பாதையும் பயணமும்
பாதை பார்த்து பாதம் சென்றதோ?
பாதம் சென்று பாதை ஆனதோ?
பார்த்து நடந்தால் பாதை தெரியும்
பாதை தெரிந்தால் பயணம் தொடரும்.
இது ஒரு விதமான கூட்டுக் கவிதை. இது பிறந்த விதம் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.
கவியரசு கண்ணதாசனின் பிரபலமான திரைப்பாடல் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் வந்த “தெய்வம் தந்த வீடு”. அதில் வரும் இரு வரிகள்
“நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை என்னைக் கேட்டு பிறந்தானா?”
இதை பற்றி நிறைய யோசித்தது உண்டு. முக்கியமாக, இந்த உறவை ஒரு விதமான ‘காரணம்-விளைவு’ (cause - effect) என்று பார்ப்பதா, அல்லது இதை ‘திட்டம்’ (planning) என்ற கோணத்தில் பார்ப்பதா? என் தந்தை முதலில் பிறந்த காரணத்தாலும், அவர் மூலமாக நான் பின்னால் வந்ததாலும், ‘காரணம்-விளைவு’ சரியான விளக்கமாகத் தோன்றுகிறது. அவர் காரணம்; நான் விளைவு!
வேறு ஒரு கோணத்தில் யோசிக்கையில், என்னைப் பாதுகாக்க, பராமரிக்க ஒருவரை திட்டமிட்டு முதலிலேயே அனுப்பி இருந்தால் இந்த உறவு ‘காரணம்-விளைவு’ இல்லை, மாறாக ஒரு திட்டம்தான் என்று தோன்றுகிறது. காலையில் வெளியே செல்லும் போது மழை இல்லாவிட்டாலும், மாலையில் மழை வரும் சாத்தியம் இருந்தால், நாம் குடையை எடுத்துச் செல்கிறோம். இது திட்டமிடல். குடை எடுத்துச் சென்றதால் தான் மழை வந்தது என்று சொல்வதில்லை. இப்படி யோசித்ததில் வந்ததுதான் இந்தப் பாடலின் முதல் இரு வரிகள்.
பாதை பார்த்து பாதம் சென்றதோ?
பாதம் சென்று பாதை ஆனதோ?
இந்த இரு வரிகளை கேள்வியாக ஒன்று விட்ட சகோதரனுடன் பகிர்ந்த போது உடனேயே அவனிடம் இருந்து வந்த பதில் தான் கடைசி இரு வரிகள்.
பார்த்து நடந்தால் பாதை தெரியும்
பாதை தெரிந்தால் பயணம் தொடரும்.
அதனால் தான் இரு ஒரு கூட்டுக் கவிதை!
இந்த உறவு ‘காரணம்-விளைவு’ என்று வந்தாலும் சரி, அல்லது ஒரு திட்டத்தை ஒத்து வந்ததாக இருந்தாலும் சரி, எப்படி இந்த உறவுக்கான கடமைகளை நாம் பூர்த்தி செய்கிறோம் என்பது தான் முக்கியம். என் தந்தைக்கு நான் வந்தது ஒரு விளைவாக இருக்கலாம்; அதே சமயத்தில் எனக்கு என் மகன் வந்தது ஒரு திட்டத்தை ஒத்து இருக்கலாம். எந்த விளக்கமானாலும் சரி, நான் என் கடமையை - மகனாக, தந்தையாக - செய்தேனா என்பதுதான் முக்கியம். மாதக்கணக்கில் யோசித்தது நான்கு வரிகளில் கவிதையாக கூட்டு முயற்சியில் மலர்ந்ததில் ஒரு மகிழ்ச்சி!