வியாழன், ஆகஸ்ட் 20, 2009

குப்பை - 2

குப்பை - 2

'என்னடா இது ஒரு குப்பை விஷயத்துக்கு தொடரா'ன்னு நினைக்க வேண்டாம். இந்த 'குப்பை' வேறு விதமானது. வீட்டில் இருக்கும் பொருள் குப்பைகள் (புறக் குப்பைகள்) எப்படி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல வளர்ந்து வருகையில், மனதிலும் குப்பைகள் (அகக் குப்பைகள்) பின்னிப் பிணைந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் புறக் குப்பைகள் எப்படி மாறி வளர்ந்தனவோ, அதே போலத்தான் அகக் குப்பைகளும் மாறி வந்திருக்கின்றன.

சிறு வயதில் வீட்டில் குப்பை பார்த்ததாக நினைவில்லை; மனதிலும் மற்றவரைப் பற்றிய பொறாமை, வன்மம், இன்னபிற கெட்ட எண்ணங்கள் இருந்ததாக நினைவில் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின், சண்டை, கோபம் நிச்சயமாக வந்தன; ஆனால் அவைகள் நினைத்து நிற்கவில்லை. எப்படி பட்டுக்கோட்டையில், மன்னார்குடியில் வீட்டுக் குப்பைகள் தினமிருமுறை வெளியே சென்றனவோ, அதேபோல மனதிலும் கோபம், வருத்தம், போன்ற குப்பைகள் சீக்கிரம் காலியானது. தாமரை இலை தண்ணீர் போல உடனே கோபம் வெளியேறிப் போனது. நினைப்பிலும் தங்காமல், அது மனதில் ஊறி வன்மம், பொறாமை என்றேல்லாம் உருவேறாமல், காணாமல் போனது.

எனக்கு மட்டுமல்ல, கூடப் படித்த அனைவருமே கிட்டத்தட்ட அதே போலத் தான். 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' - சொல்லுக்கு அவசியம் இல்லாமல் போனது - அனைவருக்குமே 'உள்ளே' அதிகமாக ஒளித்து வைக்க குப்பைகள் இல்லாததால். வளர்ந்து கல்லூரிக்கு செல்கையில், கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகள் அதிகமானது. விடலைப் பருவ எண்ணங்கள் இப்போது யோசிக்கையில் குப்பைதான்; அப்போது அவை முக்கியமான விஷயம்! மூளையில் நினைவில் தேக்கி வைக்க விரும்பிய குப்பைகள்.

எப்படி நகரத்தில் வாசம் செய்கையில் குப்பைகள் சில மணி நேரம் அதிகம் வீட்டில் இருந்தனவோ, அதே போல வளர வளர கோபம், பொறாமை, கடுப்பு என்றெல்லாம் குப்பைகள் மனதிலும் நினைவிலும் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தன. குப்பைகள் அதிக நேரம் குப்பைத் தொட்டியில் தங்கி, வீட்டின் வாசம் கெட, குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டியிருந்தது. பழைய பிளாஸ்டிக் தொட்டியைத் தூக்கியெறிந்து விட்டு, முதிதாக மாற்றவும் முடிந்தது. ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்பைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.

அலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் கற்றுக் கொண்ட முதல் பாடம் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' கலை! மனதில் குப்பைகள் இருக்கும்; வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பாடம்தான் சரி என்று நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஒத்துக் கொள்ளவும் நாளாகினாலும், கடைசியில் அது தான் பாடமாகிப் போனது.

இப்போது நாடு விட்டு நாடு வந்ததில் வீட்டில் வாரக் குப்பை; அதற்காக பள பள தொட்டி, வாசனைப் பை என்றெல்லாம் உபயோகிக்கையில் மனதின் குப்பைகளுக்கும் இதே போல ஒப்பனை செய்யும் நாகரீகமும், வார்த்தை ஜாலமும் அத்தியாவசியமாகிப் போனதை நினைத்து வருத்தம் தான் வருகிறது. மறுபடியும் குப்பைகளில்லாத சிறுவயதுக் குழந்தை, சிறுவர் காலத்திற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கமும் வருகிறது.

குழந்தைகள் பேசும் பேச்சைக் கேட்கையில் குப்பைகளை தேக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதே என்ற சந்தோஷம் வருகிறது. அதே சமயத்தில் அவர்கள் பேசும் பேச்சு 'மற்றவர்களுக்குப் பிடிக்காது, பின்னாளில் சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு தடையாகும்' என்று நினைத்து பெற்றோர்கள் (நான் உள்பட) 'பண்பாகப் பேச' கற்றுக் கொடுப்பதைப் பார்க்கையில் நாமே குப்பைத்தொட்டியை வளர்க்கிறோமோ என்ற குற்றவுணர்வும் வருகிறது.

குப்பைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அது தேங்கி, மற்றவற்றையும் நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

12 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது.

Deiva சொன்னது…

Nice one. I echo the same thought as yours. Where can we dump our manakkuppais

ரங்கா - Ranga சொன்னது…

வாங்க குமார். இப்பவும் சிங்கை வாசம் தானா? அங்கே தான் தெருவுலே குப்பை போடக் கூடாதே!

ரங்கா - Ranga சொன்னது…

வாங்க தெய்வா. நம்ம ஊர்தானா நீங்களும். ஆறு வருஷம் பீனிக்ஸ் தான் வாசம் எனக்கு; எடிசன் வரும் முன்னால் வரை.

மனக்குப்பை இருக்குன்னு ஒத்துக்கறத்துக்கே தைரியம் வேணும். அது வந்ததுன்னா, குப்பையும் தானா போக ஆரம்பிச்சுடும்ன்னு தான் எனக்கு எண்ணம்.

இலவசக்கொத்தனார் சொன்னது…

Brilliant analogy!! Good one!!

துளசி கோபால் சொன்னது…

//ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்பைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.//

உண்மை ரங்கா. நாமே உருவாக்கும் குப்பை பத்தாதுன்னு தொலைக்காட்சி, ஊடகங்கள் அவுங்க பங்கையும் நமக்கே அன்பளிப்பாத் தர்றாய்ங்க.

அதான் போல இருக்கு, போனமாதம் ஒரு சந்திப்பில் எழுத்தாளர் சங்கரநாராயணன் அவர்கள், அவர் எழுதுன சில புத்தகங்களை என்னிடம் நீட்டி, எதாவது ஒன்னு எடுத்துக்குங்கன்னதும் 'டக்'ன்னு 'மனக்குப்பை' என்னும் புத்தகத்தை எடுத்துக்கிட்டேன்.

நல்ல பதிவு ரங்கா.

குழந்தைகளை வேறுவிதமா வளர்க்க நினைச்சாலும் இந்த சமூகத்தில் அவுங்களும் அங்கமாகணுமே.....

'ஊரோடு ஒத்து வாழ்' ன்னு சொல்லி வச்சுட்டுப்போயிருக்கு ஒரு பெருசு.

ரங்கா - Ranga சொன்னது…

Thanks Rajesh.

Ranga.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி துளசியம்மா. அந்தப் புத்தகம் இன்னமும் படிக்கவில்லை; தகவலுக்கு நன்றி. தொலைக்காட்சி, இணையம் தரும் குப்பை பற்றி மூன்றாம் பதிவில்.

குமரன் (Kumaran) சொன்னது…

அட்றா சக்கை அட்றா சக்கை. :-)

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன்.

Unknown சொன்னது…

True, ranga...there could be some devices to clean the 'kuppaithotti' like pranayama or osho's dynamic...

your narration is so smooth,

ரங்கா - Ranga சொன்னது…

Thanks Siva.