சனி, ஆகஸ்ட் 29, 2009

குப்பை - 3

குப்பை - 3

இந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கையில் எனக்குள்ளே நிறைய கேள்விகள். அதில் ஒன்று: 'உண்மையிலேயே சிறு வயதில் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்ததா?; அல்லது நானும் என் பாட்டி அடிக்கடி சொல்லி வந்தது போல "அந்தக் காலம் போல இல்லை" என்ற ரீதியில் பழையதை மிகைப்படுத்தி, நிகழ்வைப் புறக்கணிக்கிறேனா' என்பது தான். நன்கு ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பட்டுக்கோட்டையிலும், மன்னார்குடியிலும் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடை நினைவுக்கு வந்தது. அவை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி திறந்த வெளிச் சாக்கடைகள். தண்ணீரில் அடித்துச் செல்லப் படும் வீட்டுக் குப்பைகள் எல்லாம் அதில் தான் சென்று சங்கமித்தன. கரையாத திடக் குப்பைகளுக்கு அங்கு இடமில்லை. தப்பி யாராவது அந்த மாதிரி குப்பையைப் போட்டால், சாக்கடை தேங்கி நாற்றம் மட்டுமல்லாமல் கொசுவும் சேர்ந்து அனைவருக்கும் தொந்தரவு. அதனால் அனைவருமே இந்த எழுதாத சட்டத்தைப் பின்பற்றி, சாக்கடை ஒடுகிற மாதிரியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக் குப்பைகள் இப்படி என்றால், வெளியே மனக் குப்பைகளைத் தூண்டும், சேர்க்கும் விஷங்களிலும், ஒரு விதமான் அளவுத் தடுப்பு இருந்தது. அப்போதெல்லாம் வீட்டில் வானொலி மட்டும்தான்; தொலைக் காட்சி இல்லை. இது இயல்பிலேயே ஆபாசக் குப்பைகள் வருவதைக் குறைத்தன. வெளியே சினிமா போஸ்டர்கள், தெருவில் எழுதப்பட்ட கரி வாசகங்கள் கொஞ்சம் குப்பைகளைக் கொடுத்தாலும், சுவர்கள் எண்ணிக்கைகளில் அளவு இருந்ததால், இந்த மாதிரிக் குப்பைகள் அளவிலே குறைவாக இருந்தன. மொத்த நகரத்தில் இருந்த சுவர்களில் வித விதமான கருத்துகள் - அது ஜவுளிக் கடை விளம்பரமாகட்டும், அல்லது அரசியில் கட்சியின் பிராசரமாகட்டும் (தேர்தல் சமயத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்), அல்லது முனிசிபாலிடியின் சுகாதாரப் பிரசாரமாகட்டும் - மொத்தத்தில் தகவல் தெரிவிக்கும் விதமாகவே இயங்கி வந்ததால், அதிகம் குப்பைகள் இல்லை. பைபிள் போதனைகளைச் சொல்லும் பெண்கள் பள்ளியின் சுவரை பார்க்கையில், மனது கொஞ்சம் சமனப்பட்டுப் போனது.

கொஞ்சம் அரிதாக சுவற்றில் குப்பைகளையும் பார்க்கலாம் - ஒரு ஜாதியைத் திட்டியோ, அல்லது ஒரு வர்கத்தை, கட்சி/அரசியல்வாதியைத் திட்டியோ எழுதப்பட்டிருக்கும். என் வகுப்பில் கூடப் படித்த இராஜகோபாலுக்கும், கருணாநிதிக்கும் இடையில் இந்தமாதிரி ஒரு குப்பை சுவர் வாக்கியம்தான் அவர்களின் நட்புக்கு இடையில் வந்தது. ஊர் முழுதும் இருக்கும் சுவரொட்டிகள், சுவர் வாசகங்களில் இந்த மாதிரி குப்பைகள் விகிதாசாரப்படி மிகக் குறைவு; ஆனால் ஒரு குப்பைச் சுவரால் வந்த தீங்கை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

தற்போதைய காலத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் சில மாற்றங்கள். வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குப்பைகளை நகர பொதுக் கழிவுக் குழாய்களுக்கு பூமிக்கடியில் மறைத்து எடுத்துச் செல்வதால் அதன் அளவோ, அதிலுள்ள மற்ற சங்கடங்களோ (தேக்கம், அதனானால் வரும் நாற்றம், கொசு) தெரிவதில்லை. சங்கடங்கள் குறைவு என்பதால் இதை முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும். அதே தொழில்நுட்பம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தைத் தந்திருக்கிறது. வானொலி அதிகம் கேட்பதில்லை; அதனால் அதில் எந்த அளவு குப்பை இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரியாது. எப்போதாவது காரில் செல்கையில், சில 'டாக் ஷோ' என்று சொல்லப் படும் பேச்சு மேடைகளில் பேசப் படுவதை கேட்ட போது, குப்பைகள் வானொலியிலும் வந்து விட்டன என்று புரிந்தது.

தொலைக் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டாம்; அது சினிமாவினால் உந்தப் பட்டு, வரும் பொருளாதாயத்தால் நிலை தடுமாறி, குப்பைகளை விகிதாசாரத்தில் அதிகமாகவே தருகிறது. வெளியே சுவரில் எழுத செலவு அதிகம்; அதனால் அந்த மாதிரிக் குப்பைகள் குறைவு. மாற்றாக வந்தது இணையம். இது ஒரு விதமான பெருச்சுவர்; அளவில் குறைவில்லை. அது மட்டுமல்ல - அனைவர் கைகளிலும் எழுத எடுக்க எடுக்க குறையாமல் வரும் கரித்துண்டுகள். மொத்தத்தில் இயற்கையாக இருந்த சுவர் எண்ணிக்கைத் தடை இப்போது இல்லை - கணினி மூலமாகச் சென்றால் உலகச் சுவர் அனைத்தும் தெரியும். இதில் கரித் துண்டால் மற்றவரைத் திட்டி எழுதியதையும் படிக்கலாம்; அல்லது அழகான வண்ணத்தோடு வரைந்த ஓவியங்களையும் பார்க்கலாம். வரைவது கடினம்; திட்டுவது சுலபம். அதிகப் படியான பக்கங்கள் சுலபமாக வருவதையே தருகின்றன.

இந்த இணையப் பக்கங்கள் நிரந்தரமாக நின்று விடுகின்றன. பொங்கலுக்கு முன் வெள்ளையடித்து, குப்பைகளை அழிக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு குப்பைச் சுவரால் வந்த கேடு இன்னமும் நினைவில் இருக்கிறதால், இந்த இணையச்சுவர்களால் எத்தனை கேடு வருமோ என்று பயம் வருகிறது. சிறு வயதில் இருபது சுவர்களில் தொடர்ச்சியாக பைபிள் வாசகம் இருந்தாலும், கரித்துண்டால் அசிங்கமான படம் வரைந்து திட்டி எழுதப்பட்ட ஒரு சுவரைத்தான் பார்க்க ஆவல் (curiosity) இருந்தது. இப்போதும் அதே போல அதிகமான் மக்கள் ஒருவிதமான் ஆவலால் இந்த இணையக் குப்பைச் சுவர்களைப் பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். இந்தச் சுவர்கள் நிரந்தரமாக இணையத்தில் நிற்பதால், குப்பைகள் தேங்க ஆரம்பித்து விட்டது. ஒரு பழைய திரைப் பாடலில் சொன்னது:
"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ?"

இணையத்தில் தமிழ் மூலமாக வரும் குப்பைகளைப் படிக்கையில் தமிழும் பாவம்தானே என்று வருத்தம் வருகிறது. "தமிழினிய தெய்வதமே" என்று பெருமையோடு பாடியவர் இப்போது கணினியில் பதியப்படும் குப்பைகளைப் படித்தால் தன்னுயிரை விட்டுவிடுவார். இந்தக் குப்பைகள் தேங்காமல் எப்படி வெள்ளையடித்து சுவரைச் சுத்தம் செய்வது? எனக்குத் தோன்றியதை அடுத்த பதிவில் எழுதி, தொடரை முடிக்க உத்தேசம்.

8 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

வெளிச்சாக்கடைகளை மூடி கொசுவை ஒழித்தோம் மற்றும் அதன் தொடர்புடைய எவ்வளவு உயிரினங்களையும் பூமிக்கடியில் புதித்தோமோ தெரியவில்லை அது போல் தமிழ்குப்பை ஒழிக்க முடியுமா? என்று தெரியவில்லை.ஒன்று செய்யலாம் குப்பை மூலம் மின்சாரம் எடுக்கிறார்களாம் அதே மாதிரி தமிழ் குப்பையிலும் முயற்சிக்கலாம்.

துளசி கோபால் சொன்னது…

ம்...........

சுவர்க்குப்பைகள். இணையச்சுவர் குப்பைகள்......

கழிவறையில் சிலர் ஆபாசமாக எழுதுவது போலத்தான் இங்கேயும் அசிங்கம் சில இடங்களில்.....

யாரும் அந்தப் பக்கம் நடமாடாம இருந்தால் கவன ஈர்ப்பு வேண்டி நிக்கும் அந்தக் குப்பைகள் காலப்போக்கில் மறையலாம்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

இணையக் குப்பைகள் என்றால்...கடினம்தான் நீக்குவது. எது குப்பை என்று கேட்டால் என்னவென்று சொல்வீர்கள்!!!

ரங்கா - Ranga சொன்னது…

என்ன குமார் - சஸ்பென்ஸை உடைச்சுட்டீங்களே. அடுத்த பதிவில் மீள்சுழற்சி பற்றியும், எப்படி அகக்குப்பைகளோடு அது ஒத்துப் போகிறது என்பது பற்றியும் பதிவதாகத்தான் எண்ணம்.

வரவுக்கு நன்றி.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க துளசியம்மா. காலம் ஒரு பெரிய சக்தி. ஒருவிதமான குப்பை போய் மறுவிதம் வரும் - வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

ரங்கா - Ranga சொன்னது…

வல்லியம்மா - உங்க கேள்விக்கு பதில் அடுத்த பதிவில் :-)

குமரன் (Kumaran) சொன்னது…

அட்றா சக்கைன்னு இன்னைக்கும் சொல்லலாம்ன்னு தோணுது. என்னமா சிந்திக்கிறீங்க?! அருமையா இருக்கு ரங்காண்ணா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன்.