திங்கள், ஜூன் 19, 2006

இங்கிலாந்துப் பயணம்

கிட்டத்தட்ட இரண்டு வாரம் லண்டன் பயணம் - குடும்பத்தோடு விடுமுறையில். இதற்கு முன் அலுவல் நிமித்தமாக மூன்று அல்லது நான்கு முறை வந்திருந்தாலும், விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க வருவது இதுவே முதல் முறை. பத்து வருடங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்ட படியால், இங்கு வந்தவுடன் அலுவலகம் சம்பந்தமில்லாத பொது வாழ்வில் தெரிந்த வித்தியாசங்கள் - அதனால் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் இங்கே.

அலுவலகத்தில் உள்ள வித்தியாசங்கள் - கூப்பிடும் முறை, செயல்படும் முறை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பொதுவாழ்வில் இவைகளின் தீவிரம் அதிகம். உதாரணமாக நாங்கள் சென்ற இரயில் நிலையத்திலெல்லாம் தானியங்கிக் கருவி (பயணச்சீட்டு வழங்க) வைத்திருந்தார்கள். அதே சமயத்தில் அதன் அருகே ஒரு பணியாளர் நின்று கொண்டு கருவியை உபயோகிக்க உதவிக் கொண்டிருந்தார்! மனதுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் ஸவுத்தாம்டன் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் போது, ஐந்து மணிக்கு கதவை இழுத்து மூடிவிட்டார்கள். வெளியே உட்கார நாற்காலி கிடையாது, கழிப்பிடம் அலுவலகத்திற்க்கு உள்ளே தான். அலுவலகத்திற்குள் பேருந்துப் பணியாளர்கள் நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டும், சுடொக்கு போட்டுக் கொண்டும், ஏதோ வேலை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாய் வந்த பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை அந்தப் பணியாளர்கள் கதவைத் திறக்கவேயில்லை, பயணிகள் கண்ணாடி ஜன்னலைத் தட்டிக் கூப்பிட்ட போதும்!

நாங்கள் வந்திருக்கும் சமயம் உலகக் கோப்பை (கால் பந்து) ஜுரம். கார், வீடு, உடைகள், ஏன் முகத்திலும் கூட இங்கிலாந்துக் கொடி. நிறைய கார்களில் இரண்டு கொடிகள்; வசிக்கும் ஊcன இங்கிலாந்து, பிறந்த ஊரான பிரேசில் (அல்லது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இன்ன பிற நாட்டுக் கொடிகள்)! வித்தியாசமாக இருந்தது.

செய்திகளில் முக்கியமான அரசியல், சமூகப் பிரச்சனை ஒரு நீதிபதி சட்டத்தில் உள்ளது போல ஒரு குற்றவாளிக்கு (child molestation) 'பரோல்' கொடுத்தது. அரசும் அரசியல் வாதிகளும், நீதிபதியைத் தாக்கி அறிக்கைகள் விட, நீதிபதி சார்பில் மற்ற வழக்குரைஞர்கள் சட்டம் இயற்றிய அரசைக் குற்றம் கூற, முடிவில் அரசு தரப்பில் ஒரு மந்திரியை அமெரிக்கா அனுப்பி அங்கு எப்படி இது போன்ற விஷயங்களை அரசும் சட்டமும் கண்காணிக்கிறது என்று அறியப் போவதாக செய்தி வந்திருக்கிறது. நாலு பாட்டும், இரண்டு சண்டைக்காட்சிகளும் சேர்த்தால் நம்மூர் சினிமா தான்!

இதைத் தவிர இரண்டு செய்திகள் - சென்ற வாரத்தில். 1. தவறான தகவல் அடிப்படையில் இங்கிலாந்துப் போலீஸ் ஒரு வீட்டில் புகுந்து ஒருவரை சுட்டும், அவரது சகோதரரை அடித்தும் கைது பண்ணி பத்து நாட்கள் முட்டிக்கு முட்டி தட்டி விசாரித்து பின் தவறு தெரிந்து விடுதலை செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்கள் முஸ்லிம்! அதே வாரத்தில் இங்கிலாந்துப் போலீஸ் தலைவருக்கு ஒரு விருதும் வழங்கப் படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது 2. இங்கிலாந்து ராணிக்கு 80 வயதாகிவிட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் தூங்கிய பிரதம மந்திரியின் மனைவியின் புகைப்படம் செய்தித் தாள்களில் வந்திருக்கிறது.

அமெரிக்காவைப் போல் மற்ற இன, மதங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு அதிகம் இல்லை. வந்த இரண்டாம் நாள் அருகில் உள்ள பூங்காவில் மகளையும், என் மைத்துனன் குழந்தையையும் விளையாட அழைத்துச் சென்றிருந்த என் மனைவியிடம் ஒரு சிறுவனும், சிறுமியும் (பத்து - பதிமூன்று வயதிருக்கும்) 'You are all slaves, why dont you go to your country?' என்று கேட்டதில் உள்ள வருத்தம் கொஞ்சம் இன்னமும் இருக்கத்தான் செய்தாலும், மொத்ததில் குடும்பத்தோடு ஒன்றாக சந்தோஷமாக இருந்தது மகிழ்ச்சியையே தருகிறது.

7 கருத்துகள்:

Alex Pandian சொன்னது…

இன்னும் சில விரிவான பயணக் கட்டுரைகள் (படங்களுடன்) டைப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் :-)

இங்கிலாந்தில் வயதான (50+, 60+) பெரியவர்கள் நமக்கு (பழுப்புத் தோலர்களுக்கு) கொஞ்சம் இரக்கம் காட்டுவர் (ரயிலில், பஸ்ஸில், கடைகளில்...) ஆனால் 30க்குக் கீழே உள்ளவர்களிடம் இந்த ரேரிசம் அதிகம் தென்படும். அதுவும் இங்கிலாந்தில் இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேசிய, இலங்கை பழுப்பர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு இவர்கள் தான் எல்லா இடங்களிலும் .. என்ற வெறுப்பும் அதிகமாகி வருகிறது.

- அலெக்ஸ்

Premalatha சொன்னது…

//அமெரிக்காவைப் போல் மற்ற இன, மதங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு அதிகம் இல்லை.//

you couldn't be more wrong!!

//'You are all slaves, why dont you go to your country?' என்று கேட்டதில் உள்ள வருத்தம் கொஞ்சம் இன்னமும் இருக்கத்தான் செய்தாலும், //

மனம்போல் மாங்கல்யம் மகளே.

ரங்கா - Ranga சொன்னது…

அலெக்ஸ்,

எதிர்பார்ப்பது அதிகம் :-) நான் மணியன் அல்ல, அழகாகவும், விரிவாகவும் எழுத. அதிகமாக பயணிப்பதும் இல்லை. எனக்கு அதிகமான அனுபவம் இல்லை. அலுவலகத்தில் இதைப் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நியூயார்க்கை விடத் தன்மையாகப் பழகுகிறார்கள் - வயது வித்தியாசம் இல்லாமல். பொது வாழ்வில் - அதுவும் இரண்டு வாரத்தில் - என்னுடைய அனுபவம் அவ்வளவு நல்லதாக இல்லை.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

Premlatha,

Am glad that your experience is on a positive side; I am writing about my experience.

My conclusion is based on my experience - not that my experience was something I wanted! Every one is entitled to their opinion!!

Ranga.

johan -paris சொன்னது…

புத்தர் கேட்டாராம் துன்பம் என்று அழுதவனிடம்; "துன்பமே இல்லாத வீட்டிலிருந்து;ஒரு பிடி கடுகு கொண்டுவா";;; நம்நாட்டில் இல்லாத துவேசமும்;பிரிவினையுமா.???மனித இனத்தில் எவருமே! இதில் விதிவிலக்கல்ல!!!நம் நாட்டில் பிறந்த எத்தனையோ சகமனிதனை; நம் வீட்டுக்குள்;கோவிலுக்குள்;தேர்வடம் பிடிக்கவிடாமல்; தனிக் குவளை வைத்து;மலம் தலையில் சுமக்க வைக்கிறோம். நிரந்தர அடிமைகளாக?,, நமக்கு இது பற்றிப் பேச அருகதையுண்டா???
யோகன் பாரிஸ்

ரங்கா - Ranga சொன்னது…

யோகன்,

இதே போன்று கிறிஸ்துவக் கதை ஒன்றும் உண்டு; 'உங்களில் பாவம் எதுவும் செய்யாதவர் முதல் கல்லை எடுத்து அடிக்கவும்' என்று ஏசு சொன்னர் என்று. இரண்டுமே நல்ல கருத்துகள் தான். வேதனை வரும் போது வருத்தப் படுவது இயற்கை. அளவுக்கு மீறினால் தான் அது தடுக்கப் பட வேண்டும். எந்த விஷயத்திலும் எல்லாக் காலத்திலும் பாகுபாடு பார்க்காத நாட்டினர் மட்டும் தான் பாகுபாடு பற்றி பேச அருகதை உள்ளவர் என்று சொன்னால், இவ்வுலகத்தில் யாருமே இதைப் பற்றி பேச முடியாது. எனக்கு நேர்ந்த அனுபவத்தை, என் வருத்தத்தை என் பதிவில் எழுதுவது இயற்கையானது தானே! இதில் என் குலமோ, மதமோ, நாடோ எப்படி ஒரு தகுதியாக இருக்க முடியும்?

ரங்கா.

சின்னக்குட்டி சொன்னது…

//இலங்கை பழுப்பர்கள் அதிகம் //

அதென்ன பாசை.. அதென்ன கதை.........