இலக்கு - 3
"வாழ்தல்", "மகிழ்தல்" இலக்குகளைப் பற்றி விபரமாக எழுதுவதற்கு முன்னால் அடுத்த இலக்குகளைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். பிறப்பதற்கு முன்னாலேயே கருவிலேயே தொடங்குகிற ஒரு செயல் வளர்ச்சி. விந்துவும், முட்டையும் ஒன்றாகி வந்த ஒரு செல், இரண்டாகி, நான்காகி, வளர ஆரம்பிக்கிறது. பிறந்த பின்னும் தொடர்கின்ற இச்செயல் இறப்பு வரை நடக்கின்ற விஷயந்தான். உடலளவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சி, ஒரு நிலையில் அறிவு, திறன், கலை என்றெல்லாம் உள்ளடக்கி பெரிதாகிறது. உலகில் உள்ள உயிரனைத்திற்கும் வளர்ச்சி பொது. வளர்ச்சியே வளர்ந்து வரும் திறத்தை, தன்னளவில் வளர்வதோடு மட்டுமல்லாமல் தன் இனமே வளர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதை, பரிணாம வளர்ச்சி என்றழைக்கிறோம்!
ஒரு உயிர் உருவாகிப் பின் பிறந்ததே கரு வளர்ச்சியில் வந்ததுதான். இந்த ஆரம்ப வளர்ச்சியில் அந்த உயிரின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது:
"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?"
ஆனால் "வாழ்தல்" ஆரம்பித்த பிறகு காலம் செல்லச் செல்ல நானெடுக்கும் முடிவுகள், என் செயல்களின் விளைவுகள் என் வளர்ச்சியை, அதன் திசை, வேகத்தைப் பாதிக்கிறது என்று தெரிகிறது. அது மழையில் நனைந்தால் ஜலதோஷம் வருவதில் ஆரம்பித்து, உணவில், உடற்பயிற்சியில் ஒழுங்கில்லாத காரணத்தால் சக்கரை வியாதி வருவது வரை அனேக விஷயங்களில் வெளிப்படுகிறது. அதே சமயத்தில் என் முடிவுகளோ, விருப்பங்களோ நேரடியாக சம்பந்தப்படாமல் வளரும் விஷயங்களும் இருக்கின்றன. குழந்தையாயிருக்கையில் நான் முடிவெடுத்து என் முடி வளரவில்லை; இப்போது நான் விரும்பினாலும் வளர மாட்டேன் என்கிறது!
வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இரண்டு இலக்குகளாகப் பார்க்க வேண்டும்? இவ்வுடலைப் பொறுத்தவரை வாழ்தல் இல்லாமல் வளர்தல் இல்லை. வாழ்வதற்காக நாம் எடுக்கும் முடிவுகளில், செயல்களில் வளர்ச்சி தானாக வருகிறது. உதாரணம் - வாழ்வதற்காக உணவு வேண்டும்; உண்பதனால் உடல் தானாக வளருகிறது. உடலைப் பொறுத்தவரை வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் வித்தியாசம் அதிகமாகத் தெரியாவிட்டாலும், அறிவு, திறன் சம்பந்தப்பட்ட விஷங்களில் வித்தியாசம் நிச்சயம் தெரிகிறது. ஒரு திறனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயலாக்குவதாலேயே வளர்ச்சி வருகிறது. வெறுமனே வாழ்வதற்கு அந்தத் திறன் தேவையில்லாமல் இருக்கலாம்; அந்தத் திறனைக் கற்க வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ காரணமாக இருக்கலாம்!
இந்த வளர்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம் காலம், நேரம். எப்படி காலம் ஒரு அம்பு போல முன்னோக்கி மட்டும் செல்கின்றதோ அதே போல வளர்ச்சியும் ஒரே திசையிலேயே நடக்கிறது. பள்ளியில் படிக்கையில் மனப்பாடம் செய்து (பரீட்சைக்கு கட்டாயம் வரும்!) எழுதிய இரண்டு உயிர் வளர்ச்சி பற்றிய பாடங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. ஒன்று கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சி ஆவது; இரண்டு தவளையில் வளர்ச்சிப் பருவம், நிறைய படங்களுடன் (அதனால் ஐந்து அல்லது பத்து மதிப்பெண் கேள்வியாக வரும்). முட்டை, தலைப்பிரட்டை, வாலுள்ள தவளை, பெரிய வாலில்லாத தவளை எல்லாம் ஒரு குட்டையைச் சுற்றி இருப்பதாக வரைந்திருக்கிறேன் (தவளை உருளைக்கிழங்கு போலத் தான் தெரியும், நான் வரைந்தால்). இதில் முட்டை காணோம், தலைப்பிரட்டை காணோம் என்று ஒவ்வொரு பருவத்தை மட்டும் பார்த்தால் வளர்ச்சியில்லை; மொத்தமாக முட்டையிலிருந்து தலைப்பிரட்டை, அதிலிருந்து தவளை என்று பார்த்தால் வளர்ச்சி தெரியும்.
வண்ணத்துப் பூச்சி, தவளையைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி, உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. புழுவாக கூட்டில் வாசம் செய்ய ஆரம்பித்தாலும், வண்ணங்கள் நிறைந்த இறக்கைகளுடன் பூச்சியாக வெளியே வருகிறது. கால்களில்லாமல், நீரில் நீந்திவந்த தலைப்பிரட்டை, நீரிலும், நிலத்திலும் வாசம் செய்யவும், நீந்தவும், தவ்விச் செல்லவும் கால்களோடு தவளையாக வளர்வதும் பிரமிக்க வைக்கும் அதிசயம்தான். இந்த மாற்றத்தில், வளர்ச்சியில் ஒரு நோக்கம், முழுமை தெரிகிறது. என் உடல் வளர்ச்சியில், மாற்றத்தில் இந்த மாதிரி பிரமிக்க வைக்கும் விதமாக மாற்றம் வந்ததில்லை. அதே சமயத்தில் இது வரை அனுபவித்து, உணர்ந்து, அறிந்து கொண்ட விஷயங்களை, என் அறிவில், மனதில் வந்த வளர்ச்சியை சற்று பின் தள்ளி நின்று மொத்தமாகப் பார்க்கையில் நிச்சயம் பிரமிப்பு வருகிறது. இன்னமும் வளர வேண்டும் என்கிற உந்துதலும் இருக்கிறது.
குழந்தையாக இருக்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வயது ஆக ஆக மாறுகின்றதோ, அதே போன்ற மாற்றம் வளர்ச்சிக்கும் வருகின்றது. இந்த மாற்றம் ஒரு விதமான இழப்பை ஒத்திருக்கிறது. எப்படி வண்ணத்துப்பூச்சி புழுவை இழக்கிறதோ, தவளை தலைப்பிரட்டையை இழக்கிறதோ, அதே போல நானும் என் வளர்ச்சியில் நிறைய இழந்திருக்கிறேன். அறிவால், அறியாமையை, அந்த அறியாமை தந்த வெகுளித்தனத்தை இழப்பதையும் இந்த வகையில் சேர்க்கலாம்.
யோசித்துப் பார்க்கையில் இழப்பதற்கு தைரியம் இல்லாத போது வளர்ச்சிக்கான வாய்ப்பும் குறைகிறது. முதன் முதலில் பள்ளியில் விட்டு விட்டு அம்மா வீடு திரும்பிச் சென்றவுடன் மனதில் வந்த பயம் தொடர்ந்திருந்தால், படிப்பு என்பதே ஒரு மாதிரியாகத் திரும்பியிருக்கும். வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் இந்த 'இழக்கும் தைரியம்' ஒரு முக்கியமான வித்தியாசம் என்று கருதுகிறேன். 'வாழ வேண்டும்' என்று நோக்குகையில் இம்மாதிரியான 'இழக்கும் தைரியம்' தேவையாயிருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் வளர்வதற்கு இது தேவையான ஒன்றாகி விடுகிறது.
சுற்றுப்புற சூழ்நிலைகள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வருகிறது. இது வரை கற்ற கல்வியும், திறனும், அறிவும், காலம் முடியும் வரை துணைக்கு வரும் என்று முடிவெடுத்து நிறுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. இவை வளரவில்லை என்றால் வாழ்தலும் பாதிக்கப்படும். அதனால் வளர்ச்சி என்பது எனக்கு மட்டுமல்ல, என் சந்ததிக்கும் அத்தியாவசமாகி விடுகிறது. இந்த வளர்ச்சியில் என்னுடைய ஆக்கபூர்வமான சம்பந்தம், முடிவுகள் பெரும் பங்கு வகிப்பதால், “வளர்தல்” என் இலக்குகளில் ஒன்று.
மேலும் அடுத்த வாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக