திங்கள், மே 29, 2006

வண்ணங்கள்

சென்ற வாரம் எங்க வீட்டம்மா என்னை மாடியிலிருந்து 'பச்சை'ப் பையை எடுத்துத் தரச் சொன்னாங்க. நான் கொண்டு வந்த பின் அது 'பச்சை' இல்லை, 'நீலம்' என்று சொல்லி திருப்பித்தர நான் மறுமுறை பத்து படி ஏறி 'நீல'ப் பையை எடுத்துக் கொண்டு வந்தேன். எனக்கு கண்ணில் ஏதும் கோளாறு இல்லை (அப்படித்தான் சென்ற வருடம் மருத்துவர் சொன்னார்). அப்புறம் எப்படி பச்சைக்கும் நீலத்திற்கும் உனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று கேட்பீர்கள் என்று தெரியும். விஷயம் இதுதான். இரண்டு பைகளுமே பச்சைக்கும் நீலத்திற்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான கலர். ஒரு மாதிரியாகப் பார்த்தால் பச்சை; கொஞ்சம் தள்ளி நின்று வேறு கோணத்தில் பார்த்தால் நீலம். ஒரு விதத்தில் நாங்கள் இருவருமே சரிதான் - எங்களின் தனித்தனிக் கோணங்களில். இதை மாடு அசைபோடுவது போல அலுவலகத்திற்கு காரை ஓட்டிக்கொண்டுவரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.

முதன் முதலில் ஒளி அலைகளைப் பற்றி விபரமாக அறிந்து கொண்டது மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போதுதான். அறிவியல் ஆசிரியர் திரு. சேதுராமன் (தற்போது அவர் தான் தலைமை ஆசிரியர்) அனுபவித்து பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கு அறிவியலில் ஒரு தனி விருப்பம் வருவதற்குக் காரணம். ஒளியும் ஒரு வித அலை தான் (ஒளிக்கு துகளின் தன்மையும் உண்டு). இந்த அலைகள் பல விதமானவை. ஒரு முக்கியமான அளவுகோல் "அலைநீளம்" ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு அலை ஒரு முறை மேலே எழுந்து, கீழே போய், மறுபடியும் தொடங்கிய நிலைக்கு வரும் தூரத்தை அலை நீளம் என்று கூறுவார்கள்.

ரேடியோ அலைகளின் அலைநீளம் மிக அதிகம் - 570 மீட்டர் வரை போகும். காமா அலைகளின் அலைநீளம் மிக மிகக் குறைவு - மீட்டரில் அளந்தால் தசமப் புள்ளிக்குப் பிறகு பனிரெண்டு பூஜ்யம் போட்டு ஒன்று போட்டால் வரும் தூரம் - அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு! நாம் கண்ணால் பார்க்கும் ஒளி அலைகள் இந்த காமா அலைகளின் நீளத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமானவை (அதாவது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு). இந்த தூரத்தை நானோ மீட்டர் என்று கூறுவார்கள். நாம் பார்க்கும் ஒளி அலைகளின் அலைநீளம் 400ல் இருந்து 700 நானோ மீட்டர்கள். முழுப் பட்டியலுக்கு பதிவின் முடிவிற்கு செல்லவும்.

இந்த ஒளி அலைகளின் பங்கு - மொத்த அலைகளின் விஸ்தீரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரொம்பவும் சின்னது. அதாவது மொத்த அலைகளில் பத்தாயிரம் கோடியில் ஒரு பங்கைத் தான் நாம் கண்களால் பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போது விபரீதமான கற்பனைகள் வரும். நம் கண்ணுக்கு மட்டும் மற்ற அலைநீளங்கள் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ரேடியோ டெலஸ்கோப் துணையோடு பார்ப்பதற்கு பதிலாக தொலைதூர நட்சத்திரங்களையும், கோள்களையும் கண்ணாலேயே பார்க்க முடியும், என்றெல்லாம் யோசித்ததுண்டு.

இந்த வண்ணக் குழப்பம் வந்தபின் 'ஆட்டுக்குக் கூட தாடியை அளந்து தான் வைத்தான்' என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. தம்மாத்தூண்டு இருக்கும் ஒளி அலைகளுக்குள்ளேயே இத்தனை வண்ணங்கள், குழப்பங்கள் - பச்சையா? நீலமா? என்று. மற்ற அலைநீளங்களையும் கண்ணால் பார்க்க முடிந்தால் எத்தனை வண்ணங்கள் இருக்குமோ? இன்னமும் எத்தனை பிரச்சனையோ? கல்யாண சேலைக்குப் பொருத்தமாக சட்டை எடுப்பதற்குள் அறுபதாம் கல்யாணமே வந்து விடும்! பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம் தான் மனதில் இருக்கிறது.

அலை நீளங்கள்
ரேடியோ அலைகள் = 570 - 2.8 மீட்டர்
தொலைக்காட்சி அலைகள் = 5.6 - 0.34 மீட்டர்
மைக்ரோ அலைகள் = 0.1 - 0.001 மீட்டர்
ஒளி அலைகள் (சிகப்பு-வயலட்) = 700 - 400 நானோ மீட்டர்
அல்ட்ரா வயலட் = 0.1 - 0.0001 நானோ மீட்டர்
X அலைகள் = 0.0001 - 0.000001 நானோ மீட்டர்
காமா அலைகள் = 0.000001 நானோ மீட்டருக்கும் குறைவு

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தொலையிருந்துணர் தொழில்நுட்பத்துக்கே இந்த வண்ணக்க்கோலங்களும் அலைநீளங்களுந்தாமே பொறுப்பு!

குமரன் (Kumaran) சொன்னது…

:-) நல்ல பதிவு ரங்கா அண்ணா.

துளசி கோபால் சொன்னது…

பொதுவாவே, இந்த 'ஆண்களுக்கு மட்டுமே' இந்தக் 'கலர் ' குழப்பங்கள் இருக்குங்க.

வீட்டுக்கு வீடு வாசப்படின்றது இதுதானோ என்னவோ? :-))))

Badri சொன்னது…

துளசி: ஆண்களுக்கு மட்டுமே இந்தக் குழப்பங்கள் அதிகம் உண்டு - காரணம் ஆண்களுக்குத்தான் colour blindness அதிகம்.

http://en.wikipedia.org/wiki/Colour_blindness - இந்தப் பக்கத்தில் நிறையத் தகவல்கள் உண்டு.

ரங்கா - Ranga சொன்னது…

அனானிமஸ்,

'தொலையிருந்துணர்' - அருமையான தமிழாக்கம். உண்மைதான் - இந்த அலைநீளங்களும், வண்ணங்களும் இல்லையானால் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. அலைநீளத்தினால் வண்ணமா?, வண்ணத்தினால் அலைநீளமா? என்ற குழப்பம் எனக்கு இன்னமும் இருக்கிறது.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். இந்த வார இறுதியில் தனி மடல் அனுப்புகிறேன் - தங்களின் பதிவுகள் பற்றி.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

துளசி.

பின்னூட்டத்திற்கு நன்றி. உண்மைதான் - என் வீட்டம்மாவின் தீர்ப்பும் (அப்பீலெல்லாம் இல்லை) இதே தான். அவங்க கருத்து, "ஆண்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை - சோம்பல் தான் காரணம்".

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

பத்ரி,

வலைத்தள இணைப்பு பற்றிய தகவலுக்கு நன்றி. சென்று பார்த்தேன், படித்தேன். எனக்கு அங்குள்ள நான்கு படங்களிலும் எண்கள் தெரிந்தன. ஆனால் முக்கியமாக அந்த படங்களில் உள்ள வண்ணங்களில் தான் குழப்பம்! முதல் படத்தில் உள்ள 83 நீலம் என்று நான் நினைக்கிறேன். அல்லது பச்சையா?! நீங்கள் சொல்லுங்களேன்?

ரங்கா.