புதன், ஜனவரி 11, 2006

உண்மையா அல்லது (பெரும்பான்மை) நன்மையா?

பொய் சொல்வது என்பது கிட்டத்தட்ட பேசத் தெரிந்தவுடனேயே ஆரம்பித்துவிடுகிறது. பொய் சொல்வது சரி என்று நான் சொல்லவில்லை - இயல்பாகவே வந்து விடுகிறது என்றுதான் சொல்கிறேன். பொய்யை யார் சொன்னாலும், அதை நியாப்படுத்துவதற்கு நிறைய வாதங்கள், காரணங்கள் இருக்கின்றன. தமிழில் இம்மாதிரி நியாயப்படுத்த, காரணமாக மேற்கோள் காட்ட நிறைய பழமொழிகளும், ஏன் திருக்குறளே கூட இருக்கின்றன. “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.” (292)

புரைதீர்ந்த என்றால் குற்றமற்ற என்று பொருள் (புரை - குற்றம்; தீர்ந்த - முடிந்த, இல்லாத). ‘பொய் குற்றமற்ற நன்மை விளைவிக்கிறதா’ என்று யார் தீர்மானிப்பது?

பொய் சொல்லும் எவரும் தனக்கு தீமை வரும் என்று எண்ணினால் பொய் சொல்லப் போவதில்லை; குறைந்தபட்சம் தற்காலிக நன்மை வரும், அல்லது வரப்போகும் தீமை தற்காலிகமாகவாவது போகும் என்று எண்ணித்தான் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல - பொய் சொல்வது குற்றம் என்று கொண்டால், குற்றமில்லாத நன்மை பொய் சொல்வதால் வர முடியாது.

முதற் குறளில் வள்ளுவரே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்.” (291)

இங்கேயும் இதே பிரச்சனை - யார் தீமை எது என்று தீர்மானிப்பது. எப்போது மாற்றம் வருகிறதோ, அப்போது நன்மை, தீமை இரண்டும் வரும். ஒருவரின் உணவு மற்றவருக்கு விஷம். இது தவிர்க்க முடியாதது. நன்மை தீமை இரண்டும் வராமல் பேச முடியும்; ஆனால் சுவாரசியம் அல்லது மாற்றம் இருக்காது. ஒரு நல்ல துணுக்குக்குக் கூட கொஞ்சம் கற்பனை - பொய் - தேவையாயிருக்கிறது.

இந்த இரண்டு குறள்களையும் இப்படி மாற்றியும் எழுதலாம்:

“பொய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
நன்மை இலாத சொல்.” (291-அ)
“வாய்மையும் பொய்மை யிடத்த புரைசேர்ந்த
தீமை பயக்கும் எனின்.” (292-அ)

சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஏற்படும் கஷ்டங்கள், சங்கடங்கள் தீயனவாகவும் போகலாம். என் அனுபவத்தில் தேவையில்லாத சமயத்தில் சொல்லப்பட்ட உண்மைகள் விளைவித்த சங்கடங்கள் அதிகம் (உதாரணம், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது, சட்ட திட்டங்களுக்காக மருத்துவர் அறுவை சிகிச்சையில் என்ன மாதிரி தீமைகள் வருமென்று 10 நிமிடங்கள் விவரித்தார் - எனக்கோ 'அபசகுனம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே' என்று வருத்தமாயிருந்தது). அவர் சொன்னது எல்லாம் உண்மைதான் - எனக்கு வருத்தம் விளைவித்ததால் அதை 291ம் குறளில் (அல்லது 291 – அ) சொன்னது போல் வாய்மை இல்லை என்று கொள்ளலாமா?

இதைவிட அடிப்படையாக - விளைவுகள் (நன்மை - தீமை) குணத்தை (வாய்மை - பொய்மை) விளக்குவது சரியானதா? விளைவுகள் தான் முக்கியமென்றால் குணத்தை குறைந்து மதிப்பிடுகிறோமா? உண்மையைவிட (பெரும்பான்மை) நன்மை முக்கியமானதா? அல்லது உண்மை பேசுவதே, உண்மையாய் இருப்பதே பெரும் நன்மையா? சரியாகத் தெரியவில்லை.

9 கருத்துகள்:

rv சொன்னது…

ரங்கா,
இதே குழப்பம் எனக்கும் உண்டு. ஆனால், பல சமயங்களில் நன்மை செய்கிறோம் என்று நினைத்து நாம் சொல்லும் சின்னச் சின்ன பொய்கள் கூட (அவை பொய்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே) பிற்பாடு உண்மை தெரியவரும்போது பெரும் தீங்கை விளைவிக்கின்றன.

//சட்ட திட்டங்களுக்காக மருத்துவர் அறுவை சிகிச்சையில் என்ன மாதிரி தீமைகள் வருமென்று 10 நிமிடங்கள் விவரித்தார் - எனக்கோ 'அபசகுனம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே' என்று வருத்தமாயிருந்தது). //
இதில் இரண்டு பார்வைகள் இருக்கின்றன ரங்கா. ஒன்று உங்களுடையது. இன்னொன்றும் உங்களுடையதே. அதாவது, முன்கூட்டியே உங்களை எச்சரிக்காமல் செய்துமுடித்த சிகிச்சையால் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமாயின், "முன்னாலேயே விவரமா சொல்லித்தொலைச்சிருந்தால், இந்த சிகிச்சைக்கே சம்மதித்திருக்கமாட்டேனே" என்று அல்லல்படும் மனம். :)

குமரன் (Kumaran) சொன்னது…

ரங்கா அண்ணா. அருமையான பதிவு. இந்த விஷயத்தில் ஒரு தெளிவு வந்துவிட்டால் பின்னர் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருக்கும்.

என்ன இராம்ஸ்...ரங்காண்ணா டாக்டரைப் பற்றிச் சொன்னவுடன் உங்க (டாக்டர்) பார்வையையும் சொல்லிட்டுப் போயாச்சா? :-)

ரங்கா - Ranga சொன்னது…

உண்மைதான் இராமநாதன். நிச்சயம் அப்படி நினைக்க வாய்ப்பு இருக்கிறது. (எனக்கு அவர் சொன்னது சிகிச்சைக்கு 10 நிமிடம் முன்னதாக - ஏற்கனவே சொன்னது தான்; இருந்தாலும் மறுமுறை சொன்னது பேப்பரில் கையெழுத்து வாங்குவதற்காக). எனக்குத் தெரிந்த நண்பரின் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் வந்து பரிசோதனையில் அது மிகவும் பரவிவிட்டதை குடும்ப மருத்துவர் (நண்பர் தான்) அவரிடம் சொல்லாமல் இருந்தது (உயிரோடு இருக்கும் சில நாட்களில் அவர் மகிழ்ச்சியை ஏன் குலைக்க வேண்டும் என்று தான் எண்ணினார்), ஒருவாரத்தில் மனைவி இறந்ததும் பெரும் பிரச்சனையாகிவிட்டது. Hindsight is an exact science!

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி குமரன் :-)

rv சொன்னது…

//என்ன இராம்ஸ்...ரங்காண்ணா டாக்டரைப் பற்றிச் சொன்னவுடன் உங்க (டாக்டர்) பார்வையையும் சொல்லிட்டுப் போயாச்சா? :-) //
குமரன்,
பின்ன எங்க பக்க நியாயத்தையும் கேக்க வேணாமா?? எடுத்துச்சொல்ல வேற யாருமே வரமாட்டேங்கறாங்களே! :))

ரங்கா,
உங்கள் மருத்துவர் செய்தது சரியா தவறா என்று வகைப்படுத்தமுடியாது. தற்காலத்தில் பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்த அவரின் நல்ல குணம், பிரச்சனை பெரிதானால் என்ன செய்வது என்றும் யோசித்திருக்க வேண்டும். நீங்கள் தவறாக எண்ணமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில், நான் என்ன செய்திருப்பேன் என்று சொல்கிறேன். அந்தப் பெண்ணிடம் உண்மையைக் கூறாமல் (அதே சமயத்தில் ஓவர் optimistic ஆகவும் ஏமாற்றாமல்), பெண்ணின் உறவினர்களிடத்தில் உண்மையைச் சொல்லியிருப்பேன். இதை நான் சொல்லும் வேளையில் அந்த மருத்துவர் செய்தது தவறென்றும் கூற மாட்டேன். அவர் அத்தகைய முடிவெடுக்க பல்வேறு காரணங்கள் இருந்திருக்கக்கூடும், எனக்குத்தெரியாமல். அப்பெண்ணின் கணவர் முதற்கொண்ட உறவினர்களின் மனநிலை உட்பட.

பெயரில்லா சொன்னது…

இது ஒரு தீர்மானிக்க முடியாத விஷயம் என்று சொல்லலாம். எப்பொழுதும் மெய்யே சொல்வதும், அல்லது எப்பொழுதும் பொய்யே சொல்வதும் மனிதனை ஒரு தீவிர நிலையில் (எக்ஸ்ட்ரீம்) கொண்டு போய் விடும் என நம்புகிறேன். அது யாருக்கும் நல்லதல்ல.

எப்போதும் உண்மையே பேசிய அரிச்ச ந்திரனுக்கு ஏற்பட்ட கதி நாம் அறிவோம். அதிகமாகப் பொய் பேசியவர்கள் மாட்டிக் கொள்வதையும் காண்கிறோம்.

என்னுடைய வாழ்க்கையில் நான் சில சமயம் பேசிய உண்மைகள் பேசாமல் இருந்திருந்தாலோ, அல்லது நான் பொய் பேசிய சமயங்களில் உண்மை பேசியிருந்தாலோ நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்த நாட்கள் பல. ஆனால், வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை தான்.

நமக்கு நன்மை அளிப்பதாயும், பிறர்க்கு குறைந்த அளவு துன்பம் அளிப்பதாயும் கூடிய உண்மையோ / பொய்யோ பேசுவது வாழ்க்கையில் ஒரு சமன் நிலைப்பாடு (பேலன்ஸ்) அளிக்கும் என்பது என் நம்பிக்கை. ஆயிரம் பொய் சொல்லி நடந்த திருமணங்கள், ஒரு உண்மை விளம்பியினால் பாழான வாழ்க்கை என பலவும் உண்டு.

ரங்கா - Ranga சொன்னது…

நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை இராமநாதன். அந்த மருத்துவர் நெடுநாள் குடும்ப நணபர்; குடும்பத்தினரின் மனநிலை தெரிந்துதான் இவ்வாறு செய்தார். அவர் செய்ததில் எனக்கு முழு உடன்பாடு உண்டு; ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு மாதிரியான அபிப்பிராயம்.

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

அனானிமஸ்,
நீங்கள் சொன்ன இந்த 'சமன் நிலைப்பாடு' தத்துவத்துடன் நான் ஒத்துப் போகிறேன். 'பேலன்ஸ்' என்பதோ அல்லது ஒரு விதமான 'ஹார்மனி' வேண்டும். என் எண்ணத்தில் குழப்பம் நீங்கள் சொன்ன 'நமக்கு நன்மை அளிப்பதாயும், பிறர்க்கு குறைந்த அளவு துன்பம் அளிப்பதாயும் கூடிய உண்மையோ / பொய்யோ பேசுவது' பற்றித் தான் - இந்த "குறைந்த அளவு துன்பம்" எவ்வளவு என்பதை யார், எப்படி தீர்மானிப்பது? நான் பொய் சொல்லும்போது அதை நியாயப்படுத்த மற்றவர் துன்பங்களை குறைவு என்று சொல்வது சுலபமானது; ஆனால் சரியா என்று யார் சொல்வது?
ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

Aththuzhaai,

I agree fully with what you said. Reminds me of the old quote of Will Durant: "you dont feel happy because it is a beautiful flower; you call it beautiful because it gives you happiness". Similar to this we know after the 'event' (Palan/payan) whether what I did was right.
The trouble is how do I find out what to do when THAT time comes?!
Ranga.