ஞாயிறு, அக்டோபர் 15, 2006

ரோடு

இந்த வருடமும் ரோடு போட்டாயிற்று. நியூஜெர்சி வந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமும் கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் போது இது ஒரு வேலை. வீட்டு கராஜிலிருந்து, சாலை வரை இருக்கும் 'டிரைவ் வே'க்கு (Drive way) 'சீலர்' (Sealer) (அதாங்க - தார்) போட வேண்டும். இது குளிர்காலத்தில் பனி படிந்து சாலை குலையாமல் இருக்க உதவும். இதை நாமே செய்தால், ஒருவிதமான திருப்தி (செலவும் குறைவு!); ஒரு உடற்பயிற்சி போலவும் ஆயிற்று என்று நான் தான் செய்வது வழக்கம். இதற்கு தேவையெல்லாம், இரண்டு டப்பா தார், ஒரு நீண்ட கழியின் முனையில் ரப்பர் சட்டம் (தமிழில் இழுப்பான் என்று சொல்ல ஆசை - சரியா என்று தெரியவில்லை).

இந்த முறை தார் போடுகையில், சண்டீகரில் தார் ரோடு போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. 1993ல் சண்டீகரில் இருந்த போது, பஞ்சாபி தெரியாது, ஹிந்தியும் தட்டுத் தடுமாறித்தான் வரும். ஒரு ஞாயிறு வெளியே சென்று விட்டுத் திரும்பும் போது, சண்டீகருக்கு சற்று வெளியே, புது தார் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். காரெல்லாம் பக்கத்திலுள்ள குண்டுக் குழியுமாய் இருந்த மண் சாலையில் மெதுவாக ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது.

இந்தப் பணியாளர்களெல்லாம், பக்கத்திலேயே குடிசை போட்டுக் கொண்டு, வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாலை போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களில் ஒருவர் தமிழில் ஏதோ சொல்ல, ஒரே சந்தோஷம். வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, இறங்கி, கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சேலம், திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்தவர்கள்.

வேலை கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்தவர்கள். இவர்களில் சிலர் தமிழ்நாட்டிலிருந்து வெளியே வந்து 30 வருடங்கள் ஆகி விட்டன. கர்நாடகம், ஆந்திரா, மஹாராஷ்டிரம் என்றெல்லாம் இடம் பெயர்ந்து சண்டீகருக்கு வந்து விட்டார்கள். இந்தக் குழுவில் இருந்தவர்கள் ஒரு 7 அல்லது 8 குடும்பங்கள்; மற்றும் சிலர் இந்தக் குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டவர்கள். அனேகமாக நடுவயது பணியாளர்கள் (ஆண், பெண் இருவருமே) அனைவரும் ஆறு அல்லது ஏழு மொழிகளில் பேசுகிறார்கள். ரோடு போடுவது, கட்டிடம் (முக்கியமாக, அணை அல்லது ஒரு பெரிய கட்டிடம் கட்ட; குட்டி வீடு எல்லாம் கட்ட வருவதில்லை) கட்டுவது போன்றவற்றையே பணியாக ஏற்கிறார்கள்.

காண்டிராக்ட் எடுத்தவர்கள் இவர்களை அணுகி இரண்டிலிருந்து எட்டு மாதங்களுக்கு மொத்தமாய் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எப்போதும் ஒரு விதமாய் நகர்ந்து கொண்டே இருப்பதால், இவர்கள் குடியிருப்பில் இருக்கும் சாமான்களும் குறைவாக வைத்திருக்கிறார்கள். இரண்டு வேலைகளுக்கு இடையே சில சமயம் மூன்று மாதங்கள் வரை விடுப்பும் வருகிறது. அப்போதெல்லாம், சிலர் சொந்த ஊருக்கு சென்று அங்கு இருக்கும் மற்ற உறவினர்களைப் பார்த்து விட்டு வருகிறார்கள். இந்த மாதிரி விடுப்பில் செல்லும் போது சிலரின் திருமணமும் முடிந்து, குடும்பத்தோடு இந்தக் குழுவில் வந்து சேர்கிறார்கள். வேறு சிலர் பிற மாநிலங்களில் வேலை செய்யும் போது, அங்கு கூட வேலை செய்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியும் விடுகிறார்கள்.

இவர்கள் குழந்தைகளும் இவர்களோடேயே இடம் இடமாய் மாறி வருவதால், தொடர்ந்து ஒரு பள்ளியில் படிப்பது என்பது அதிகம் இல்லை. இவர்கள் குழுவிலேயே சிலர் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறோம் என்றார்கள்; இருந்தும் இது மிகச் சீராக நடப்பதாகத் தெரியவில்லை. சண்டீகரில் சில குழந்தைகளும் இவர்களுக்கு வேலைக்குத் துணையாக இருப்பதைப் பார்த்தேன்; வருத்தமாக இருந்தது. இப்போது பதினான்கு வயது வரை சிறுவர்/சிறுமியரை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் வந்திருக்கிறது; இது இவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

மன்னார்குடியில் சாலை போடு பணியாளர்களுக்கு அனேகமாக காலில் செருப்பு இருக்காது; இருந்தாலும் வெறும் சான்டல் செருப்புதான். சிலர் சாக்குப் பைகளை காலில் சுற்றி கயிறால் கட்டி நடப்பார்கள். சூடான (கொதிக்கும்!) தார் தரையில் எப்படித்தான் நடப்பார்களோ என்று இருக்கும். சண்டீகரில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. செருப்பும், பூட்சுகளும் உபயோகத்தில் இருந்தன.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அருகே இருந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், காரில் இருந்த ஆரஞ்சுப் பழங்களை கொடுத்து விட்டு வந்தேன். தமிழ் மக்களைப் பார்த்து பேசிய மகிழ்ச்சி, வேலைக்காக மாநிலம் விட்டு வெகுதூரம் வந்து கஷ்டப் படுவதையும், குழந்தைகளுக்கு படிக்க முடியாமல் வேலை செய்வதையும் பார்த்ததில் வருத்தம், என்று ஒரு குழப்பமான உணர்வோடு என் ரூமுக்கு வந்து சேர்ந்தேன். மற்ற மக்களுக்கு நல்ல வழி (சாலை) ஏற்படுத்தி விட்டு, தங்களுக்கு ஒரு வழி கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

What a wonderful story. Thank you forthat. Keep doing it.

ரங்கா - Ranga சொன்னது…

நிர்மல்,

பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை; குழந்தை வேலை ஒழிப்பு (பதிநான்கு வயது வரை) உயர்ந்த எண்ணமாய் இருந்தாலும், மாற்று திட்டங்களும், முக்கியமாக இலவசக் கல்வி (புத்தகங்கள் உட்பட) கிடைக்காவிட்டால், இந்த சட்டத்தால் கஷ்டங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ரங்கா.

குமரன் (Kumaran) சொன்னது…

ரங்கா அண்ணா. நீங்களே ரோடு போட்டுவிடுகிறீர்களா? போன வருடமும் நான் செய்யவில்லை. இந்த வருடமும் செய்யவில்லை. இங்கே எல்லாம் இளவேனிற்காலத்தில் செய்கிறார்களே? அதனால் 2007 இளவேனிலில் தார் அடிக்கலாம் என்று இருக்கிறேன்.

மக்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதனைத் தான் உங்கள் கட்டுரை சுட்டுகிறது. படித்து முடித்த பின் மனம் கனத்தது.

இலவசக்கொத்தனார் சொன்னது…

நல்ல பதிவு ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

Anonymous - thanks for the comments; this is not a story but a real life incident (though about 13 years ago).

Ranga.

ரங்கா - Ranga சொன்னது…

குமரன்,

இங்கும் சிலர் வசந்தத்தில் இந்த வேலை செய்கிறார்கள். எனக்கு இப்போதுதான் வசதியாக இருக்கிறது. பனிக்காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்துவிட்டு, வசந்தத்தில் குழந்தைகளோடு வெளியே சுற்ற நேரம் சரியாகிவிடுகிறது.

நம்மூரில் பொங்கலுக்கு முன் வீட்டில் காவி/வெள்ளை அடிப்பதை நினைத்துக் கொண்டே இந்த வேலையைச் செய்ய வேண்டியதுதான்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி இ.கொ.

ரங்கா.