வியாழன், மார்ச் 24, 2011

இலக்கு – 6

இலக்கு – 6

வாழ உணவு அவசியம். உணவில்லாமல் வாழ முடியும் என்று நிரூபித்தவர்களை நான் சந்தித்ததில்லை. உணவைப் பெற அனேக வழிகள் இருக்கின்றன. மாதவனூர் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான உணவில் பத்து சதவிகிதம் கூட எடிசனில் தயாரிக்கப்படுவதில்லை. பாலுக்கு மாடு இல்லை; வீட்டைச் சுற்றியுள்ள மரம், செடிகளில் உண்ணபதற்கான காய், கனிகள் இல்லை. வீட்டில் கிணறு கிடையாது; நெல் வயல் இந்த மாநிலத்திலேயே இல்லை. ஆனால் உணவைப் பெறும் விதத்தில் வசதிகள், வகைகள் அதிகம். இதில் முக்கியமான வசதி நேரம், மற்றும் சக்தி சம்பந்தப்பட்டது. என்னளவில் நேரம்/சக்தி அதிகம் செலவாகாமல் உணவைப் பெற முடிகிறது. எனக்கு பதிலாக வேறு சிலருடைய உழைப்பில் தயாரான உணவை, என் சொந்த உழைப்புக்கும் நேரத்திற்கும் பதிலாக, பணத்தை மாற்றாகத் தந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான அளவில் பெறுகிறேன். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?

சிறு வயதில் உயிரியல் பாடம் படிக்கையில் 'உணவுச் சுழற்சி' பற்றி படித்ததுண்டு. தாவரங்களைத் தின்னும் விலங்குகள், பறவைகள்; அந்த விலங்குகளை, பறவைகளைத் தின்னும் விலங்குகள், பின் அந்த விலங்குகள் இறந்து அதன் உடல் உரமாக மண்ணுக்கு செல்வது என்றெல்லாம் படமும், அம்புக் குறியும் போட்டு விளக்கியிருப்பார்கள். ஒரு விதத்தில் மண்ணும், தாவரமும், விலங்கினமும் ஒன்றையொன்று எப்படிச் சார்ந்திருக்கிறது என்பது அந்தப் பாடம் படிக்கையில் புரிந்தது. மொத்ததில் மனிதனுக்கு மரத்தைப் போன்று தண்ணீர், சூரியன் தயவோடு மட்டும் உணவைத் தயாரிக்க முடியாது – மற்ற தாவர, விலங்கினத்தைச் சார்ந்து தான் இருக்க முடியும். அதனால் நானே பயிரிட்டு உண்பதற்கும், மற்றவர் பயிரிட்டதை பணத்திற்கு மாற்றாகப் பெற்று உண்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல தாவரத்தை மட்டும் உண்டு வாழும் மானுக்கும், மானை உண்டு வாழும் புலிக்கும் இடையில் அதன் உணவு உண்ணும் முறையால் மட்டும் சரி, தவறு என்று நிர்ணயிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. தாவரத்தை உண்பது மானின் இயல்பென்றால், மானை உண்பது புலியின் இயல்பாகிறது.

உணவைத் தேர்ந்தெடுக்கும், பெறும் முறையில் எது சரி, எது சரியல்ல என்ற நிர்ணயம் கடினமானதாக இருந்தாலும், உணவை விரயம் செய்வது சரியல்ல என்பது தெளிவு. அதனால் உணவு விரயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உணவு விரயம் பலவகைப்படும். சாப்பிட்டு முடித்தவுடன் மிச்சம் மீதி நிறைய இருந்து அதைக் குப்பையில் எறிவதில் விரயம் தெளிவாகத் தெரிந்தாலும், மற்ற வகை விரயங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. சிறு வயதிலிருந்தே வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பினால் உணவை வீணாக்காமல், சமைப்பதிலும், பறிமாறுவதிலும், அளவு பார்த்து இருக்கக் கற்றுக் கொண்டாலும், வேறு விதமான விரயங்களைப் பற்றி சமீப காலங்களில் தான் யோசனை அதிகரித்திருக்கிறது.

உணவு ஒரு எரிபொருள், சக்தி! பள்ளியில் படிக்கும் போது, இயற்பியல் பாடங்களில் இந்த "Law of conservation of Energy" (சக்தி பேணுகை விதி?) பற்றி படித்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லப் போனால் இதைப் பற்றி நான் புரிந்து கொண்டது இதுதான். பிரபஞ்சத்தில் சக்தியை உண்டாக்கவோ, அழிக்கவோ முடியாது. இங்குள்ள மொத்த சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. சக்தியை (அல்லது ஆற்றலை) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும். இந்த மாறுதலில் சக்தியின் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத வெப்பமாகவோ அல்லது வேறு விதமான சக்தியாகவோ வெளிப்படலாம். இதை சக்தி விரயம் என்றழைக்கலாம். அந்த மாதிரி விரயமாகும்/மாறும் சக்தியும் பிரபஞ்சத்திலேயே இருப்பதால், மொத்த சக்தியில் கூடுதலோ, குறைவோ இல்லை. இதைப் படிக்கும் போது கீதா சாரம் நினைவுக்கு வரும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “பொருளும் ஒரு விதமான சக்தியே - Mass is a form of Energy” - என்று நிரூபித்திருக்கிறார். ஒரு இயந்திரத்தின் உயர்வு அது எந்த அளவுக்கு சக்தி விரயமில்லாமல் இயங்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு பத்து கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறத்தை விட, ஐம்பது கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறம் உயர்ந்தது. ஒரு விதத்தில் அந்த ஒரு லிட்டர் டீசலின் மதிப்பும் ஐம்பது கிலோமீட்டர் சென்ற பேருந்தினால் உயர்கிறது!


வாழ்வதற்காக உணவைச் சேர்க்கையிலும் இதே விதிதான் - சாப்பிட்ட உணவின் சக்தி என் மூலமாக வெளிப்படுகிறது. என் மூலமாக வெளிப்படும் சக்தி எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சாப்பிட்ட உணவின் சக்தியின் வெளிப்பாடு உயர்கிறது. இல்லையென்றால், அந்த சாப்பாட்டின் சக்தி விரயம்தான்! கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைப்புக்கு வரலாம்:
“தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின் பெருமையன்றோ?
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாவமன்றோ?”

வாழ்கையை உபயோகமாக எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி எத்தனையோ பெரியவர்கள் எழுதிவிட்டார்கள்; இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் எழுதிய ஒரு கட்டுரை என்னை நிரம்பவும் யோசிக்க வைத்த ஒன்று. அதில் ஒரு பகுதியின் தமிழ் மொழியாக்கம் இங்கே: "வாழ்க்கை என்பது வெகு சிலரே அடையக் கூடிய இலக்கை நோக்கிய ஒரு இரவு நேர, கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் சூழ்ந்த, வலி மிகுந்த, களைப்புதரும் நெடுந்தூர நடைப் பயணம். இதில் நம்மோடு நடப்பவர்கள் என்றுமிருக்கும் மௌனமான மரண விதியின் ஆணையின் கட்டுண்டு ஒருவர் பின் ஒருவராக நம் கண்ணிலிருந்து மறைவர். அவர்களின் சுக துக்கங்களில் உதவ நமக்கிருக்கும் அவகாசம் குறைவு. அந்த அவகாசத்தை அவர்களுக்கு ஒளிகாட்டுவதற்கோ, கருணையினால் அவர் துயர் துடைப்பதற்கோ, என்றும் தளரா பாசத்தால் மகிழ்விக்கவோ, தளரும் மனத்துக்கு தைரியம் அளிப்பதற்கோ அல்லது நம்பிக்கையூட்டுவதற்கோ பயன்படுத்துவோம்." [Bertrand Russell – Mysticism and Logic and Other Essays – A Free Man’s Worship]

வாழ்கையை உபயோகமாக நடத்துவது என் உணவின் மதிப்பை உயர்த்தும்; வாழ்தல் என்ற இலக்கை அடைய நான் எடுத்துக் கொண்டிருக்கிற முறை சரியா என்ற நிர்ணயிக்கவும் அது உதவும். நான் உண்ட, உண்கிற உணவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறேனா என்று தெரியவில்லை; இருந்தாலும், இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததே என் வாழ்க்கையின் சுய தேடலில் ஒரு திருப்புமுனை என்று தோன்றுகிறது. மற்ற புலன்களின் பசித் தேவை பூர்த்தி, அதன் வழிமுறை பற்றி அடுத்த வாரம்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தொடர் நன்றாகப் போகிறது, இன்னும் சில உதாரணங்களைச் சேர்த்து, மாதவனூர், நியுஜெர்சி நிலையை - நிதர்சனத்தை எளிதாக சொன்னால் சுவாரசியம் கூடும்

அவ்வப்போது சில பழைய படங்களையும், புது படங்களையும் இணைத்தால் இன்னும் நன்று (மாதவனூரின் தற்போதைய நிலை விக்கிமேபியாவில் தெரியவருமே? அந்தக் கிணறுகளும், குட்டைகளும் இருக்கா இல்லையா என :-))

-அலெக்ஸ் பாண்டியன்

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி அலெக்ஸ் பாண்டியன்.

மாதவனூர் மற்றும் மன்னார்குடி வாழ்க்கை நிச்சயம் மகிழ்தல், அறிதல் பற்றி எழுதுகையில் ஒப்பிடுவதாக இருக்கிறேன். படம் எடுப்பதும், இணைப்பதும் தான் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கிறது. அடுத்த முறை இந்தியா வருகையில் என் தம்பியுடன் சேர்ந்து மாதவனூர், மன்னார்குடி செல்ல வேண்டும் என்று உத்தேசம். அப்போது ஊரணி எல்லாம் நேரிலேயே சென்று பார்க்கலாம் :-). இணையத்தில் தேடியதில், மாதவனூர் ஊராட்சி ஊரணி சீரமைப்புக்காக செலவு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ரங்கா.

Saravanan AR சொன்னது…

hi Ranga,

very interesting topic which i've been thinking for last 2 years.

even though i'm very much happy with my day to day activities, i dont feel fulfillment. coz, i dont know my aim :( if somebody asks, or, if i myself ask, i'd answer "being happy and making others happy" is my aim. but, i know i'm not satisfied enough with my answer.

looking forward to your new posts in this topic.

sinehamudan,
saravanan.ar

ரங்கா - Ranga சொன்னது…

Thanks for the comments Saravanan. Next post is now up in the site.

Ranga.