என்னுடைய ஆறாவது/ஏழாவது வகுப்புகள் பட்டுக்கோட்டையில், எட்டாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மன்னார்குடியில், வழக்கம் போல் அப்பாவின் உத்தியோக மாற்றம் காரணமாக. இந்த இரண்டு இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காப்பி முறை, ஆனால் சென்னையில் இருந்த முறையிலிருந்து பெரிய மாற்றம்.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற இடங்களில் பால் வருவது அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் சொசைட்டிகள் மூலமாக. சைக்கிள் காரியரில் ஒரு பெரிய பாத்திரத்தில் (குழாய் வைத்தது), காலையிலும், மாலையிலும் எடுத்து வருவார்கள். ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு பெரிய மணி, சைக்கிள் பாரில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். காலால் பெடலை மிதித்துக் கொண்டே தெரு முனை வரும் போது, கால் முட்டியாலேயே அந்த மணியை அடிப்பார்கள். மணி சத்தத்தை வைத்துக் கொண்டே,‘எடமேலையூர் பால்’, ‘மதுக்கூர் பால்’, ‘சொசைட்டி பால்’ (மன்னார்குடி) என்றேல்லாம் சொல்லுவோம். இதில் மதுக்கூர் பாலும், எடமேலையூர் பாலும் பதப்படுத்தப் படாதவை - அருமையான வாசனை.
இந்த காரியரிலும் இரண்டு வகை. சாதாரண அளவுள்ள காரியரில் ஒரு பாத்திரம் தான் வரும். மன்னார்குடி சொசைட்டி பால் இந்த வகையைச் சார்ந்தது. மதுக்கூரிலிருந்து வரும் பால் காரியர்களில் சில சற்று வித்தியாசமானவை. இந்த சைக்கிள்களில் பின்புறக் காரியர் கொஞ்சம் பெரிசு (ஓகே சோப் விளம்பரம் போல: உண்மையிலேயே ரொம்பப் பெரிசு). சைக்கிளிலில் இருக்கும் இரும்புச்சட்டம் போதாதென்று, சில கட்டைகளையும் முட்டுக் கொடுத்து வைக்கப் பட்டிருக்கும். இதில் இரண்டு பால் பாத்திரங்கள் - ஒன்று வழக்கமான அளவு, மற்றொன்று கொஞ்சம் சிறிசு. அனேமாக எருமைப் பால் தான் பெரிய காரியரில் இருக்கும். பதப் படுத்தப் பட்டதென்றால் எருமைப் பாலும், பசும் பாலும் சேர்ந்த கலவை தான். இந்த சின்னப் பாத்திரத்தில் ஸ்பெஷல் பால் (பசும் பால்); சற்று விலையும் அதிகம். பால் வினியோகம் செய்து வரும் இவர்களிடம் சற்று பேச்சுக் கொடுத்தால் விசித்திரமான விஷயங்களும், சமயத்தில் வம்புகளும் கிடைக்கும்.
மதுக்கூரிலிருந்து மன்னார்குடி வரும் சாலை தார் ரோடு - ஆனால் ரொம்பவும் அகலமானது அல்ல. தார் ரோடுக்கு இரு புறமும் வெறும் மணலும், தூசியும் தான், எப்போதாவது கடினமான தரை. இரு பேருந்துகள் இந்தச் சாலையில் எதிரெதிராக வந்து விட்டால் எழுதாத சட்டம், ஒரு பக்க சக்கரங்கள் தார் ரோடிலும் மற்றொரு பக்க சக்கரங்கள் மணலிலும் தான் போக வேண்டும். இந்த எட்டு, பத்து கிலோமிட்டர் பயத்தில் பத்து முறையாவது, இந்த பால் சைக்கிள்கள் மணலில் இறங்க வேண்டியிருக்கும். சைக்கிளிலிருந்து இறங்கி தள்ளிக் கொண்டு, பேருந்து போன பின் மறுபடி உதைத்து ஏறி வர வேண்டியது தான். நிச்சயமாக எளிதானது இல்லை. அறுவடைக் காலத்தில், நெற்போர் அடிக்க அனேகமாக இந்த தார் சாலைகளைத்தான் உபயோகிப்பார்கள். காய்ந்த நெற்பயிரின் மேல் சைக்கிளை ஒட்டி வருவது, ஓட்டுபவருக்கு வெறுப்பேற்றும் விஷயம். கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் ஒரு பெரிய பித்தளை பாத்திரத்தில் பாலை எடுத்து வைத்துக் கொண்டு சைக்கிளை இப்படி லாவகமாக ஓட்டி வந்த அந்த பெரும் உழைப்பாளிகளை இப்போது நினைத்தாலும் மனதில் ஒரு மரியாதை வருகிறது!
நிறைய வீடுகளில் காப்பிக் கொட்டை வாங்கி அரைக்கும் வழக்கம் இருந்தது. பொடியாகவே கடையில் வாங்கி வருவது சுலபமானதாக இருந்ததாலும், சென்னையில் நான்கு ஆண்டுகள் பொடி வாங்கிப் பழகிவிட்டதாலும், எங்கள் வீட்டில் அரைப்பது பற்றி யோசிக்கக் கூட இல்லை. மன்னார்குடியில் நிறைய பிரபலமான காப்பிக் கடைகள் இருந்தாலும், தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு எதிரில் 'சுதர்ஸன் காபி' கடையில் தான் பொடி வாங்குவோம். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் நிரந்தர வாடிக்கைக்காரர்களுக்கு மட்டும் 'டெய்லி ஷீட்' காலண்டர் கிடைக்கும். 'ப்ளாண்டேஷன் ஏ', 'பீப்ரி' என்று இரண்டு வகைக் கொட்டைகள். தனியாகக் கேட்டு சிக்கரி கலந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் சிக்கரி கிடையாது; எப்போதும் பீப்ரி கொட்டைகள் தான். இந்தக் காப்பிக்கும் மணம் உண்டு, கொஞ்சம் வித்தியாசமானது. பால் வாசனை தூக்கலாக தெரியும். அடுப்பு குமுட்டி இல்லை - அப்போது பிரபலமான 'நூதன்' ஸ்டவ்! எங்கள் உறவினர் டில்லி போய் வந்த போது வாங்கி வந்தது. கிரசின் வாசனை எல்லாம் இல்லை - வெறும் காப்பியும் பாலும் தான்; ஆகையால் போதை இல்லை! காப்பி பில்டரும் பித்தளையில் இருந்து எவர்சில்வருக்கு மொத்தமாக மாறியது; பித்தளை பில்டர் பரண் ஏறியது.
அடுத்த பதிவில் பயணங்களின் போது இரயில் நிலையத்தில், தெருவோரக் கடைகளில், ஒட்டல்களில் குடித்த காப்பியைப் பற்றி பதிகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி 1
காப்பி 2
6 கருத்துகள்:
அடுக்களைக் கதவோட பின்னாலே ஸ்க்ரூவச்சு இணைக்கப்பட்ட ச்சின்ன காபிக் கொட்டை
அரைக்கும் கைமிஷின் உங்க வீட்டில் வச்சுக்கலையா?
எங்க பாட்டி வீட்டில்தான் வச்சிருந்தாங்க. அங்கே போறப்பெல்லாம் நாந்தான் அரைச்சுக் கொடுப்பேன்.
அப்ப நாங்க? ச்சின்னவயசுலே வருஷாவருஷம் டேரா தூக்குனதாலே சரிப்பட்டு வரலை.
ஆனா இப்ப ஒரு எலெக்ட்ரிக் காஃபி க்ரைண்டர்( சின்னதா) வச்சிருக்கேன்.
துளசி,
அந்த மிஷின் தான் இராமநாதபுரத்தில அடுக்களையில இருந்தது - வீட்டு சுவற்றில, மரத்தட்டுகளை வச்சு ஒரு கப்போர்டு. அதுல ஒரு தட்டுல இந்த மிஷினை, கீழ உள்ள திருகால முடுக்கி வைத்திருந்தோம். சென்னைக்கு மாற்றிப் போனதுல இந்த அரவை விஷயம் விட்டுப் போயிடுச்சு.
ரங்கா.
அது சுந்தரம் காபி அல்ல - சுதர்ஸன் காபி. இன்னும் இருக்கிறது.
மேலும் பால் கூப்பன் வாங்க க்யூவில் நிற்பது, கார்டு சிஸ்டம், கூப்பன் சிஸ்டம்,
தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் பால்காரரை எதிர்பார்த்து சில சமயம் அவர் வராமல் அல்லது முன் பின்னாக ஏற்படும் டென்ஷன், போன்றவற்றையும் தொட்டிருக்கலாம். மற்றபடி தொடர் அருமையாக செல்கிறது. தொடரவும். நியுஜெர்சி காப்பி, அரிசோனா காப்பி எல்லாமும் வரும் என எதிர்பார்க்கிறேன்.
அலெக்ஸ்,
பெயரில் இருந்த தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. பதிவிலே திருத்தம் செய்து மறுபதிவு செய்துவிட்டேன். இந்தப் பகுதியை எழுதும் போது, பள்ளியிலே, 'ஜன கன மன' ராகத்தில் பாடும் ஒரு நகைச்சுவைப் பாட்டைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே எழுதியதில், அதில் வரும் சுந்தரம் காபியை, சுதர்ஸன் காபிக்கு பதிலாக எழுதிவிட்டேன்!
பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல, கார்டு, கூப்பன், மற்றும் தெரு முனையில் (மேற்கு) போய் நிற்பது, கூட்டத்தை முறியடிக்க பால் காரர் அடுத்த தெரு வழியாக கிழக்கு முனை மூலமாக வருவது, இன்னும் எத்தனையோ நினைவுக்கு வந்தது. பதிவு ரொம்ப பெரிதாகி விட்டதால் அவற்றையெல்லாம் விட்டு விட்டேன்.
இந்தக் காப்பி தொடரில், முதலில் செய்முறை, சுவை பற்றி சொல்லிவிட்டு, பின் காப்பித் தொழிற்சாலையில் என் அனுபவத்தையும், நான் பழகிய மனிதர்களிடையே, காப்பியினால் வரும் மூடு மாற்றத்தையும் எழுத எண்ணம். இந்த பால் வினியோகத்தினால் வந்த சண்டை சச்சரவுகளை, மூடு பற்றி எழுதும் போது தொடலாம் என்று நினைக்கிறேன்.
ரங்கா.
ரங்கா அண்ணா. ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இவ்வளவு தூரம் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு நினைவில் இருப்பவைகளை அழகாகத் தொகுத்து எழுதும் உங்கள் திறமை மெச்சத்தகுந்தது. என்னால் அப்படி எழுத முடியுமா என்ற மலைப்பு எப்போதும் எனக்கு உண்டு.
பாராட்டுக்கு நன்றி குமரன். இது வரைக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் பெரிசா எழுதலை நான் ;-). உங்களுக்கு இதை விட அதிகமாக் உணர்ந்து எழுத முடியும் என்பது எனக்குத் தெரியும்.
ரங்கா.
கருத்துரையிடுக