சென்ற வாரம் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகள் பார்த்தேன்: ஒன்று கறுப்பு மற்றது வெளுப்பு. முதலாவது அண்டங்காக்கைகள் பற்றி (ஆங்கிலத்தில் ரேவன்); இரண்டாவது பனிக்கரடிகள் பற்றி. இதற்கு முன்பு தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
முதலில் அண்டங்காக்கைகள் பற்றி:
1. இவைகள் 40 வருடம் வரை கூட உயிர்வாழும்.
2. துணை ஒன்றைப் பெற்றுவிட்டால் கடைசி வரை துணையை மாற்றாது (டைவர்ஸ் எல்லாம் இல்லை)
3. 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற சித்தாந்தத்தில்தான் நம்பிக்கை! (இது வர்ணனையாளர் கொஞ்சம் சுற்றி வளைத்து சொன்னது! நிகழ்ச்சியில் பனியில் உருண்டு புரண்டு விளையாடுகிறது - நாய்க்குட்டி போல)
4. மிகவும் புத்திசாலி - நிகழ்ச்சியில் என்னதான் சிக்கலோடு கயிறுகள் இருந்தாலும், மாமிசம் கட்டியிருக்கும் கயிறை சரியாகக் கொத்துகிறது; காலால் கதவைத் திறக்கிறது! (எனக்கு 'ஸ்ப்ரைட்' காக்கை ஞாபகம் வந்தது)
5. இளவயதுக் காக்கைகள் கூடித்தான் வாழ்கின்றன; தினமும் இரவில் கூடிப் பேசுகின்றன! (வர்ணனையாளர் சொன்னது: ‘தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன, எங்கு இரை கிடைத்தது என்பது பற்றியெல்லாம் பேசிக் கொள்கின்றன’)
6. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் சில இடங்களில் மக்கள் இவற்றை பாதுகாத்து உணவளிப்பது நெடுங்காலமாய் வழக்கத்தில் இருக்கிறது - பார்க்க/கேட்க அழகாக இல்லை; அதிகம் உபயோகம் இல்லை என்றாலும்.
7. திருடித் தின்பதில் இவற்றிற்கு ஈடு இல்லை - ஒவ்வொரு விலங்கிற்கும் அதன் பலம், பலவீனத்திற்கு தகுந்தாற்போல் தனி யுக்தி வைத்திருக்கிறது (உ.ம். காட்டுப் பன்றி தீனி திங்கும் போது, அதன் மேல் அமர்ந்து கொண்டு அதன் கழுத்தில் ஒரு கொத்து; பன்றி நகர்ந்ததும் அதன் தீனியை எடுத்துக் கொண்டு பறந்துவிடுகிறது)
8. தங்களை விட பெரிய விலங்குகளையும் உபயோகிக்கும் திறன் படைத்தது - வர்ணனையாளர் சொன்னது: சில இடங்களில் (ஸ்காட்லாந்து) ரேவன்கள் ஓநாய்க் கூட்டத்திற்கு முன்பாகப் பறந்து சென்று இரையைக் காட்டிக் கொடுப்பதும், ஓநாய்கள் இரையைக் கொன்றதும், கூட்டமாக வந்து இரையில் பங்கு போட்டு உண்பதும் வழக்கம். (சமீபத்தில் இணையத்தில் இரண்டு அண்டங்காக்கைகள் ஒரு சாதாக் காக்கையை கைமா பண்ணுவதைப் படம் பிடித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன்)!
9. காலத்திற்கு ஏற்றவாரு மாறும் திறமை (லண்டனில் ஒரு ஓட்டல் வெளியே இருக்கும் குப்பைப் பையை ஒட்டை போட்டு, அதில் இருந்த மாமிசத் துண்டுகளை தனியாக கொத்தி எடுத்துப் போகிறது! மிருகக் காட்சி சாலையில் எப்போது உணவளிப்பார்கள் என்று காத்திருந்து வந்து கொத்திப் போகிறது!)
10. காட்டில் தனியாக தீனி கிடைத்தாலும், கூச்சல் போட்டு மற்ற காக்கைகளையும் சாப்பிடக் கூப்பிடுகிறது ('இது ஏன் எனப் புரியவில்லை' என்றார் வர்ணனையாளர்)
பனிக்கரடிகள்
1. உண்மையிலேயே ரொம்பப் பெரிசு! (ஓகே சோப் விளம்பரம் ஞாபகம் வருதா?)
2. வளர்ந்த கரடிகள் அண்டங்காக்கைகளுக்கு நேர் எதிர் - சேர்ந்து இருப்பதில்லை; தப்பித் தவறிப் பார்த்துக் கொண்டால் சண்டைதான்!
3. நன்றாக வேட்டை ஆடுகிறது (நிகழ்சியில் ஒரு கன்று தன்னையும் விட கனமான ஒரு திமிங்கிலக் குட்டியை எப்படி வேட்டையாடுகிறது என்று காட்டினார்கள்; வேட்டையாடி அதை சாப்பிட ஆரம்பித்ததும், ஒரு பெரிய கரடி வந்துவிட இரையை விட்டுவிட்டு அந்த இளம் கரடி சோகமாய்ப் போனது பாவமாய் இருந்தது - காக்கைக்கு நேர் எதிர்)
4. குட்டிகளை அம்மாக் கரடி நன்கு பார்த்து வளர்க்கிறது (கோக்க கோலா எல்லாம் கொடுக்கலை!)
5. நன்கு மோப்பம் பிடிக்கிறது (நிகழ்ச்சியில் திமிங்கில வாசனையையும், வால்ரஸ் வாசனையையும் நன்கு மோப்பமிட்டு வேட்டையாடுவதைக் காட்டினார்கள். இருபது முப்பது கரடிகள் புகுந்து விளையாடி ஒரு வால்ரஸ் கூட்டத்தையே துவம்சம் செய்தன. வெள்ளைக் கரடிகள் மேல் அத்தனை வால்ரஸ் இரத்தம் - மனது ரொம்பக் கஷ்டப்பட்டது!)
6. அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டும், சர்வ சாதாரணமாக பனிப் பாளத்தில் நடக்கிறது - உடைந்து விடுமோ என்று எனக்குத் தோன்றினாலும், அதற்கு கவலையே இல்லை.
7. கரடிகளை கிட்டத்தில் படம் எடுக்க வேண்டும் என்று ஒரு இரும்புக் கூண்டுக்குள் ஒருவர் காமெராவுடன் உட்கார்ந்து கொள்ள, கரடிகள் அந்தக் கூண்டை போட்டு உருட்டியது (கூண்டுக்குள் இரை இருக்கிறதே!) எனக்கு பயமாய் இருந்தது.
சதா போரையும், உயிர் இழப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு மாறுதலாய் இருந்தன இவ்விரு நிகழ்சிகளும். அதிலும் கூட வேட்டையாடுவதைப் பார்த்ததுதான் கொஞ்சம் வேதனை.
2 கருத்துகள்:
ரங்கா,
அரசியல், பொருளாதாரம், எதிர்காலம் என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் "living life to the 'fullest' " என்று வாழும் எல்லா விலங்கினங்கள் மீதும் எனக்கு எப்பொழுதும் ஒருவித பொறாமையே. But thats only if I am one of the apex predators :))
தகவல்களுக்கு நன்றி.
ஆமாம் இராமநாதன்; நாம் இரையாகாத வரை சரிதான்! அண்டங்காக்கை வானத்தில் சர்ர்ரென்று கீழே விழுவது போல் பறந்ததும் (ஸ்கை டைவிங்), பனியில் உருண்டதும் இன்னும் கண் முன்னால் இருக்கிறது. எனக்கும் பொறாமைதான்! :-)
கருத்துரையிடுக