சனி, அக்டோபர் 22, 2005

வெண்டைக்காய்!

வழக்கம் போல் இந்த வாரமும் சனிக்கிழமை காலை காய்கறி வாங்க ஓக் மரச் சாலையில் உள்ள இந்தியக் கடைக்கு சென்றேன். கோவைக்காய்களைப் பொறுக்கி கொண்டிருக்கையில், அருகே மற்றொரு தேசி. செல் பேசியில் யாருடனோ உணர்ச்சிப்பூர்வமான உரையாடல். மறுபுறம் பேசுபவரின் குரல் கேட்காவிட்டாலும் இவர் குரல் அருகிலிருந்த எல்லோருக்கும் கேட்டது. உணர்ச்சிகரமாக எப்படி 'எந்த விஷயத்திற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும்' என்று போதித்துக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே வெண்டைக்காய்களின் முனைகளை ஒடித்து ஒடித்துப் பார்த்து, பொறுக்கி பையில் போட்டுக் கொண்டிருந்தார். எடுத்துக் கொண்ட காய்களை விட ஒடித்தவை அதிகம். முடிந்ததும் நகர்ந்து போகையில் கீழே கிடந்த ஒரு வெண்டைக்காய் மிதிபட்டது (அவர் பொறுக்குகையில் கீழே விழுந்ததுதான்). திட்டிக் கொண்டே சென்றார் - செல் பேசியின் எதிர் முனையில் இருந்தவருக்கு எப்படி 'காய்கறி வாங்குமிடம் சுத்தமாக இல்லை' என்ற விபரமான வர்ணனையோடு!

எனக்கு காய்கறி வாங்கும் போது உடைத்துப் போடப்பட்ட வெண்டைக்காய்களை எடுக்கப் பிடிக்காது! முக்கியமான காரணம் மற்றொருவர் நிராகரித்ததை ஏன் எடுக்க வேண்டும் என்பதுதான். அதைவிட அதிகமன கோபம் உடைப்பவர் மீது வரும். செல்பேசியில் போதித்துக் கொண்டிருந்த அவரை நிறுத்தி சூடாக ஏதாவது சொல்லலாம் என்று ஒரு நிமிட யோசனை. ஆனால் 'வேலியோடு போகிற ஓணான்' ஞாபகம் வந்தது - அதனால் வெண்டைக்காய் எடுக்காமல் மற்ற காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

ஓ....நீங்கள் எடிசனிலா வாழ்கிறீர்கள். நான் ஒருவருடம் (1997ல்) கால்டுவெல்லில் வாழ்ந்திருக்கிறேன். ஒரு நகைச்சுவை சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு நண்பர் எடிசனில் வசித்தவர் வேறு இடத்திற்கு மாறிப் போனார். ஒரு வாரம் கழித்து நான் புது இடம் எப்படி இருக்கிறது என்று விசாரித்ததற்கு அவர் சொன்ன பதில் 'எல்லாம் நல்லாதான் இருக்கு குமரன். ஆனா என்ன எந்தப் பக்கம் பார்த்தாலும் வெளிநாட்டுக்காரங்க தான்'. நான் உடனே சிரித்துவிட்டேன். 'ஐயா. நாம தான் இங்க வெளிநாட்டுகாரங்க. நீங்க அமெரிக்கா வந்துட்டு அவங்களையே வெளிநாட்டுக்காரங்கன்னு சொல்றீங்களே?' என்றவுடன் தான் அவருக்கு நான் ஏன் சிரிக்கிறேன் என்று புரிந்தது. வழிந்துகொண்டே 'ஆமாம் குமரன். எடிசனில் எங்கு பார்த்தாலும் நம்ம ஆளுங்க தான். அங்கே அமெரிக்கன்ஸ் தான் வெளிநாட்டுகாரங்க. அந்த நெனைப்பிலேயே சொல்லிட்டேன்' :-)

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க, நீங்க சொல்வது முழுக்க முழுக்க உண்மை. இங்கே இந்தியர்கள் அதிகம் தான் அதனால் வெளியூரில் இருப்பதாகவே தெரியாது. அதே சமயத்தில் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் ஒட்டுதலும் குறைவு. நான் ஏழு வருடம் பீனிக்ஸ்ஸில் இருக்கும் போது ஒரு 'தேசியை' பார்த்தால் கொஞ்சம் ஆம்வே (Amway)பற்றி பயந்தாலும், புன்னகையாவது செய்வோம்; பதில் புன்னகையும் கிடைக்கும். இங்கு அது இல்லை!