வியாழன், செப்டம்பர் 08, 2011

பேசு மனமே பேசு! - 1

பேசு மனமே பேசு! - 1

ரொம்ப நாட்கள் (வருடம்) தள்ளிப் போட்டு ஒரு வழியாக சென்ற மாதம் புத்தம் புதிதாக ஒரு 'ஸ்மார்ட் ஃபோன்' வாங்கி விட்டேன் - கூகுள் நெக்ஸஸ் - எஸ்! உபயோகிக்க ஆரம்பித்து மூன்று வாரங்களாகி விட்டது; இன்னமும் உபயோகிக்கும் விதம் முழுவதுமாகப் புரியவில்லை. போனில் எக்கச்சக்கமான விஷயங்கள் - இணையத்தில் தேடுவதில் ஆரம்பித்து, புத்தகம் படிக்க, சுடோக்கு விளையாட, வழி தேடி வரைபடம் பார்க்க என்று ஏகப்பட்ட சமாசாரங்கள். இப்படி எதையாவது செய்து கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து ஃபோன் வந்தால் சடாரென்று எடுத்து பதில் சொல்லமுடியாமல், தட்டுத் தடுமாறி, தடவித் தடவி 'ஹலோ' என்றால் எதிர் முனையில் 'ஃபோனெடுக்க என்ன இத்தனை நேரம்?' என்று கேள்வி! இந்தத் தொலை பேசி, தொல்லைப் பேசியாகி விட்டது.

தமிழில் தொலைபேசி என்ற அழகான வாக்கியம் இருந்தாலும், ஃபோன் என்று சொல்லிப் பழகிவிட்டது. எஸ்.வி. சேகர் ஒரு நாடகத்தில் சொல்லுவார் 'ஓ பிராமிஸ் இப்போது தமிழ் வார்த்தையாகி விட்டதா' என்று; எனக்கு ஃபோன் தமிழ் வார்த்தையாகி விட்டது. இதனால் ஒரு உபயோகம்: வாய்ப்பாடில் வரும், அ, ஆ, இ, ஈ தமிழ் வார்த்தைகளுக்கு (அணில், ஆடு, இலை, ஈக்கள்), ஃ என்பதற்கு அஃது தவிர இன்னுமொரு தமிழ் வார்த்தை சேர்க்கலாம்! நிறைய தமிழ்ப் பிரியர்கள் இது சரியல்ல என்று சொன்னாலும், இந்தப் பதிவில் ஃபோன் என்றே குறிப்பிடுகிறேன்!

என் வாழ்க்கையில் முதல் முதலாக வந்த பரிச்சயம் பரமக்குடியில் இருந்த பெரியப்பா வீட்டு கறுப்பு ஃபோன். தூக்க முடியாத கனம் (அப்போது எனக்கு நான்கு, ஐந்து வயது). பெரியப்பா வக்கீலாக இருந்தார்; வீட்டு போர்டிகோ தாண்டி, அவருடைய வீட்டு அலுவலகம். வீட்டின் முதல் அறைக்கும், அலுவலகத்திற்கும் இடையே ஒரு ஜன்னல். அந்த ஜன்னலுக்கு அருகிலே சிறு மர மேடை; அந்த மேடையில் ஃபோன். ஜன்னலில் கீழ்ப் பாகத்தில் கம்பிகனின் இடைவெளி அதிகம் - ஃபோனின் ரிசிவரை ஜன்னலின் வழியாக எடுக்க வசதியாக இருப்பதற்காக. வீட்டுப் ஃபோனின் எண் 234 - இதை எண்களைச் சுற்றும் தகட்டின் நடுவே பதித்திருப்பார்கள். அந்த ஃபோன் வாசனையே தனி. ஃபோனை இணைத்திருக்கும் வயர் பிளாஸ்டிக் கருப்பு நிறம்; அதை ஒரு விதமான சிகப்பு நிற நூலால் உரை மாதிரி போட்டு சுற்றி வைத்திருக்கும். ஒவ்வொரு எண்ணைச் சுற்றும் போதும் வரும் சப்தமும் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

பெரியப்பாவின் குமாஸ்தா. வேலை விஷயமாக மானாமதுரை, மதுரை என்றெல்லாம் டிரங்கால் போட்டுப் பேசுவார். 'அலோ. அலோ' என்று அவர் அலறுவதைக் கேட்பதே ஒரு தமாஷ் தான்! அவர் பேசுகையில் எதிர் முனையில் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியாது; ஆனாலும் நானும் என் பெரியப்பா பிள்ளையும் அவர் பேசும் தோரணையை காப்பியடித்து ("அப்படியா?", "ஆமா", "அலோ, அலோ") அவர் இல்லாத போது கற்பனையாக ஃபோன் பேசுவோம். ஒரு தடவை கணம் தாங்காமல் கீழே போட்டு விட்டேன்; நல்ல வேளை உடையவில்லை. இருந்தாலும், அதன் பின்னால் நாங்கள் விளையாட அந்தப் ஃபோனை உபயோகிக்க அனுமதியில்லை. இரண்டு தீப்பெட்டிகளை நூலால் கட்டி கற்பனை ஃபோன் பேசுவோம். பின்னால் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கையில் இந்த ஃபோன் சமாசாரம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிப் புரிந்தது.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி வாசத்தில் ஃபோன் ஒரு அரிதான விஷயமாகவே இருந்தது. மற்ற உறவினர்களுடன் தொடர்பு கடிதம் மூலமாகத்தான். இந்தக் "கடுதாசி" பற்றி தனிப்பதிவு இன்னொரு நாள்! திருச்சியில் கல்லூரியில் படிக்கையில், அப்பாவின் தயவில் ஸ்டேட் பாங்க் வட்டார அலுவலகத்தில் "ஹாட் லைன்" ஃபோன் பார்க்க முடிந்தது. மற்ற வட்டார, தலைமை அலுவலகங்களோடு நேரடித் தொடர்பு கொள்வதற்காக (திருச்சியிலிருந்து மதுரை,சென்னை போன்ற இடங்களுக்கு) நேரடி இணைப்புகள். ஒரு அறையில், போதிய பாதுகாப்போடு (காவலுக்கு ஒருத்தர், எல்லா ஃபோன் கால்களையும் எழுத ஒரு நோட்டு!) வரிசையாக தனித்தனி ஃபோன்கள்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊருக்கு. ஹார்லிக்ஸ் விளம்பரப் பையன் பாணியில் 'சுற்ற வேண்டாம்; அப்படியே பேசிடுவேன்!' வகை. எந்த எண்ணையும் சுற்ற வேண்டாம்; நேரடியாக ரிசீவரை எடுத்தால் அடுத்த ஊரில் மணியடிக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்து சென்னையில் சி.ஏ. படிக்கும் போது தணிக்கை உத்தியோகம். வேலைக்காக மற்ற நிறுவனங்களுக்கு செல்கையில் ஃபோன்களின் அருகாமை அதிகரித்தது. அந்த அருகாமை மற்றவர்களோடு பேச வேண்டும் என்ற தேவையையும் தோற்றுவித்தது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு விதமான 'பாலிசி'. அனேகமாக எல்லோருமே ஒரு விதத்தில் ஃபோன் உபயோகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இருந்தாலும் 'ஆடிட்டர் ஆபிஸ்' என்ற அந்தஸ்த்தை கிட்டத்தட்ட அனைவருமே துஷ்பிரயோகித்தோம்! நான் சேர்ந்த வருடத்தில் என்னோடு மூன்று பேர்கள் எங்கள் ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் - ஒருவர் பாடி,மற்றொருவர் மவுண்ட் ரோடு, இன்னுமொருவர் ஆழ்வார்ப்பேட்டை. மாலையில் எல்லோருமே நுங்கம்பாக்கம் ஹை ரோடில் சி.ஏ. இன்ஸ்ட்டிட்யூட்டில் சி.ஏ. வகுப்புக்கு செல்வோம். தினம் ஒரு முறையாவது ஃபோனில் ஒருவரோடு ஒருவர் பேசுவோம் - ஓசியில் கிடைத்ததால்! அப்போதெல்லாம் 'கான்ஃப்ரன்ஸ்' வசதி கிடையாது. புலி, ஆடு, புல்லுக்கட்டு கதை போல மூன்று, நாலு முறை பேச வேண்டியிருக்கும்!

ஆனால் நினைத்த போதேல்லாம் பேச முடியாது. அனேகமாக ஃபோன், அக்கவுண்டண்ட் மேசையில் தான் இருக்கும். அவர் இல்லாத போது பேசுவது வசதி; அவர் இருந்தால், கொஞ்சம் பேச்சைக் குறைக்க வேண்டியிருக்கும். அவருக்கு கோபம் வந்து ஆடிட்டரிடம் வத்தி வைத்தால் பிரச்சனையாகிவிடும் என்று சீனியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள். இருந்தாலும், ஃபோனின் அருகாமை, பேச்சை அதிகரித்தது. வீட்டில் ஃபோன் இல்லாது போனாலும், மற்ற அலுவலக எண்களைக் குறித்து வைத்துக் கொள்ள முதல் முதலாக டெலிஃபோன் டைரியை உபயோகித்தேன் - 1988ல். அந்த சிறு பாக்கெட் புத்தகத்தில் உள்ள அனைத்து எண்களும் இப்போது மாறிவிட்டது. இருந்தாலும்,சென்டிமென்டாக அந்த அரக்குக் கலர் டைரி இன்னமும் என்னிடம் இருக்கிறது! 89ல் முதல் முதலாக சுற்றும் ஃபோனைத் தவிர, பட்டன் அழுத்தும் ஃபோன் பார்த்தேன்! கனம் குறைவான அதே சமயத்தில் விரைவாக எண்ணை அழுத்த முடிகிறதே என்று ஒரே சந்தோஷம்!

வேலையில் இருக்கையில் வந்த ரூ. 20,000 ஃபோன் பில், முதல் முதலாக 96ல் வாங்கிய'செல் ஃபோன்' (கல்) பற்றி அடுத்த பதிவில்.

3 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

ரங்கா

படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் முதலிலேயே கண்ணில் பட்ட ஒன்றைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

போன் என்பதைத் தமிழில் தொலைப்பேசி எனச் சொல்ல வேண்டும். தொலைபேசி என்றால் அறுத்துத் தள்ளிக் கொண்டிருப்பவரைப் பற்றி நாம் மனதில் சொல்லிக் கொள்வது. :)

இலவசக்கொத்தனார் சொன்னது…

ச்சே! பாதி எழுதும் போதே போயிடுச்சே!

அருகாமை - பலராலும் (பெரிய பெரிய எழுத்தாளர்கள் கூட) தவறாக பயன்படுத்தப்படும் ஒரு சொல். அருகிப் போகாதது என்பதே அருகாமை. அது அருகில் என்ற பொருளைத் தருவதே இல்லை.

சும்மா சும்மா தப்பு சொல்லறேன்னு நினைக்காதீங்க! :)

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி ராஜேஷ். இரண்டு விஷயங்களுமே (தொலைப்பேசி, அருகாமை) எனக்கு இது வரை தெரியாது! சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தப்பாவே எடுத்துக்க மாட்டேன். ஆனால் ஒரு கேள்வி: நான் அருகாமை என்பதை proximity என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அது சரியல்ல என்றால் proximity என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?

ரங்கா.