ஏனோ தெரியவில்லை இந்த வாரம் முழுதும் ஒரே கையரிப்பு - ஏதாவது எழுத! இரண்டு நாட்கள் முன்பு வழக்கம் போல் இல்லாமல் காரில் அலுவலகம் வரும்போது ஈ.எஸ்.பி.என். ரேடியோ கேட்டுக்கொண்டு வந்தேன். எனக்கு அமெரிக்க கால்பந்தாட்டம் தெரியாது; பார்க்கவும் விருப்பமில்லை. வானொலியில் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு முக்கியமான ஆட்டத்தில் ஒரு அணியின் முக்கியமான விளையாட்டுவீரர் காயமடைந்து ஆட்டத்திலிருந்து வெளியேற (ஸ்ரெச்சரில்) அந்த அணி தோற்றது.
நிகழ்ச்சியில் வர்ணனையாளர் கேட்ட கேள்வி: அடிபட்ட அந்த வீரர் வெளியேறும் போது, எதிர் அணியின் ஆட்டக்காரர்கள், ரசிகர்கள் 'நடந்தது நம் நன்மைக்கே; இனி ஆட்டத்தில் வெற்றி நிச்சயம்' என்று நினைத்தால் அவர்கள் எல்லோரும் கெட்ட மனிதர்களா?
எனக்கு சிறு வயதில் தெருவில் கிரிக்கெட் ஆடும் போது எதிர் அணியில் இருப்பவரை அவுட்டாக்க செய்த கோமாளித்தனமான செய்கைகள் (மூடநம்பிக்கை) ஞாபகம் வந்தது. அதை விட இது தீவிரமானது!
நிகழ்ச்சி தொகுப்பாளர் மேலும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கேள்விகள்:
அடிபட்டு விழுந்ததும் 'அப்பாடா! இனி நம்மணி வெற்றி பெறலாம்' என்று நினைப்பதற்கும், ஆட்டத்திற்கு முதல்நாள் இந்த மாதிரி எதிர் அணியில் இருப்பவர் காயம் பட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்பதற்கும் (ஏன் சில சமயம் பிராத்தனைகள் கூட) வித்தியாசம் உண்டா?
வேண்டாதவருக்கு தீங்கு வந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டால் கெட்ட மனிதனா? அல்லது மனத்தால் மற்றொருவருக்கு தீங்கு வந்தால் நல்லது என்று நினைத்தால், கெட்ட மனிதனா?
இப்படியெல்லாம் நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட, வானொலி ரசிகர்கள் தொலைபேசியிலும், மின் மடலிலும் தங்கள் கருத்துகளை சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட கருத்துகளிலிருந்து குறிப்பிடும்படியான சில கருத்துகள் :
1. நான் எதிர் அணியின் முக்கிய ஆட்டக்காரர் ஆட முடியாமற் போனதற்கு சந்தோஷப் படவில்லை என்றால் என் அணிக்கு ஒரு நல்ல ஆதரவாளனே அல்ல.
2. எதிர் அணியின் ஆட்டக்காரருக்கு அடி பட வேண்டும் என்று பிரார்த்திப்பது தவறு; ஆனால் அடி பட்டு விளையாட முடியாமல் போனால் அதற்கு சந்தோஷப் படுவது தவறில்லை.
3. ஒருவர் அடிபட்டதற்கு சந்தொஷப்பட்டால் அவன் நல்ல மனிதன் அல்ல.
4. அடிபடுவதற்காக பிராத்தனை செய்வதற்கும், அடிபட்டபின் சந்தோஷப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை; அடிப்படையில் அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல.
5. மறுமுறை விளையாடவே முடியாதவாறு அடிபட்டால், அதற்கு மகிழக்கூடாது; ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்கள் ஆட முடியாது, அதனால் நம் அணிக்கு நன்மை என்றால் மகிழ்வதில் தவறில்லை.
6. தமக்கு வேண்டாதவர் அடி பட்டால் எவராயிருந்தாலும் மகிழ்ந்து தான் போவார்; அப்படி மகிழமாட்டோம் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள்.
7. தமக்கு வேண்டாதவர் அடி பட வேண்டும் என்று நினைப்பதும், அடிபட்டால் மகிழ்ந்து போவது இயற்கை; சரியா தவறா என்பது பற்றி தெரியாது. உலகத்தில் பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள். இயற்கையே இப்படித்தான் என்றால் அது சரி என்று தான் நினைக்கிறேன்.
இதற்கு முந்திய பதிவில் நான் எழுதியது வார்த்தைகளினால் சொல்வதும், அதன் விளைவுகளும். இது ஒருவரின் நினைப்பு பற்றியது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? எனக்கு மேலே சொன்ன ஏழாவது கருத்தோடுதான் அதிகம் ஒத்துப் போகிறது.
9 கருத்துகள்:
ரங்கா அண்ணா. தினமலரில் உங்கள் பதிவு பற்றி இரண்டாவது முறை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
http://www.dinamalar.com/2006Feb24/flash.asp
தங்கள் பதிவினைப் பற்றி இன்றைய தினமலர் நாளிதழில் படித்தேன். எனது
கருத்தைக் கூற விரும்புகிறேன். ஒருவரது எண்ணம், சொல் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. எண்ணமாக இருக்கும் வரை அது அவரை மட்டுமே பாதிக்கும். எண்ணம் சொல்லாக வெளிப்படும் போது மற்றவர்களையும் பாதிக்கும். உண்மையைவிட பெரும்பான்மை நன்மையே முக்கியம். ஆனால் மற்றவருக்கு தீமை வரும் என்று தெரிந்தும் பொய் சொல்வது குற்றமாகவே கருதப்படும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது ஏழாவது கருத்து சரியாகத் தோன்றுகிறது. முன்பொரு முறை இப்படி நினைத்ததற்காக என் மீதே வருத்தம் கொண்டதுண்டு. இரண்டாவது, ஐந்தாவது கருத்தோடு எனக்கு உடன்பாடு ஏற்படுகிறது.
நன்றி குமரன். இணையப் பக்கம் வந்து நாளாச்சு. ஆச்சர்யம்தான் - இரண்டாம் முறையாக குறிப்பிடப்பட்டது!
பிரியா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
"எண்ணமாக இருக்கும் வரை அது அவரை மட்டுமே பாதிக்கும். எண்ணம் சொல்லாக வெளிப்படும் போது மற்றவர்களையும் பாதிக்கும்."
ஒருவருடைய எண்ணங்கள் மற்றவர்களையும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். எண்ணத்தினால் வரும் பாதிப்பு சொல்லினால் வருவதைப் போல் உடனே தெரியாமல் இருக்கலாம்; ஆனால் மனத்தாலும்/சிந்தனையாலும் வரும் எண்ணங்களினால் பாதிப்பு உண்டு என்று தான் எனக்கு தோன்றுகிறது.
ரங்கா.
வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.
ரங்கா அண்ணா. என்னுடைய பதிவைப் பார்த்தீர்களா? உங்களை வம்புக்கு இழுத்திருக்கிறேன். :-)
http://koodal1.blogspot.com/2006/03/154.html
தங்களது எண்ணங்கள் பிராமாதம்!!
தங்களது எண்ணங்கள் பிராமாதம்!!
குமரன்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் பதிவைப் பார்த்தேன் - வம்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே?
ரங்கா.
நடேசன், தங்கள் பாராட்டுக்கு நன்றி.
கருத்துரையிடுக