சனி, ஆகஸ்ட் 26, 2006

காப்பி – 4

ஓட்டல்களில் காப்பி என்றவுடன் நினைவுக்கு வருவது அளவுதான்! எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், பயணங்கள் அதிகமானதால் ஓட்டல்களில் சாப்பிடுவது அதிகமானது. தமிழ்நாட்டில் அதிகமான ஓட்டல்களில் உள்ள டம்ளர், டபரா மிக மிக சின்னது. சொல்லப் போனால் குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டில் இருக்கும் அளவுதான். போதாக்குறைக்கு, அந்த டம்ளரிலும், "இந்த டம்ளர் XXX ஓட்டலிலிருந்து திருடப்பட்டது" என்று பொறித்திருப்பார்கள். ஒரு முறை வேலூரில் சாப்பிட்ட ஒட்டலில் இருந்த டம்ளரில் வேறு ஒரு ஓட்டல் பெயர் இருந்தது. விசாரித்ததில் பில் கொண்டுவந்த பணியாளர், முதலில் அந்தப் பெயர் தான் இருந்ததாகவும், பின் உரிமையாளர் புதுப் பெயர் மாற்றியதால், வெளியே போர்டில் வேறு பெயரும், டம்ளரில் வேறு பெயரும் இருப்பதாகவும் விளக்கினார்.

சரி அளவு தான் சின்னதாக இருக்கிறதே என்று பார்த்தால், காப்பியை அவர்கள் தரும் முறையும் வித்தியாசமானது. முதலில் டம்ளர் நிறைய காப்பியை ஊற்றி, பின் டபராவை கவிழ்த்து டம்ளரை மூடி, மொத்தத்தையும் தலை கீழாக கவிழ்துக் கொண்டு வருவார்கள். நம்மிடம் வந்து இருப்பது ஒரு டபரா, அதில் தலைகீழாக ஒரு டம்ளர்; டம்ளருக்குள்ளே படு சூடாக காப்பி! எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. டம்ளர் முழுதும் காப்பியிருப்பதால் வெளியே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக விசையோடு தான் டம்ளரை எடுக்க வேண்டும் (வெறுப்பேற்றும் பௌதீக விதி). சூடு, வேகமாய் இழுப்பதால் காப்பி நம் சட்டை/வேட்டியில் கொட்டும் அபாயம், எல்லாம் தாண்டி எடுத்தால், சக்கரையை கரைப்பதற்காகவும், சூட்டைக் குறைப்பதற்காகவும், ஆற்ற வேண்டியிருக்கும். இந்த வேலையைகள் அனைத்தையும் செய்து முடித்து சாப்பிட ஆரம்பித்தால், இரண்டு வாயோடு காப்பி காலி! இந்த வேலைக் களைப்புக்கே இன்னுமொரு காப்பி சாப்பிட வேண்டும் போல் இருக்கும்.

அமெரிக்காவில் காப்பி சூடாக இருக்கிறது என்று சொல்லவில்லை; கப்பில் எழுதவில்லை என்று காரணம் காட்டி, வழக்குத் தொடுத்து, காசு பண்ணிவிட்டார்கள்! நம்மூரில் சூடான காப்பியைக் கொட்டிக் கொண்டால், எல்லோரும் நக்கலாச் சிரிப்பார்கள். அங்கே டம்ளரில் எந்த ஓட்டலில் திருடப்பட்டது என்று எழுதினால், இங்கே ‘குடிக்கும் பானம் சூடாக இருக்கும்; கொட்டிக் கொண்டால் வலிக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்க சட்டங்கள் போல இந்தியாவிலும் வந்துவிட்டால், டம்ளரில் இந்த மாதிரி வாக்கியங்களையும் பார்க்க நேரிடலாம்: "எச்சரிக்கை: இந்த டம்ளரை வாயில் வைத்துக் குடித்தால், வாயில் எந்த பாகமும் அறுபட்டு ரத்தம் வரலாம்". காரணம் இந்த எவர்சில்வர் டம்ளர்களில் விளிபுகள் மிகவும் கூரானவை, சமயத்தில் வெட்டுப் பட்டும் இருக்கும். உதடோ, நாக்கோ அறுபடும் சாத்தியக்கூறு உண்டு.

இரயில் பயணத்தில் நிலையத்தில் கிடைக்கும் காப்பி ஒரு தனி வகை. இங்கு காப்பி மட்டும் அனேகமாக பீங்கான் கோப்பையில் தான் கிடைக்கும். ஆனால் டீ கண்ணாடி டம்ளரில் தான். இரயில் நிலையம் ஒரு முக்கியமான பெரிய ஜங்க்ஷனாக இருந்து விட்டால், காப்பி டிகாஷன் முறையிலும், இன்ஸ்டன்ட் முறையிலும் கிடைக்கும். ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிருந்தோ, அல்லது ஒரு பெரிய கெட்டிலிலிருந்தோ கப்பில் ஊற்றிக் கொடுப்பார்கள். ஒரு வசதி என்னவென்றால், இதற்காக இரயிலிலிருந்து கீழே இறங்க வேண்டாம். இந்திய இரயில்வேயில் (ஏ சி பெட்டி தவிர), ஜன்னலின் இடையே இறுக்கும் குறுக்குக் கம்பிக்குள் இந்த கப்பும், சாசரும் (பீங்கான் தட்டு) வந்து விடும். இரயில் கிளம்புவதற்கும் முன் குடித்து கப்பை திரும்பத் தருவதற்கு வசதியாக, காப்பி அதிக சூடாக இருக்காது; தவிர சாசரில் காப்பியை ஊற்றி 'சர்'ரென்று உறிஞ்சிக் குடித்துவிடலாம். சமயத்தில் வண்டி கிளம்பிவிட்டால், பெட்டியோடு கூட ஓடி வந்து கப்பைப் பெற்றுக் கொள்ளும் புண்ணியவான்களும் உண்டு. இந்த காப்பியில் ஒரு விதமான கரி வாசனை வரும் - நான் பள்ளியில் படிக்கும் போது (பள்ளியில் படிக்கும் போது பயணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான்; வடமாநிலங்களில் அமைப்பு வேறு - அது பற்றி பின்னொரு பதிவில்) குறைந்த அளவு டீசல் வண்டிகள் தான்; பெரும்பான்மையானவை கரி எஞ்ஜின்கள். அது ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டில் குடும்பத்தோடு பயணம் செய்யும் போது, அப்பா அனேகமாக கீழே இறங்கிப் போய், ஒரு கூஜாவில் ஐந்து கோப்பை வாங்கி வருவார்.

பஸ் பயணங்களில், முக்கியமாக தொலைதூர, இரவுப் பயணங்களில், வழியில் இருக்கும் தெருவோர டீக் கடைகளில் இருக்கும் காப்பி அனேகமாக 'இன்ஸ்டன்ட்' வகை. அனேகம் பேர் தேனீர் தான் சாப்பிடுவதால், காப்பி டிகாஷன் போட்டு சரிப்படாது என்பதால் எளிதான வழியில் காப்பி. பெரும்பான்மையான கடைகளில் 'புரூ' தான். டீயை ஆற்றும் அதே தகர டப்பாவில் மேலிருந்து கீழே வேகமாக ஆற்றி, நுரையோடு தருவார்கள். டீயோ, காப்பியோ, இந்த ஆற்றும் முறையே அலாதியானது. புவியீர்ப்பு விசையின் தாக்கத்தை மிக அனாயாசமாக சமாளித்து, ஒரு சிறிய இடத்துக்குள் படு சூடான திரவத்தை ஊற்றுவது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இந்த மாதிரி இரவுக் கடைகள் அனேகமாக பஸ் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் சலுகைகள் தருவதால், அவசரப் பட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. கடைக்காரரே சமயத்தில் நமக்கு வண்டி கிளம்புவதை அறிவிப்பதோடு, டிரைவருக்கும் ஒரு 'ரெகமண்டேஷன்' தருவார், கொஞ்சம் தாமதமாகக் கிளம்ப! இந்தக் காப்பியில் மிக மிக லேசான டீசல் வாசனை - இன்ஸ்டன்ட் என்பதால் அதிகமாகத் தெரியாது. பாலும் தண்ணியாக இருப்பதால், கொஞ்சம் டிகாஷன் சாப்பிடுவது போலத் தோன்றும்.

அடுத்த பதிவில் கல்யாணக் காப்பி பற்றியும், காப்பி குடிக்கும் முறையில் நான் பார்த்த விஷயங்களையும் தருகிறேன்.

முந்தைய பதிவுகள்
காப்பி – 3
காப்பி – 2
காப்பி – 1

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காப்பி பற்றிய உங்கள் பதிவை மிகவும் இரசித்துக் குடித்தேன்...சாரி! படித்தேன். உண்மையில் காப்பிரைட் வாங்க வேண்டிய பதிவு! நன்றி.

ஜகன்.

ரங்கா - Ranga சொன்னது…

பாராட்டுக்கு நன்றி ஜகன்.

அடுத்த வேளைக்கும் (பதிவுக்கும்) வந்துடுங்க.

ரங்கா.

துளசி கோபால் சொன்னது…

சில ஓட்டல்களில் பெரிய டம்ளரா இருக்கும். அது நிறைய காப்பியும் இருக்கும்.
ஆனால் குடிச்சால் ரெண்டே வாய்தான் இருக்கும். அது எப்படி?

எல்லாம் டபுள் லேயர் டம்ளர்கள்தான் :-)))))

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாங்க - டபுள் லேயர், அதோட வேகமா ஆற்றி சமயத்தில் பாதி டம்ளருக்கு நுரைதான் இருக்கும்.

ரங்கா.

கப்பி | Kappi சொன்னது…

// இரண்டு வாயோடு காப்பி காலி! //

ஆமாங்க...இந்த மாதிரி நேரத்துல செம கடுப்பாகிடும்..காபி குடிச்ச திருப்தியே இருக்காது :(

ரங்கா - Ranga சொன்னது…

ஆமாம் கப்பி சார். என்னோட காலேஜ்ல படிச்ச ஒரு நண்பன் கிண்டலா ஒரு தடவை இரண்டு காப்பி தனக்கு மட்டும் ஆர்டர் பண்ணான். அது நல்ல யோசனைதான்னு நினைக்கிறேன்.

ரங்கா.