செவ்வாய், ஜூலை 25, 2006

பணம் தரும் (உருப்படாத?) யோசனைகள்

அலுவல் நிமித்தமாக கொலம்பஸ் (ஒஹாயோ) செல்ல வேண்டியிருந்தது. பயணம் ஒன்றரை மணி நேரம் என்றால், விமானத்தில் ஏறி ரன்வே செல்லவே ஒன்றேகால் மணி ஆகிவிட்டது! போய் இறங்கினால் கூட வந்த ஒரு பயணியின் பெட்டி வரவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்! வெறுத்துப் போய் மற்ற விமானங்களையும் (நியுவர்க்), விமான நிலயத்தையும் (கொலம்பஸ்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது வந்த இரு யோசனைகள். இந்த ஐடியாக்களை வைத்துப் பணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் (ஒரு நப்பாசைதான்). பணம் தருமா, இல்லை பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் உருப்படாத யோசனைகள் தலைப்பின் கீழ் போகுமா என்று தெரியவில்லை.

ஒன்று.

சரக்கு விமானத்திலிருந்து சரக்கை வேகமாக இறக்கக் கையாளும் உத்தியை ஏன் பயணிகளுக்கும் உபயோகிக்கக் கூடாது? சரக்கு விமானத்தில் அதன் மூக்கு மேல் நோக்கித் திறந்து கொள்ள (சமயத்தில் அதன் அடி வயிறும் திறந்து கொள்ள), உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான பெட்டிகள் (கன்டெய்னர்) சுலபமாக கிரேன்களாலும், கன்டெய்னர்கள் இருக்கும் தண்டவாளங்களினாலும் இறக்கப் படுகிறது.

அதே போல விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கையில், விமான இருக்கைகளை ஒரு பெரிய அடித்தளத்தோடு வைத்து, அதில் முதலிலேயே பயணிகளையெல்லாம் உட்கார்த்தி, சீட் பெல்டால் கட்டி வைத்து விட்டு, விமானத்தின் மூக்கையோ அல்லது அடி வயிறையோ திறந்து, இந்த இருக்கைகளை அப்படியே தண்டாவாளத்தின் மூலமாக விமானத்தின் உள் ஏற்றி, விமானத் தளத்தோடு பூட்டு ஒன்று போட்டு இணத்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியமாக இருக்கும் அல்லவா? காத்து நிற்கும் நேரமும் குறைவு; விமானம் வந்து நின்றவுடன், உள்ளே இருப்பவர்கள் இருக்கைகளோடு மூக்கு வழியாக வெளியேறவும், ஏற வேண்டியவர்கள் வயிற்றின் வழியாக இருக்கைகளுடன் உள்ளே போகவும், பத்து நிமிடங்களில் விமானம் மறுமுறை பயணத்திற்கு ரெடி!

இரண்டு.

விமானப் பயணத்தில் பெட்டிகள் தொலைந்து போவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. மும்பாயில் மதிய உணவு அலுவலகங்களுக்கு எடுத்துப் போகும் 'டப்பா வாலா'க்கள் கலர் கலரான பெயிண்டால் எழுதும் குறிகளை வைத்து அடையாளம் கண்டு கொண்டு அருமையாக சாப்பாடை கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு (அமெரிக்கா) கூட்டி வந்து விமான நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்தலாம்! தொலையும் பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்.

இன்னமும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்: கூட்ட நேரத்தில் இரயிலில் உட்கார இடம் பிடிப்பது எப்படி, ஹைவேயில் எக்ஸிட் எடுக்க முடியாமல் வாகனங்கள் அதிகம் இருந்தால் சுலபமாக வெளியேருவது எப்படி, என்றெல்லாம். உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்தால் சொல்லுங்கள்.

15 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

நல்லாவே யோசிக்கறீங்க :-)


----அவர்களில் சிலரை இங்கு (அமெரிக்கா) கூட்டி வந்து விமான நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்தலாம்!---

வேலையில் அசிரத்தை?

----கூட்ட நேரத்தில் இரயிலில் உட்கார இடம் பிடிப்பது எப்படி, ----

* மயங்கி விழுவது போல் கண் சொருகுங்கள்
* பெரிய லக்கேஜ் வைத்துக் கொண்டு, அதன் மேலே உட்காருங்கள்
* கூட்டம் அதிகம் நெரித்தால், வாந்தி பாவனை நிச்சயம் மூச்சு விட இடம் வரவழைக்கும்

(தினசரி அதே இருவுள் வாயில் தான் என்றால், மும்பை வி.டி. (டெர்மினஸ்) சென்று இடம் பிடித்து ரவுண்ட் ட்ரிப் அடிக்க வேண்டியதுதான்.

----ஹைவேயில் எக்ஸிட் எடுக்க முடியாமல் வாகனங்கள் அதிகம் இருந்தால் சுலபமாக வெளியேருவது----

'மாமா'விடம் மாட்டிக் கொள்ளும் ஆபத்தில்லாமல் இதற்கு எதுவும் வழி தெரியல

வடுவூர் குமார் சொன்னது…

எனக்கென்னவோ முதல் யோஜனை ஒத்துவரும் போல் தோனுகிறது.ஆனால் உள்ளே போனமாதிரி பாதி பயணத்தில் வெளியே வந்தால் கூண்டோடு காலி என்ற பயமும் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் சொன்னது…

ரொம்பவே நல்லா இருக்கு/. அதுவும் என்னை மாதிரி முழங்கால் வலி பா(ர்)ட்டிகளுக்கு
இது காதில் தேன்.

அதே போல தூங்கும்போது எழுப்பி சாப்பிடறியானு
கேக்கற உதவி வேண்டாம் என்று சொல்ல ஏதாவது யோசனை சொல்லுங்கள்:-))

Thekkikattan|தெகா சொன்னது…

சரி, அப்படி ஃப்ளைட் வந்துச்சா, மூக்கு வழியா ஆட்கள இறக்கினோம, எல்லாரையும் பெல்ட் போட்டு சட்டுன்னு கொண்டு வந்து flight குள்ளே dock பண்ணமான்னு இருந்த. நம்ம உயிருக்கு யாரு கியாரண்டி கொடுக்கிரது, ஓய்!

நான் ஏற மாட்டேன்ப அப்பேர் பட்ட சடுதி வண்டியில.

இந்த போர்டிங் அப்புறம் அன்போர்டிங் டைமிங்கல தான், இஞ்சின் செக் பண்றது, ரீ-ஃபியோல் எல்லாம் பண்றாங்க இல்லையா?

நீங்க சொல்றபடி அதெல்லாம் யாருங்க பண்ணுவ? வானத்திலே இருக்கிங்க அப்படிங்கிறத மறந்துடப் புடாதுவோய்...

இதையும் படிச்சுப் பாருங்க... நான் சொன்னதெல்லாம் அவ்ளோ கவனமா பண்ணியும்... அறிவுக் கொளுந்துங்க என்னவெல்லாம் கோட்டை விட்டுறுக்குதுன்னு புரியும்...

http://thekkikattan.blogspot.com/2006/01/blog-post_06.html

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல நல்ல யோசனைகள் ரங்கா அண்ணா. :-)

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி பாலா.

//வேலையில் அசிரத்தை?// இதுவும் ஒரு முக்கியமான காரணம். பெட்டி மாற்றும் முறையே சரியில்லையோ என்றும் தோன்றுகிறது.

கூட்ட நேர இரயில் இடம் பிடிப்பதற்கு யோசனை அருமை. தினம் போவதென்றால் மாற்றி மாற்றி இவைகளை செய்யலாம். எனக்கு முதலில் தோன்றிய யோசனை (குளிக்காமல், பெர்ஃயூம் போடாமல் செல்லலாம்) அவ்வளவு சுத்தமானதல்ல என்று தோன்றியது; உங்களின் மூன்றாவது யோசனை கிட்டத்தட்ட அதுபோல இருந்தாலும், பெட்டர் தான்.

ஆமாம் - மாட்டிக்கொள்ளமல் செல்வதற்குத் தான் வழி கண்டுபிடிக்கணும்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

குமார்,

பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொல்கிற மாதிரி பாதி பயணத்திலே வெளியே வருமோ என்ற பயத்திற்கு, மொத்த அடித்தளத்தையும் ஒரு பெரிய ஏர் பேக் (காற்றுப் பை?) வைத்துக் கட்டி விட்டால் படகு மாதிரி மிதந்து போகலாம். நிலத்தில் விழும் போல் இருந்தால், ஒரு பெரிய பேராஷுட்டை ஐந்து ஐந்து வரிசைகளுக்கு மொத்தமாக கட்டி மிதக்க விடலாம். எப்படி?

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி துளசி கோபால். யோசனைக்கு காசு வருதோ இல்லையோ, சூப்பர் விளம்பரம் போல இருக்கு.

'காதலிக்க்க நேரமில்லை' திரைப்படத்தில் நாகேஷ் எஸ்டேட் மானேஜரைப் பார்த்து சொல்லும் வசனம்: 'இனிமே பாரு உன் பேர் பட்டி தொட்டியெல்லாம் கன்னா பின்னான்னு பரவப் போகுது' நினைப்புக்கு வருது....:-)

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

மனு,

இப்பல்லாம் இங்க தூங்கறவங்களை எழுப்பி கடலை எல்லாம் கொடுக்கறதில்லை. யாராவது புத்திசாலி 'தூங்கறவங்களை எழுப்பாட்ட கடலை மிச்சம்' அப்படின்னு சொல்லியிருக்கணும். விமான கம்பெனியெல்லாம் 'எரிபொருள் விலை அதிகம்; செலவைக் குறைக்கணும்' அப்படின்னு கிளம்பியிருக்காங்க.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

தெக்கிக்காட்டான்,

உங்க பதிவைப் போய் படித்து பின்னுட்டமும் போட்டிருக்கேன். இயல்பா எழுதியிருக்கீங்க.

பயணிகளை இறக்கி, ஏற்றும் முப்பது நிமிஷத்துக்குள்ள எல்லா செக்க்கப்பும் பண்ணுவதால் தான் தொல்லையே. இந்த மாதிரி இறக்க/ஏற்றத்தில் பண்ணாமல் ஒவ்வொரு நாள் கடைசி பயணம் முடிந்த பின் (மன்னார்குடியில் தனியார் நிறுவனங்கள் இரவில் தான் எல்லா செக்கப்பும் பண்ணுவாங்க; பகலில் பெட்ரோலும், பஞ்சரும் மட்டும் தான்), எல்லா செக்கப்பும் பண்ணால் பிரச்சனையில்லை.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன். பைசா வருமான்னுதான் தெரியல! :-)

ரங்கா.

Thekkikattan|தெகா சொன்னது…

ரங்கா,

அது எப்படிங்க, உயிர் விசயம் அதுவும் ஆகசாத்திலே வேற இருக்கிற விசயமும் கூட, இப்படி அசால்டா ராத்திரியிலே வைச்சு எல்லாத்தையும் சேர்த்து பண்ணிக்கட்டும் அப்படிங்கிறீங்க. இருந்தாலும் உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சம் ஜாஸ்திதான் :-)

காக்பிட் குள்ளே வேற என்னாமோ யாரோ நிறைய சுவிட்சுங்கள அள்ளி விட்டடெருஞ்ச மாதிரி கன்னா பின்னான்னு அம்புட்டு சுவிட்சுங்க இருக்கு... நான் வரலைப்பா உங்க விளையாட்டுக்கு... நீங்க ஒரு விமான கம்பெனி "மன்னார்குடி ஏர்லைன்ஸ்-ன்னு ஆரம்பிச்ச, நான் கண்டிப்ப ரெண்டு தடவை யோசிப்பேன் :-))

துளசி கோபால் சொன்னது…

மானு,
இந்த விமானச் சாப்பாடு...... ஐய்யோ எங்கெபோய்ச் சொல்லுவேன். அதுவும் லாங் ஃப்ளைட்டுக்கு
ரெண்டு, மூணுதடவை கொடுத்து ஆளை அடிச்சுப் போட்டுருவாங்க. அந்த தின்ன தட்டை எடுக்கவும்
இல்லாத நோணாவட்டம். அதுபாட்டுக்கு, வேணாமுன்னாலும் முன்னாலே உக்கார்ந்துகிட்டு இருக்கும் மூணு மணி நேரம்.
அதை எடுத்த கையோடு இன்னோரு தட்டு வந்துரும்(-:

அதுக்குத்தான் நான் மிந்தி இந்த Zip யோசனை வச்சிருந்தேன். மனுசங்களுக்கு
வயித்துலே Zip வச்சிட்டா, 'டக்'னு திறந்து உள்ளே கொட்டிக்கிட்டுப் போய்க்கிட்டே
இருக்கலாம்.

இப்பெல்லாம் எங்க உள்ளூர் விமானங்களில் தீனி எதுவும் இல்லை. நிம்மதி.

ரங்கா - Ranga சொன்னது…

தெக்கிக்காட்டான்,

புதுசாப் பண்ணுவதாலே கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கும்; ஒழுங்கா போய்ச் சேர்ந்துவிட்டால் (போக வேண்டிய ஊருக்குத்தான்; மேல இல்ல) பயம் போயிரும்.

நான் ஆரம்பிச்சா 'மன்னார் & கோ' தான் (கல்யாணப் பரிசு நினைப்புக்கு வருதா?).

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

துளசி,

zip வைக்கலாம் தான்; அப்புறம் வில்லனெல்லாம், மத்தவங்களைக் கட்டிப் போட்டு, zip பைத் திறந்து கண்டதையும் உள்ள போடர மாதிரி சினிமா எடுப்பாங்க. நாம தூங்கறச்சே zip க்கு பூட்டெல்லாம் போட வேண்டியிருக்கும்.

ரங்கா.