வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ஆடல் காணீரோ?

ஆடல் காணீரோ?

இந்த ஆகஸ்ட் மாதம் வித்தியாசமானது.

முதல் வார இறுதியில் மகளுடன் (எட்டு வயது) பத்து நாள் லண்டன் பயணம். என் மனைவியின் அண்ணன் குடும்பத்துடன் (அவர்களுக்கு ஏழு வயதில் பெண்) விடுமுறைக்காக கொஞ்சம் சுற்றலாம் என்று எண்ணிக் கொண்டு போய்ச் சேர்ந்தோம். இரண்டாம் நாள் செஸ்ஸிங்க்டன் சென்று குழந்தைகளோடு சேர்ந்து, உடம்பை ஆட்டி வைத்த விளையாட்டு சமாசாரங்களில் (ரோலர்-கோஸ்டர், ரங்க ராட்டினம், இத்யாதி) சுற்றி விட்டு களைத்துப் போய் வீடு வந்து தொலைக்காட்சியைப் பார்கையில் லண்டன் கலவரம் பற்றிச் சொன்னார்கள். குழந்தைகளோடு சந்தோஷமாக ஆடலாம் என்று பார்த்தால், தெருக்களில் வேறு விதமான ஆட்டம். இரண்டு நாட்களுக்கு வேறு எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். பொழுது போவதற்காக குழுந்தைகள் இரண்டும் 'வீ' (Wii) பெட்டியின் தயவில் டென்னிஸ், கோல்ஃப் என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தெருக்களில் ஆட்டம் குறைந்ததும், மறுபடியும் சுற்றக் கிளம்பினோம். நாளைக்கு ஒருமுறையாவது மழை வந்தது - அரை மணி அல்லது ஒரு மணி நேரம் மழை பெய்து முடிந்ததும் சில்லென்று காற்றுடன் சுள்ளென்று வெயிலும் அடித்தது. மொத்தத்தில் வருண தேவன், சூரிய தேவன், வாயு தேவன் என்று அனைவரும் கொஞ்சம் விளையாடினார்கள்! இரண்டு நாள் வீட்டிலேயே இருந்தாலும், மற்ற நாட்களில் தினமும் ஆடிக் களைத்ததில் திரும்பி வந்தவுடன் வீட்டில் கொஞ்சம் அமைதி. பத்து நாள் பயணம் பறந்து போனதே தெரியவில்லை.

விமானம் ஏறி மகளுடன் நாடு திரும்புகையில் இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் இருக்கையில், இருக்கைப் பட்டியை (seat belt) கட்டிக் கொள்ளுமாறு அறிவித்தார்கள் - காரணம் வெளியே பலத்த காற்றுடன் கூடிய மழை! அதுவரை பறப்பதையே உணரவில்லை, அவ்வளவு சொகுசாக இருந்தது; திடீரென்று செஸ்ஸிங்டன் ரோலர்-கோஸ்டர் போல தூக்கித் தூக்கிப் போட்டது. விமானி திறமையுடன் நூவர்க் வந்து இறக்கியவுடன், பயணிகள் (நானும்தான்) கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சிறு வயதில் இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் நாற்பதாவது ஓவரில் தடுமாறுகையில் வந்த டென்ஷன், பின் ஒரு வழியாக நாற்பத்தொன்பதாவது ஓவரில் வெல்லுகையில் வரும் நிம்மதி கலந்த சந்தோஷம் போல இந்த விமானப் பயணம் அமைந்தது. வீடு வந்து சேர்ந்து இரண்டு நாட்களுக்கு அதிகம் தூங்கி ஆட்டக் களைப்பைப் போக்கிக் கொண்டோம், நானும் என் மகளும்.

மூன்றாம் வாரம் எப்போதும் போல அலுவலக வேலை - இரண்டு வார விடுமுறையில் சேந்து விட்ட விஷயங்களை ஒரு மாதிரியாக முடித்து விட்டு வார இறுதியில் வீட்டில் சேர்ந்த வேலைகளைக் கொஞ்சம் செய்ய முடிந்தது. இருபத்து மூன்றாம் தேதி அலுவலகத்தில் வழக்கம் போல தொலைபேசியில் கதையளந்து கொண்டிருக்கையில் திடீரென்று மேஜை, நாற்காலி எல்லாம் ஆடுவது போல ஒரு பிரமை. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் அவரசமாக வேலைக்கு வந்து விட்டதால் தலை சுற்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், தொலைபேசியில் எதிர் முனையில் சத்தம் - அங்கும் நாற்காலி ஆடுவதாக. அறைக்கு வெளியே சென்று பார்த்தால், மொத்த தளத்திலும் உள்ள சக ஊழியர்கள் எழுந்து ஒருவரை ஒருவர் பீதியுடனும், பிரமிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது அது நிலநடுக்கம் என்று. வாஷிங்டனில் இருந்து பாஸ்டன் வரை உணர்ந்ததாக அப்புறம் தெரிய வந்தது.

வீட்டில் மகளுக்கு ஆயிரம் கேள்வி, நில நடுக்கம் பற்றி. பாதிக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை; இணையத்தில் (கூகுளுக்கு நன்றி) தேடித் தேடி ஒரு வழியாக அவளை திருப்தி செய்தேன். அப்படித் தேடியதில் நான் தெரிந்து கொண்ட சொல்ப விஷயங்கள்: பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் (பூமத்திய ரேகையின் அருகில்) கிட்டத்தட்ட மணிக்கு ஆயிரம் மைல். இது பந்து, அல்லது பம்பரம் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றுவது போல. பூமி சூறியனை சுற்றும் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 66/67 ஆயிரம் மைல்கள்! இந்த வேகத்தில் சுற்றினாலும், அதன் மேலே இருக்கும் கட்டடங்கள், மரங்கள், மலைகள் பூமியிலிருந்து பறந்து போகாமல் ஸ்திரமாக இருக்கின்றன. பூமிக்குள் இருக்கும் கற் படுகைகள் (tectonic plates) கொஞ்சம் திரும்பினாலும், நிலநடுக்கம் வந்து விடுகிறது! ஒரு விதத்தில் பூமியின் ஆட்டம் அபாரம் – அந்தரத்தில், நிற்காமல் அதி வேகத்தில் நடக்கும் ஆட்டம். கொஞ்சம் தாளம் பிசகினாலும், நமக்கு நடுக்கம்தான்!

மகளுக்கு நிலநடுக்கம் பற்றி விளக்கி விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிக் கொண்டிருந்த புயல் பற்றிச் சொன்னார்கள். அது சும்மா கடலிலேயே இருக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை நோக்கி வர ஆரம்பித்தது. எல்லா நிலையங்களிலும் ஐரீன் புயல் பற்றியே பேச்சு - எங்கேல்லாம் போகும், என்ன பாதிப்பு வரும் - ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியவைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். வட கரோலினா மாநிலத்தில் நாட்டினுள் புகுந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு, வட கிழக்கு என்று நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை (29) மதியத்திலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. எடிசனுக்குப் புயல் வந்த போது ஞாயிறு அதிகாலை - மிக பலமான காற்று - வீட்டுக்கு வெளியே பெரிய மரங்கள் ஆடுவதைப் பார்க்கையில் பயமாகத்தான் இருந்தது. அவ்வப் போது மின்சாரம் நின்று போனது! வீட்டின் பின்புறம் ஆறு போலத் தண்ணீர். போதாக்குறைக்கு வீட்டு அடித்தளத்தில் (basement) தண்ணீர் வர ஆரம்பித்தது! நான், என் மனைவி, என் மாமனார் என்று ஒரு சிறு குழு; நீரகற்றும் வேலையில் இரண்டு/மூன்று மணி நேரம் செலவழித்து சாமான்கள் சேதமாகாமல் ஒரு வழியாக சமாளித்தோம். சிறு வயதில் வில்லிவாக்கதில் (1975/76 என்று நினைப்பு) புயலினால் ரெட் ஹில்ஸ் ஏரி உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் வந்தது நினைப்புக்கு வந்தது. அப்போது இரண்டு நாளைக்கு மொட்டை மாடியில் கிரசின் ஸ்டவ்வில் பொங்கல் வைத்து சாப்பிட்டோம்! இப்போது அந்த அளவுக்கு தண்ணீர் வரவில்லை என்ற சந்தோஷம்; அதே சமயத்தில் தொலைக்காட்சியில் புயலினால் வந்த சேதத்தைப் பார்க்கையில் வருத்தமும் வந்தது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் எத்தனை விதமான ஆட்டங்கள். மாத ஆரம்பத்தில் மன மகிழ்ச்சிக்காக நாமே முயன்று செய்த, மற்றவர்களுக்கு இன்னல் தராத ஆட்டங்கள் - (ரங்க ராட்டினம், 'வீ' போன்றவை). மற்றவர்களை துன்புறுத்தும் தாளம் தவறிய ஆட்டங்கள் - லண்டன், லிபியா கலவரங்கள். தொலைக்காட்சியில் அடிபட்டு தடுமாறிக் கொண்டிருந்த மாணவனுக்கு உதவி செய்வது போல வந்து அவன் பையில் இருந்தவற்றை எடுத்துக் கொண்டு சென்ற கொடுரம்; க்ராய்டன் பகுதியில் வீட்டை முற்றிலுமாக நெருப்பில் இழந்த குடும்பத்தினரைப் பார்த்ததை நினைக்கையில் இப்பவும் வருத்தம் வருகிறது. இயற்கையின் ஆட்டங்கள் - லண்டனில் ஒரே நாளில், மழை, வெயில், காற்று என்று மாறி, மாறி வந்தது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அந்த ஆட்டம் ஒரு விதமான நளினமான நடனம் போல இருந்தது. அதே இயற்கை நிலநடுக்கமாகவோ, புயலாகவோ ஆடிய போது பயம்தான் வந்தது. மாத ஆரம்பத்தில் நினைத்தும் பார்க்கவில்லை இந்த மாதத்தில் இத்தனை ஆட்டங்கள் நடக்கும் என்று. இப்போது யோசித்தால், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் பாலையா சொன்ன 'அடேங்கப்பா! ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கே!' வசனம் நினைப்புக்கு வருகிறது. இது போன்று எத்தனை விதமான ஆட்டங்களை வாழ்க்கையில் பார்க்கப் போகிறோமோ என்று நினைத்தால் பிரமிப்பும் பயமும் தான் வருகிறது. ஆட்ட நாயகனான தில்லையரசன் தான் தாளம் தப்பாமலிருக்க அருள வேண்டும்.

4 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கீங்களா? மழையினால் சேதம் அதிகமில்லையே?!

எங்களுக்கும் மின்சாரம் தடைபட்டதைத் தவிர வேறு பிரச்சினைகள் இல்லை.

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாம் ஸார் - ரொம்ப நாளாச்சு. நல்ல வேளை ரொம்ப சேதம் இல்லை. மற்றபடி எல்லாம் சௌக்கியம். வாரக் கடைசியில் தொலை பேசறேன்.

ரங்கா.

பெயரில்லா சொன்னது…

வருக வருக; ஐரீன் கரையைக் கடந்தாலும் சேதம் அதிகமில்லாமல் ஏற்பாடுகள் செய்த அரசு இயந்திரங்களைப் பாராட்ட வேண்டும். மாயூரம் கணநாதர் பொம்மலாட்டக்குழுவின் 'ஆட்டம்' தான் ஞாபகத்திற்கு வருகிறது

- அலெக்ஸ் பாண்டியன்

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி அலெக்ஸ். மாயவரம் காண நாதர் பொம்மலாட்டம் பற்றி நினைவு படுத்தியதற்கு நன்றி. மன்னார்குடி திருவிழா - முக்கியமாக சூரிய பிரபை, சந்திர பிரபை, மற்றும் நேஷனல் பள்ளி நாடகம், பொம்மலாட்டம் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று எண்ணம். அந்த ஆட்டம் எப்போது அரங்கேறுமோ தெரியவில்லை.

ரங்கா.