புதன், மார்ச் 08, 2006

வல்லினப் பழம்? மெல்லினப் பழம்?

சென்ற வாரம் என் மகளுக்கு படம் பார்த்து வார்த்தைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆப்பிள் என்று சொன்னதும் என்னை 'ஆப்பில்' என்று திருத்தினாள் - நான் படித்துக் கொண்டிருந்தது ஆங்கிலப் புத்தகம்; சிறிது நேரம் கழித்து தமிழ் ஆத்திச்சூடியில் நான் ஆப்பில் என்றவுடன் 'ஆப்பிள்' என்று திருத்தினாள்! மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது - உச்சரிப்பு வித்தியாசம் புரிந்து திருத்துகிறாள் என்று. அப்புறம் தோன்றியது இந்தக் கேள்வி - எது சரி? ஆப்பிலா? ஆப்பிளா?

சிறிது நேரம் (2 - 3 நாள்) யோசனை பண்ணியபின் நான் புரிந்து கொண்டது இங்கே. இது போன்ற நிறைய வார்த்தைகள் மற்ற மொழியிலிருந்து வரும் போது உச்சரிப்பில் வேறுபடுகிறது. சில வேறுபாடுகள் பொருத்தமான எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் - உதாரணமாக 'தமிழ்' என்பதே 'டமில்' என்று மாறுகிறது - ஆங்கிலத்தில் 'ழ்' இல்லாததால்.

பாங்ளா (பெங்கால்) என்பது வங்காளம் என்று மாறுகிறது, தமிழில். வங்காள மொழியில் 'வ' இல்லை என்று பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்ன ஞாபகம். அது சரி என்றாலும், ஒரு மொழியிலிருந்து வார்த்தையை உபயோகிக்கும் போது, மாற்றப்படுகின்ற மொழியில் அந்த உச்சரிப்பு இல்லை என்றால் தானே மாற்ற வேண்டும்? தமிழில் 'ப'வும் இருக்கிறது, 'ல்' ம் இருக்கிறது - பெங்கால் என்று எழுதினால் என்ன? வங்காள மொழியில் 'வ' இல்லை என்ற காரணம் காட்டி அங்குள்ள அத்தனை 'ப' வையும் 'வ' என்றாக்குவது சரியா? அதே போல் தமிழில் 'ல்' இருப்பதால் ஆப்பில் என்று எழுதுவதில் என்ன தவறு?

தமிழ் இலக்கணப்படி புள்ளி எழுத்தில், ஆய்த எழுத்தில் வார்த்தை தொடங்கக் கூடாது. புளோரிடா என்பதை விட ப்ளோரிடா அல்லது ஃப்ளோரிடா என்று எழுதினால் என்ன? தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்ட காலத்தில் எழுதிய இலக்கணத்தை, அப்போது அவர்களுக்கு தெரிந்திராத ஊர்களுக்கும், வார்த்தைகளுக்கும் உபயோகப் படுத்துவது சரியானதுதானா? (தொல்காப்பியர் மன்னிக்க!).

இவைகளெல்லாம் வார்த்தைகளை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதுவது பற்றி. மொழி பெயர்த்து எழுதுவது இன்னும் குழப்பமானது. 'Bell Road' என்பதை ‘பெல் தெரு’ என்று சொல்லலாம். இதையே மணித் தெரு என்று மொழி பெயர்த்தால்?! இங்கு ‘பெல்’ என்பது ஒரு மனிதரின் பெயர். அவரை மணி என்று விளிப்பதை அவர் ஆட்சேபிக்கலாம்!

கல்லூரியில் படிக்கும் போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களின் பெயர்களை சுவரொட்டிகளில் பார்த்து ரசித்து சிரித்ததுண்டு. 'சூரிய பகவானின் வளைவு', 'சாவுக்கு முன் சாமி கும்பிடு' என்ற படங்களின் சுவரொட்டிகள் இன்னமும் நினைவில் நிற்கின்றன. முடிந்தால் மூலப் படங்களின் ஆங்கிலப் பெயர்களை ஊகியுங்கள் பார்ப்போம்!

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'ஒரு கம்ப்யூட்டரின் கதை' என்ற புத்தகத்தின் முன்னுரையில் இந்த மாதிரி மொழிபெயர்த்த வார்த்தைகளை ஏன் உபயோகிக்கவில்லை என்று காரணம் காட்டியிருந்தார். BASIC என்ற ஒரு மென்பொருள் மொழி ' Beginners’ All-purpose Symbolic Instruction Code ' என்ற சொற்றொடரின் முதலெழுத்துகளால் ஆனது - இதையே தமிழில் 'ஆபகுசம்' – ‘ஆரம்பிப்போரின் பல்திறமை குறியீட்டு சங்கேதம்’ என்று மொழிபெயர்த்தால் எப்படியிருக்கும்? என்று கேட்டிருந்தார்!

எனக்கு அவர் கருத்தோடு ஒத்துப்போகிறது. இருந்தாலும், இந்த மாதிரி மொழிபெயர்ப்புகளில் ஒரு நகைச்சுவை இருக்கிறது என்பதால் மொழிபெயர்ப்புகளைப் படிக்கவும் தோன்றுகிறது.

பின் குறிப்பு: ஆங்கிலப் படங்களை ஊகிக்க முடியவில்லையா?
1. Arc of the Sun God
2. Pray before death.

6 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

Pray before deathஐ ஊகிக்க முடிந்தது. ஆனால் முதலாவதை ஊகிக்க முடியவில்லை. :-)

S. Krishnamoorthy சொன்னது…

Dear Sir,
I partially agree with you. When we have Ll why should we use l?
There is no standardisation in transliterating the proper names from Indian languages into English.
For instance, we can write Santaanam for "Santhanam" and Shaanti for Santhi. We can write PEchimuttu for Pechimuthu. How do you pronounce Sankarabharanam? Can it not be written as "SankaraabharaNam"? Kambodhi can be written as "KaambOdi" to ensure proper pronounciation.
Why don't the bloggers think aloud on this and start a campaign?

ரங்கா - Ranga சொன்னது…

Thanks Kumaran.

Thanks Mr. Krishnamoorthy. Already Kumaran has started a silent revolution of using only proper Tamil words; I think it is more a question of time before this catches on.

Ranga.

சுந்தரவடிவேல் சொன்னது…

1. appleல் முடியும் e நாவுக்கு ஒரு மெல்லிய மடிப்பினைக் கொடுக்க வைக்கிறது. maple மாதிரி. இந்த 'ள்'ஐ நாம் legal ல் வரும் 'ல்'களைப் போல் உச்சரிப்பதில்லை. அமெரிக்கர்களுக்கு மஞ்சளில் வரும் ள் போல மடக்க வரவில்லையென்றாலும் appleல் ஒரு விதமான ள் இருப்பதை உணர முடியும். அதனால் ஆப்பிள் தான் சரியென நினைக்கிறேன்.
2. வங்கம் என்றால் கப்பல், கலம்.
இலங்கையில் வங்கம் செய்த இடம் - வங்காலை. வங்கம் ஓடிய கடல் வங்கக் கடல். வங்க நாடு - வங்காளம். வங்கம் என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் பெங்கால் என்ற சொல் வந்ததாக எங்கோ வாசித்திருக்கிறேன். இன்றும் பெங்காலிகளிடம் பேசிப் பாருங்கள் 'வெரி குட்' என்பதை 'பெரி குட்' என்றுதான் சொல்வார்கள். நமக்குப் பெனா வரும் அவர்களுக்கு வெனா வராது. வாரணாசியை பெனாரஸ் ஆக்கியதும் அவர்களே. அதுதான் வங்காளம் பெங்காலான கதை. அவர்களுக்கு வெனா வராததற்காக ஏன் தமிழில் மாற்றிக் கொள்ள வேண்டும்?
3. சுஜாதா இப்படி மட்டந்தட்டுவது அவர் தான் சார்ந்திருக்கும் இன அரசியலும் சார்ந்தது.

சுந்தரவடிவேல் சொன்னது…

4. சொல்ல மறந்து போனது. வல்லினம், மெல்லினம் எங்கிருந்து வந்தன? லவும் ளவும் இடையினங்கள் தானே.

குழந்தையோடு கொண்டாடுங்கள்!

ரங்கா - Ranga சொன்னது…

சுந்தரவடிவேல்,

முதலில் முக்கியமான தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி - இரண்டு விதமான இடையினப் பழங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் -:-)

எனக்கு வங்காளம், பெங்கால் பற்றி இவ்வளவு விபரங்கள் தெரியாது. திருப்பாவையில் 'வங்கக் கடல் கடைந்த மாதவனை' என்ற ஒரு வரி தான் பழைய பாடல்களிலிருந்து நினைவுக்கு வருகிறது. ஒரு மொழியே - வங்காள மொழி (அல்லது பெங்காலி மொழி) உருவாகியிருக்கும் போது, அந்த மொழி பிறந்த இடத்தை அம்மொழி எப்படிக் குறிப்பிடுகிறதோ, அதை மாற்றக் கூடாது என்பது தான் என் கருத்து - தமிழ் நாட்டில் இருக்கும் இடங்களை மற்ற மொழியில் சிதைத்துக் கூறுவதை எப்படி நம்மால் ஒத்துக் கொள்ள முடியவில்லையோ, பெங்காலி மொழி பிறந்த பெங்காலை அவர்கள் எப்படிக் கூறுகிறார்களோ அதை வேற்று மொழியினரான நாம் எப்படி மாற்ற முடியும்?

சுஜாதா பற்றிய தங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை - அவர் குறிப்பிட்டிருந்தது, அக்ரொனிம் என்று சொல்லப்படும் சொற்களை தமிழ்ப்படுத்துவது தேவையில்லாதது என்று பொருள் வருமாறு தான் எழுதியிருந்தார்.

ரங்கா.