பொ.போ.பொ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொ.போ.பொ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சரியா? சந்தோஷமா?

சரியா? சந்தோஷமா?

இரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை. இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது. அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன். குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது. எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது. உதாரணமாக பரீட்சையில் விடை சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி. அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம். எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான். நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.

அந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம். அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது. நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது. மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, "என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்" என்றெல்லாம் நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.

இதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம். அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம். என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும். அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான். பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.

கொஞ்சம் யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம். இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம். அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.

இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.

மற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது. என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா? அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா? என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.

திங்கள், ஜூலை 20, 2009

யோசிக்கும் மொழி - 2

யோசிக்கும் மொழி - 2

அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.

அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.

ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.

இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.

உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.

பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.

ஞாயிறு, ஜூலை 05, 2009

யோசிக்கும் மொழி

யோசிக்கும் மொழி

யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.

சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.

இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்? இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.

இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:
1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;
2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு
3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை

முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.

இதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா? குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?

அடுத்த வாரம் தொடர்கிறேன்.