இலக்கு - 4
வாழ்க்கை என்று பார்க்கும் போது இதன் ஆரம்பமும், முடிவும் இங்குதான் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மருத்துவப் பார்வையில், அல்லது ஒரு நாட்டு சட்ட ரீதியாக ஒரு உயிரின் தொடக்கமும், முடிவும் (இறப்பு) வரையறுக்கப்பட்டு விவரிக்கப்பட்டாலும், அது முழுமையான ஒன்று என ஒப்புக்கொள்ள முடியவில்லை. சிவவாக்கியர் அந்நாளில் கேட்டது:
"பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்து மண்ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?"
அவரே வேறொரு பாட்டில் இன்னமும் சொல்கிறார்:
"உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது, உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் இறந்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!"
வளர்வதில் திறன் சம்பந்தப்பட்ட அறிவு வளர்ச்சியையும் சேர்த்துப் பார்த்தாலும், அதையும் தவிர பேரறிவாய், ஞானத்தைத் தேடும் எண்ணம் வருகிறது. இதை வளர்ச்சி என்று கூறி நிறுத்த முடியவில்லை. இந்தப் பேரறிவு வாழ்தல், மகிழ்தல், வளர்தல் இவைகளைப் பற்றி மட்டுமல்லாமல் இவைகளையும் தாண்டி ஒரு முழுமையை நோக்கிச் செல்லும் விஷயமாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு உயிரின் பயணம் இந்த பூமியில் பிறப்பதில் தான் ஆரம்பிக்கிறது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. அதே போல அந்தப் பயண முடிவும் இறப்பில் நின்று விடுகிறது என்றும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஒரு துண்டு, பகுதி 1968ல் பிறந்து ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முன்னம் செய்த பயணம் நினைப்பில் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
கல்லூரிப் படிப்பு முடிந்து இந்துஸ்தான் லீவரில் பணிபுரிய ஆரம்பித்த காலத்தில் அலெக்ஸ்பாண்டியன் தயவில் 'பெரி மேசன்' கதைகள் அறிமுகமாயிற்று. அதில் ஒரு கதையில் 'பிறப்பு-இறப்பு' தொடர்பாக பேசிக் கொண்டு வருகையில், எப்படி நினைப்பு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் பெரி மேசன் விளக்குவதாக வரும். அந்தக் கதை (பெயர் உட்பட) மறந்து விட்டாலும், இந்தப் பகுதி மட்டும் நன்றாக நினைப்பில் இருக்கிறது. நாம் தூங்கி எழுகையில் நம் தூக்கத்துக்கு முன்னால் நடந்த அனைத்து விஷயங்களும் மறந்து விடும் என்று ஒரு வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பு போலத் தெரியும். கற்றுக் கொண்ட விஷயங்களையே மறுபடி கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதே போல ஒரு உயிர் பிறக்கும் போது முன் பயணங்களைப் பற்றி மறந்து விடுகிறது என்பது போல இந்தப் பகுதியில் விளக்கம் வரும்.
இந்தக் கதையில் வந்த இந்தப் பகுதியால் பின்னாளில் நிறைய யோசித்திருக்கிறேன் - அதைப் பற்றி பின்னால். இந்த யோசனைகளில் ஒரு குறிப்பிட்ட விஷயம், நினைப்பு, அதன் முக்கியத்துவம். வளர்ச்சியில் ஒரு திறனைக் கற்றுக் கொள்ளுகையில், அது கார் ஒட்டுவதாக இருக்கலாம், அல்லது பியானோ வாசிப்பதாக இருக்கலாம், அந்தத் திறனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதற்கு புலன்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம். பியானோ வாசிக்கையில், வரும் ஒலியை தரம் பிரித்து உணரவே பயிற்சி வேண்டியிருக்கிறது, முதல் மாதத்திலிருந்து இரண்டாம் மாதத்திற்கு என் செவியில் பெரிய வளர்ச்சி இல்லை; ஆனால் இந்தப் பயிற்சியில் செவியும், மூளையும் சேர்ந்து ஒலியின் தரம் பிரிப்பதில் முன்னேற்றம் அடைகிறது. நினைப்பு என்று ஒன்று இல்லையென்றால் இந்த தரம் பிரிக்கும் அறிவு தேக்கி வைக்கப்பட்டிருக்காது.
நினைப்பு திறனைப் பற்றிய அறிவை தேக்கி வைக்கும் பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் எதைத் தேக்கி வைப்பது என்பது என் முடிவைப் பொறுத்தது. இது வளர்ச்சிக்கு முக்கியம். அதே சமயத்தில் என் முடிவோடு சம்பந்தப்படாமல் என் உடல் இயங்கத் தேவையான திறனை, அறிவை அதுவாகவே சேர்த்து வைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமலேயே - உதாரணம்: என் இதய இயக்கம். இருதயம் பற்றி அறிந்து கொண்டதே பள்ளியில் படிக்கும் போதுதான். இப்போது அதன் இயக்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, இருந்தும் இயங்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனக்குள் இயல்பாக இயங்குவதைப் பற்றி அறிந்து கொள்ளவும் என் முயற்சி தேவையாயிருக்கிறது. ஒரு இருதய மருத்துவர், இருதயத்தைப் பற்றி அறிந்து கொள்ள நான்கிலிருந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இதேபோல மூளை, கண், கால் என்றெல்லாம் அறிந்து கொள்ள நிறைய வருடங்கள் ஆகும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவே என் வாழ்நாள் போதாது. இத்தனையும் சேர்த்து வைக்க என் நினைப்பு பாத்திரமும் போதாதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அறிவை, திறனைப் பெருக்கிக் கொள்வதில் நேரம், முயற்சி என்று எத்தனை செலவழித்தாலும், ஒவ்வொரு அறிவும் நிச்சயமாகத் தரும் பாடம் 'எனக்கு அறிந்து கொள்ள வேண்டியது அதிகம்' என்பதுதான்.
சரி இது எல்லாமே தெரிந்து கொண்டு விடுகிறேன் என்றூ ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிந்து கொண்டாலும் முழுமை வரும் என்று தோன்றவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னது:
"ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்".
பத்திரகிரியார் சொன்னது:
“ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?”
இந்தத் திறன் சம்பந்தமான அறிவுகளையெல்லாம் தாண்டி, மூல காரணத்தை, இந்த 'ஏன்' என்ற கேள்விக்கான விடை தரும் அறிவை ஞானம் என்றழைக்கலாம். இந்த மூலத்தை, அறிந்தே அறியும் அறிவை, அறிந்து கொள்ள ஆசை! மீண்டும் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்களில் இருந்து ஒரு பாடல்:
“அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம்?”
இன்னமும் அந்த ஞானம் வரவில்லை - அதனால் இந்த 'அறிதல்' என்னுடய இலக்குகளில் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக