுகள் வந்தால் தான்

நாம் எழுதும் இடம் பண்படும்.

பெயரில்லா சொன்னது…

Raju,

super. Keep writing regularly.

Mani

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி இரவி.

1. உண்மையா சொல்லப் போனா முதல் பதிவை கணக்கில எடுத்துக்கக் கூடாது - அம்பிகாபதி பாட்டு எழுதறச்சே இறை வணக்கம் பாட்டோட சேர்த்தி இல்லைன்னு சொல்லிட்டாங்க. நான் சொன்ன கணக்கு கூகுளார் கூட்டல் பண்ணி சொன்னது. சொந்தமா எழுதினது (முதல் பதிவான அறிவிப்பை தவிர்த்து) தொண்ணூற்றி ஒன்பது தான்!

2. உங்க மேக உதாரணம் ரொம்பவும் நல்லா இருக்கு; ஆனா மனசில இந்த பாட்டும் ஓடுதே!
"வாங்குபவன் கை வானம் பார்க்கும்
கொடுப்பவன் கை பூமியை மறைக்கும்"
எங்கேயாவது என் கண் கால் போற பாதையைப் பார்க்காமல் தடுக்கி விட்டுடுமோன்னு ஒரு பயம் தான்.

3. நீங்க சொல்வது ரொம்பவும் சரி. 'எங்களுக்கு தேவை அனுதாபம் இல்லை; புரிதல் தான்' அப்படின்னு அழகா சொல்லிட்டார்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி வல்லியம்மா.

நண்பர் அலெக்ஸ் பாண்டியன் எனக்கு தந்த அறிவுரை "நிறையப் படிக்கறதை விட்டுடாதே"ன்னுதான் :-) வாரம் ஒரு பதிவு போடத்தான் உத்தேசம்....பார்க்கலாம்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

Thanks a lot Mani.

Raju.

ரங்கா - Ranga சொன்னது…

இது 'இதர எண்ணங்கள்' பதிவுல மட்டும். அப்பா எழுத்தை பதிஞ்சதை கணக்குல எடுத்துக்க முடியாது - நான் செய்தது வெறும் தட்டச்சு மட்டும் தான். அதே போல மொழிபெயர்த்து (?) எழுதின 'வழி' - மூலம் லாவோட்ஸே - பதிவுகளையும் கணக்குல எடுத்துக்க முடியாதில்லையா?
:-)

குமரன் (Kumaran) சொன்னது…

நல்லா கதையைப் போல எழுதியிருக்கீங்க ரங்காண்ணா. முதல் வரியைப் படிக்கும் போது கதை போல் தோன்றி இரண்டாவது மூன்றாவது பத்திகளில் உண்மை நிகழ்வு என்று தெரிந்துவிட்டது. 100வது இடுகைக்கு வாழ்த்துகள்.

அப்பாவோட கதைகளைத் தான் முதலில் படிக்கத் தொடங்கினேன். நன்றாக நினைவிருக்கிறது.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன்.

அப்பாதான் எனக்கு எழுத ஊக்கம் கொடுத்தவர்.