இலக்கு - 5
இலக்குகளை பற்றி நான் முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் காலத்தில் - இருபது வருடங்களுக்கும் முன்பாக! இந்த யோசனை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் கழித்து வேறு ஏதாவது இலக்காகத் தோன்றலாம்; அல்லது இந்த நான்கு இலக்குகளில் சில இல்லாமல் போகலாம். இன்றைய தேதியில் இவை நான்கும் என் இலக்குகள். இவைகளை நான் தனித்தனியாக நான்கு இலக்குகளாகப் பார்ப்பதில்லை. ஒருவிதத்தில் இவையனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. புரிந்து கொள்ள எளிதாக இருப்பதற்காக நான்காகப் பிரித்து விவரித்திருந்தாலும், இவை நான்கும் ஒரு முழுமையை நோக்கிச் செல்ல உதவுவதாகவே நான் எண்ணுகிறேன்.
கல்லூரியில் படிக்கும் போது ராமகிருஷ்ணா மடம் பதிப்பித்த விவேகாநந்தர் உரைகளை, புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் 1900ல் அமெரிக்கா வந்த பொழுது தந்த உரைகள் (லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா) ஒன்றில் இந்த மாதிரி குறிப்பிட்டிருக்கிறார்: "பெரும்பான்மையான மக்கள் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இலக்குதான் முக்கியம்; அதை அடையும் முறை, வழி முக்கியமல்ல என்று கூறுவது தவறு. சரியான இலக்கை நிர்ணயித்தபின் நாம் அதை அடையும் வழியில், முறையில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் அதை அடையும் வழிமுறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் இலக்கை அடைய முடியும். வழியும், முறையும் சரியாக இருந்தால் இலக்கை மறந்தாலும் பாதகமில்லை; இலக்கைத் தாமாகவே சென்றடையலாம்!". இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு விளக்கம். பின்னாளில் பகவத் கீதை உரைகளைப் படிக்கையில், சிதப்பிரஞ்ஞன் பற்றிய விளக்கத்தையும் இந்த உரையின் தொடர்ச்சியாகப் பார்க்கத் தோன்றியது. மூலத்தைப் பொருத்தே விளைவு - பாதையைப் பொருத்தே பயணம்.
இந்தக் கருத்து தொடர்பான கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்:
"பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்"
(வாணி ஜெயராம் குரலில், எம். எஸ். விஸ்வநாதனின் இசையில், அபூர்வ ராகங்கள் திரைப்படப் பாடல் - முழுப்பாடலும் அருமை!)
என் வாழ்க்கையின் சுய தேடலில் இரு நிலைகள். என் இலக்கு(கள்) என்ன? அவை சரியா? இது முதல் நிலை. சரியான இலக்குகள் நிர்ணயமான பின் அவைகளை அடையும் முறை, வழி சரியானதா? இது இரண்டாவது நிலை. நான் முன்பெழுதிய நான்கு இலக்குகளையும் சரியா என்றும், அதை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற வழிகளைப் பற்றியும் சுயவிசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன். இந்த சுயதேடல்/விசாரணை இன்னமும் முடியவில்லை; எப்போது முடியும் என்றும் தெரியவில்லை.
முதலாவதாக 'வாழ்தல்'. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல 'நான் வாழ்வது' என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று தோன்றுகிறது. இதில் சரி/தவறு என்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. இந்த இலக்கு தவறு என்று வாதிட எந்த விதமான காரணமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 'வாழ்தலுக்கு' உள்ள முறை பற்றி, இந்த இலக்கை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற முடிவுகளில், வழியில் எது சரி, எது சரியல்ல என்பதில் அனேக குழப்பம். இந்த 'வாழ்தல்' இலக்கின் முதல் பாகம் பசித் தேவைப் பூர்த்தி. உணவைப் பெறும் முறையில் ஏகப்பட்ட மாற்றம்; காலத்தின் போக்கில் இது மாறிக் கொண்டே வருகிறது.
அறுபது, எழுபது வருடங்களுக்கு முன் என் தாத்தா, பாட்டி (அம்மா வழி) ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம் அருகிலுள்ள மாதவனூர் கிராமத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த முறைக்கும் இப்போது எடிசனில் நான் வாழும் முறைக்கும் நிறைய வித்தியாசம் - முக்கியமாக உணவு, வாழ்க்கை வசதி சம்பந்தப்பட்ட விஷயங்களில். அப்போது மாதவனூர் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. சிறிய தெரு; ஓட்டு வீட்டிற்கு எதிராக மாட்டுத் தொழுவம். பாலுக்காக நான்கு, ஐந்து பசு மாடுகள்; வயலுக்கும், வண்டித் தேவைக்கும் சில எருதுகள். ஒரு கன்றுக் குட்டியாவது எப்போதும் தொழுவத்தில் இருக்கும்! வீட்டின் கொல்லையில் மாதுளம், எலுமிச்சை மற்றும் தென்னை மரங்கள்; சில கொடிகள் (பறங்கி, பூசணி, மல்லி), கீரைப்பாத்தி. கிணறு தாண்டி கத்திரிக்காய் செடி பார்த்ததாக நினைவு. தெருமுனை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஊரணி (சிறு குட்டை). துணி துவைக்க, மாடு குளிக்க மற்றும் இதர தண்ணீர் உபயோகத்திற்கு. சமையலுக்கும், குடிநீருக்கும் வீட்டுக் கொல்லைக் கிணறு. ஊரணிக்கருகே நிறைய கருவேல மரங்கள், சகதி என்று ஒரு குழப்பமான வாசனை. இன்னமும் கொஞ்ச தூரத்தில் வயல். மாதத்தைப் பொறுத்து பச்சை நாற்றுகள் அல்லது முற்றிய கதிர்கள்.
வீட்டிற்குத் தேவையான உணவு அனேகமாக கிராமத்திலேயே உருவானது - கருப்பட்டி உட்பட. வண்டி கட்டி டவுனுக்கு (தேவிப்பட்டினம் அல்லது எப்போதாவது திருவாடானை) சென்று வருகையில் தாத்தா சர்க்கரை, ஓலைப்பெட்டியில் மிட்டாய்/பட்சணங்கள் அல்லது பிஸ்கட் என்று வாங்கி வருவார். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த உணவுப் பொருட்களை சேகரிப்பது, பெறுவது எப்படி என்றும் தெரியும். தாத்தா, பாட்டி இருவருமே பால் கறக்க, பசுவைப் பாதுகாக்க (தவிடு, தண்ணீர் காட்டுவது, பசுவை ஊரணிக்கு ஒட்டிச் சென்று குளித்து விடுவது) எல்லாம் தெரியும். சிறு வயதில் தாத்தா வயலிலும் வேலை செய்திருப்பதாகச் சொல்லக் கேள்வி. மாச்சட்டியில் விளக்கெண்ணை விளக்கு வைத்து, மை தயாரித்த கதையும் பாட்டி/அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். மொத்தத்தில் என் கணிப்பில் கிட்டத்தட்ட 75 சதவீத உணவுத் தேவைகளை கிராமத்திலேயே அவர்களே தயாரித்துக் கொண்டார்கள்.
அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக