இந்தக் காப்பி வெறும் குடிக்கும் திரவமாக மட்டும் இல்லை. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது ஒரு சமூக கலாச்சார விஷயம். வீட்டுக்கு வருபவர்களுக்கு அனேகமாக முதல் உபசாரம் - 'காப்பி சாப்பிடுகிறீர்களா?' என்பது தான். கிராமங்களில் இன்னமும் நிறைய பேர் 'மோர் குடிக்கிறீகளா?' என்று கேட்டாலும், காப்பி குடிப்பதை விசாரிப்பவர்கள் அதிகம். காப்பி திரவமாதலால், 'குடி' என்கிற வார்த்தைதான் சரியானது. ஆனால் தமிழ்நாட்டில் காப்பிக்கு ஒரு முக்கியத்துவம் - அதனால் 'சாப்பிடு' என்கிற வார்த்தையை அதிகம் பேர் உபயோகிக்கிறார்கள். டீயையும் 'சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்பவர் அதிகம் இருப்பினும், விகிதாசாரத்தில் (என் கணக்குப் படி) காப்பியை விட அது குறைவுதான். சிறு வயதில் இந்த மாதிரி ஒரு உபசரிப்பில், மதுரையில் ஒரு வீட்டில், சுக்கு காப்பி குடித்திருக்கிறேன்; ஜிவ்வென்று மிக வித்தியாசமான ருசி.
கல்யாணப் பரிசு படத்தில் கூட, அக்கம் பக்கத்து பெண்களை மனைவி வீட்டிற்கு அழைத்தபோது டணால் தங்கவேலு இப்படித்தான் கூறுவார்: "காப்பி கீப்பி சாப்பிடறீங்களா? என்னத்துக்கு வீட்டில சாப்பிட்டு வந்திருப்பீங்க". தமிழ் திரைப்படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இரு கோடுகள் படக் கதையே ஜெமினி கணேசன் சௌகார் ஜானகியிடம் காப்பி கேட்டு வாங்காவிட்டால் வந்திருக்காது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடிய பாடலில் டி.ஏ. மதுரம் இந்த மாதிரி பதில் பாட்டு பாடுவார்:
"பட்டனத் தட்டி விட்டா
இரண்டு தட்டுல இட்டிலியும்,
காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்".
இது போல இன்னுமொரு பழைய பாடலில் (திரைப் படம் மறந்து விட்டது) இந்த வரிகள் வரும்:
“மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், மணியான மதறாசு மாப்பிள்ளை டோய்
காப்பியில பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய், கோப்பையில தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்"
இங்கே அமெரிக்காவில் பெரும்பான்மையானா வீட்டிலே உள்ள ஆண்களுக்கு இவ்வரிகள் பொருந்தும். இன்னும் எத்தனையோ படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.
காப்பி சம்பந்தப் பட்ட விளம்பரங்களில் மனதிற்கு மிகவும் பிடித்து, நினைவில் இன்னமும் பசுமையாக இருப்பது, உசிலை மணியின் "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு" நரசுஸ் காப்பிதான். இதைத் தவிர, 'பில்டர் காப்பியா?" என்று வியந்து கேட்கும் அம்மணியின் முகபாவம் (ப்ரூ), அரவிந்த்சாமி வரும் காப்பி விளம்பரம் (ப்ரூ?) இதெல்லாமும் நினைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு முறை தீபாவளி சமயத்தில் (எண்பதுகளில்), ஒரு பிரபலமான காப்பிக் கடையில், ஒவ்வொரு முறை காப்பி வாங்கியவுடன் ஒரு கூப்பன் தந்து (எடைக்குத் தகுந்த மாதிரி), ஒரு குறிப்பிட்ட அளவு கூப்பன் சேர்ந்தவுடன் 'எவர்சில்வர் டம்ளர் டபரா தருகிறோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்த, விடுமுறைக்காக கும்பகோணம் சென்றிருந்த நாங்கள் காப்பிப் பொடி வாங்கி, கூப்பனை உறவினரிடம் டம்ளருக்காகக் கொடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
காப்பி முதன் முறையாக எப்போது மனிதர்களால் அருந்தப் பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த என் பாட்டி சிறுமியாக இருக்கும் போது அவர் தாத்தவே காப்பி குடித்திருக்கிறார் என்பது அவர் (பாட்டி) சொல்லித் தெரியும். சூடான காப்பி டம்ளரை, தன் அங்கவஸ்திரத்தால் (என் பாட்டியின் தாத்தா) பிடித்துக் கொண்டு சாப்பிடுவாராம். எனக்குத் தெரிந்த வரையில் வேறு எந்த ஒரு தாவரத்தையும் இப்படி சாப்பிடுவதில்லை. ஒரு பழத்தின் கொட்டையை எடுத்து, உலர்த்தி, வறுத்து, அரைத்து, அதில் வென்னீரை ஊற்றி, பின் அந்த கொட்டையின் பொடியை விலக்கி, வெறும் தண்ணீரை, அப்படியோ, அல்லது பால், சக்கரை கலந்தோ சாப்பிடுவது என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்று. மற்ற கொட்டைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் (உ.ம். பலாக் கொட்டை, மாங்கொட்டை) இது போன்று ஒரு விஸ்தாரமான முறையில் எந்தத் தாவரத்தையும் மனிதன் உண்பதாகத் தெரியவில்லை. டிகாஷன் போட்ட பொடித் தூளை, மற்ற தாவரத்துக்கு உரமாகவும், அல்லது பாத்திரம் தேய்ககவும் இப்போதும் நிறையப் பேர் உபயோகப் படுத்துகிறார்கள்.
இந்த காப்பி தாவரத்தில் எக்கச்சக்க வகைகள் இருந்தாலும், மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் - அந்தப் பயிர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து. 'அராபிகா' என்னும் பிரிவு அதன் மணத்துக்காக உயர்ந்தது என்று கூறுவார்கள். கடல் மட்டத்திற்கு 600 - 2000 மீட்டர் உயரத்தில் வளரும். பதினைந்திலிருந்து இருபது டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வளரும். 'ரொபஸ்டா' எனப்படும் பிரிவு கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை வளரும். 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமான வெப்பம் தாங்கும். இந்த்ப் பிரிவு தான் இன்ஸ்டன்ட் பொடி தயாரிக்க மிகவும் உகந்தது. மூன்றாம் பிரிவில் 'லைபேரிகா' எனப்படும் மிகக் கசப்பான வகை; மழை வெப்பம், இரண்டும் தாங்கும். காப்பி வளரும் நாடுகளில் பிரேசில் தான் முதலிடம் என்று நினைவு.
இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. 1906ல் ஜ்யார்ஜ் சி. வாஷிங்டன் தான் கண்டு பிடித்தார் என்று சிலரும், 1901ல் சர்டோரி கடோ என்னும் ஜப்பானிய விஞ்ஞானி சிகாகோவில் இருக்கையில் கண்டு பிடித்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி என்று எனக்குத் தெரியவில்லை; யாராயிருந்தாலும், அவர்களுக்கு என் நன்றி!
இந்த துக்கடா விஷயங்களே பதிவைப் பெரிதாக்கி விட்டதால், அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்களைத் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
8 கருத்துகள்:
இந்த முறை நீங்கள் பதிவு போட்டவுடன் படித்துவிட்டேன் அண்ணா. :-)
எனக்கும் நீங்கள் சொன்ன விளம்பரங்கள் எல்லாம் நினைவில் நன்றாக இருக்கிறது.
சின்ன வயதில் இருந்து நானும் காப்பி சாப்பிடவில்லை. நல்ல வேளையாக என் மனைவியும் காப்பி சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவராக அமைந்தார். அதனால் எங்கள் வீட்டுக்கு நீங்கள் வரும் போது நீங்களே காப்பியும் கொண்டுவந்துவிடுங்கள். :-)
அப்பாடி இவ்வளவு விஷயமா காப்பியில்.
நீங்கள் சொல்லும் படம் ஜெமினி-கணேசன் படம் என்று நினைக்கிறேன்
'சுண்ணாம்பைக் குழைச்சுப் பூசுறா சுந்தரி டோய்' என்று கூட வரும்.
அரவிந்தசாமி முதலாக மாடல் பண்ணினது லியொ காப்பிக்காக.
இப்போ நம்ம ஊரில் கும்பகோணம் டிகிரீ காப்பி மணம் குணத்தோடு வந்து இருக்கு.
குமரன்,
இந்த பதிவை ஆரம்பிக்கும் போதே எடுத்த ஒரு முடிவு, காப்பி குடிப்பதை விட வேண்டும் என்பதுதான். உங்கள் வீட்டுக்கு வரும் போது அனேகமாக இந்தப் பழக்கத்தை விட்டு இருப்பேன்.
ரங்கா.
வள்ளி,
எழுத ஆரம்பிக்கும் போது தெரியாது இது இத்தனை பெரிய தொடராக வரும் என்று! ஆமாம் - நீங்கள் சொன்ன வரியும் உண்டு அதில் (சோப்பால மூஞ்சி தேக்கிற சுந்தரிடோய், சுண்ணாம்பைக் குழச்சுப் பூசுற சுந்தரிடோய்).
எழுதும் போதே சந்தேகம் - ப்ரூ இல்லையோ என்று - அதனால் தான் அந்தக் கேள்விக்குறி. நல்ல வேளை சொன்னீர்கள் - இல்லையென்றால், வார இறுது முழுதும் பல்லிடுக்கில் மாட்டிய தேங்காய் போல இது நினைவில் இருக்கும்.
ஒரு கேள்வி - நீங்கள் ஆழ்வார்ப்பேட்டை லஸ் சர்ச் ரோடில் வசிப்பவரா?
ரங்கா.
ஆமாம். அதே அதே சபாபதே.
ரொம்ப சந்தோஷமா இருக்கு ரங்கா.
ப்ளாக்கிங் செய்த இரண்டாவது உதவி இது.
இத்தனை அழகா எழுதராரேனு பார்த்தா நம்ம ஆளு.!!!
பாங்க் ஹனுமார் கிட்ட சொல்லரேன்.
பாண்டி பஸார் லேயும் ஒரு காபிப் பொடிக் கடை இருக்கு.
வாசனை புடிச்சுக்கிட்டே அங்கெ போய் சேர்ந்திருக்கேன்:-))))
ரொம்ப நன்றிங்க - அனுமார்கிட்ட சொன்னதுக்கு. :-) யாருக்குத் தெரியும், இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று; எல்லாம் அவர் செயல்தான்.
ரங்கா.
துளசி,
நீங்க சொன்னா மாதிரி காப்பிக் கடைக்கு வாசனை புடிச்சி போறா மாதிரி இருந்தாத்தான் சுகம். உள்ள இருக்கிற சரக்கு சரிதான்னு தெரியும். மன்னார்குடியில ஸ்கூலத் தாண்டறபோதே சுதர்ஸன் காப்பி வாசனை வரும். அதே போல மயிலாப்பூர்லயும் கோயில் தாண்டி வரும்போதே, காப்பி வாசனை வரும்.
ரங்கா.
கருத்துரையிடுக