வியாழன், செப்டம்பர் 03, 2009

குப்பை - 4

குப்பை - 4

சரி வீட்டின் குப்பை எது என்பதில் அவ்வளவாகக் குழப்பம் இல்லை; இந்த மனக்குப்பை, இணையக் குப்பை எது என்று கேட்டால் (வல்லியம்மாவின் கேள்வி - சென்ற பதிவிற்கு) எப்படி பதில் சொல்வது? வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் என்ற தத்துவ ஆசிரியர் மலர் - அழகு பற்றி எழுதியதை கல்லூரியில் படித்ததுண்டு. "மலர் அழகாயிருப்பதால் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை; அது சந்தோஷத்தைத் தருவதால் அதை அழகு என்கிறோம்" - என்பதுதான் அது. அதே போலத்தான் இந்தக் குப்பை அடையாளமும். எனக்குள் ஒருவிதமான 'நெகட்டிவ்' உணர்வை - அது வெறுப்பு, கோபம், அமைதியின்மை அல்லது அருவெறுப்பு போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம் - ஏற்படுத்தும் எந்த செய்கையும், எழுத்தும், படமும் என்னைப் பொருத்தவரை குப்பை.

இந்த விளக்கம் எனக்குத் தெளிவாக இருந்தாலும், இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள். ஒரு வார்த்தை அல்லது படத்திற்கு எனக்கு வரும் உணர்வும் மற்றவர்களுக்கு வரும் உணர்வும் ஒரே விதமாக இருக்காது. எது எனக்கு குப்பை எனத் தோன்றுகிறதோ அது மற்றவருக்கும் பொருந்தாது. உதாரணமாக ஆத்திகருக்கு நாத்திகம் குப்பை; நாத்திகருக்கு ஆத்திகம் குப்பை. நான் என் உணர்வை பிராதனமாக்கி 'குப்பையை ஒழிப்பேன்' என்று கிளம்பினால் அது மற்றவரோடு சச்சரவைத்தான் உண்டு பண்ணும். அதனால் இந்த விளக்கம் நடைமுறைக்கு 'குப்பையை ஒழிக்க' உதவாது.

அது மட்டுமல்ல - ஒரே எழுத்து சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு சிரிப்பையும் வரவழைத்தால் அந்த எழுத்தை குப்பை என்று என் உணர்வை மட்டும் பிராதனாமக வைத்து சொல்வது சரியாகத் தோன்றவில்லை. வீரமணி என்ற பெயரைப் பார்த்தவுடன் நாத்திகம் நினைப்புக்கு வருகிறதா அல்லது அய்யப்பன் பாடல் நினைப்புக்கு வருகிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்திருக்கிறது. 'கடவுள் இல்லை' என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் பெரும்பான்மையான ஆத்திகருக்கு கோபமும், நாத்திகருக்கு மகிழ்ச்சியும் வருவது இயற்கை. அதே சமயத்தில் 'அவன் இல்லை என்று சொல்வதற்குக்கூட அவனை முதலில் சொல்லாமல் இருக்க முடியாது' என்று இந்த வாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்த சிவபக்தரைப் பார்த்திருக்கிறேன். 'இல்லை என்பதை எப்படிக் குறித்து இல்லை என்று சொல்லமுடியும்? இதுவே பகுத்தறிவுக்குப் புறம்பானது' என்று இதே வாக்கியத்தைப் பார்த்து கோபப்பட்ட நாத்திகரையும் பார்த்திருக்கிறேன்.

இணையத்தில் குப்பை அதிகம், அதனால் என் நினைப்பில் குப்பை வந்து விட்டது என்று சொல்வது, 'கல் தடுக்கி விட்டது' என்று நாம் சொல்வது போலத்தான். நாம் பார்க்காமல் கால் தடுக்கி விழுந்துவிட்டு ஏதோ நகர்ந்து வந்து கல் நம் காலை வாரி விட்டது போல சொல்வது எப்படிப் பொருந்தாத ஒன்றோ, அதே போல ஒரு எழுத்தை, படத்தை, செய்கையை குப்பை என்று சொல்வது உண்மையில் 'இதைப் பார்த்து படித்ததால், என்னுள்ளே குப்பையான உணர்வுகள் வந்து விட்டன' என்று தான் சொல்வதாக அர்த்தம். நான் 'குப்பை' என்று சொல்வது என்னுணர்வையும், அந்த எழுத்தின் (அல்லது படத்தின், செய்கையின்) வகைப்பாடையும் தான் குறிக்குமே தவிர, அதன் தரத்தைக் குறிக்காது.

அதே சமயத்தில் ஒரு எழுத்து பெரும்பான்மையான மக்களுக்கு ஒரே விதமான உணர்வைத் தந்தால், அந்த எழுத்தும் அந்த உணர்வோடு ஒன்றாகிப் போகிறது. மக்களை ஒரு சங்கடத்தில் ஒன்று சேர்த்து எழுப்பிவிட்ட பேச்சுகளை (உதாரணம்: காந்திஜியின் தண்டி யாத்திரை, மார்ட்டின் லூதர் கிங் பேச்சு) வரலாற்றின் அதிகம் காணலாம். அதே போல பெரும்பான்மையான மக்களுக்கு அருவருப்பைத் தரும் எழுத்தை குப்பை என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. எப்படி ஒரு எழுத்து எனக்குள் உணர்வைத் தூண்டுகிறதோ, அதே போல என் உணர்வுதான் எழுத்தாக என்னிடமிருந்து வருகிறது. என் உணர்வு குப்பையாயிருந்தால், என் எழுத்தும் அதை பிரதிபலிக்கும். மற்றவரைப் பற்றி தரக் குறைவாக எழுதுகையில் உண்மையில் என் உணர்வு குப்பை என்றுதான் நான் பறை சாற்றுகிறேன். இது புரிந்துவிட்டால் நான் குப்பை போடப் போவதில்லை. இது இணையத்தில் எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.

இணையத்தில் எப்படி குப்பையைக் குறைப்பீர்கள் என்று கேட்டால், நான் குப்பை போடாமல் இருக்கப் போகிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் வீடு சுத்தமாயிருப்பதைப் பார்த்து அடுத்த வீட்டிலும் குப்பை குறைந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி. சாதத்தில் கல், உமி வருவது சகஜம். அது குப்பைதான்; எடுத்து எறிந்துவிட்டு சாப்பிடத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் சாதம் எடுத்து வந்த பிளாஸ்டிக் டப்பா தவறி தரையில் விழுந்து மண்ணோடு கலந்துவிட்டால், சாதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு டப்பாவை அலம்பி எடுத்து வந்து விடுகிறோம். குப்பை அதிகமாகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவையே நாறடித்துவிட்டால், டப்பாவோடு சேர்த்து எறிந்து விடுகிறோம்.

பிளாஸ்டிக் டப்பாவை குப்பையில் போடாமல் அதை மீள்சுழற்சி மூலம் மற்றுமொரு டப்பாவாக செய்ய முடியும்; செய்கிறார்கள். மனதில் வரும் கோபத்தை, அந்த வேகத்தை, வெறியை, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று திருப்ப முடியும். என்னளவில் கொஞம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கோபமே இல்லாமல் இருப்பதென்பது முடியாது போலத் தோன்றுகிறது; ஆனால் கோபம் வருகையில், வெளியில் புல்லை வெட்டவோ, அல்லது தரையை அழுத்திச் சுத்தம் செய்யவோ ஆரம்பித்தால், அந்த கோபத்தில் வரும் வேகம் ஒருவிதமாகத் தணிந்து போகிறது (புல்லும் வெட்டப்பட்டு விடுகிறது, தரையும் சுத்தம்!).

என் மனமும் இந்த சாதம் வைத்த பிளாஸ்டிக் டப்பா போலத்தான். அவ்வப் போது குப்பை வருகிறது - எடுத்துப் போடுவதற்காக மற்ற நல்ல உணர்வு தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறேன். குப்பை தேங்க ஆரம்பித்தால், நானும் குப்பைத் தொட்டியாகிவிடுவேன் என்று தெரியும். அளவு ரொம்பவும் அதிகமானால் குப்பைத்தொட்டியே குப்பையாகிவிடுவதைப் பார்த்ததால், அளவு மீறக் கூடாது என்று தீர்மானம். இல்லையென்றால் யாராவது படையப்பா ஸ்டைலில்:"நேற்று வரைக்கும் குப்பைத் தொட்டியப்பா; இன்று முதல் நீ குப்பையப்பா" என்று பாடிவிடுவார்கள். எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும்.

உங்களுக்கு வேறு ஏதாவது வழியில் குப்பையை குறைக்க, அல்லது தேங்காமல் இருக்க வைக்க முடியும் என்று தோன்றினால் அவசியம் சொல்லவும். என்னாலான வழியில் நிச்சயம் முயற்சிப்பேன்.

4 கருத்துகள்:

சீமாச்சு.. சொன்னது…

//எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும்.
//
நியாயமான எண்ணங்கள். ரொம்பவே யோசிக்க வெச்சிட்டீங்க..

நல்லா எழுதுங்க..
அன்புடன்
சீமாச்சு..

பெயரில்லா சொன்னது…

thanks for ur post.this is very useful to me
by
www.aanmigakkadal.blogspot.com

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி சீமாச்சு.

ரங்கா - Ranga சொன்னது…

Thanks Anonymous for wishes and the link you have given.