புதன், ஜூன் 21, 2006

அல்ப சந்தோஷங்கள்

"வாழ்க்கை என்பது நீ மற்ற திட்டங்களை யோசிக்கும் நேரத்தில் நடப்பது" என்று எப்போதோ படித்தது. (Life is what happens to you while you're busy making other plans. John Lennon). இந்த பழமொழியை (Quote என்ற வார்த்தைக்கு தமிழில் பொருத்தமான சொல் இருக்கிறதா?) படித்தவுடன் ஒரே சிந்தனை - இது வரை வாழ்ந்த நாட்களிலே எத்தனை நாட்களை இது மாதிரி கோட்டை விட்டிருக்கிறேன் என்று.

இதுபோல இன்னுமொரு கொடேஷன்: "வாழ்க்கையின் குறிக்கோளே, குறிக்கோளோடு வாழ்வதுதான்". [The purpose of life is to live a life of purpose - Richard Leider] இதைப் படித்துவிட்டு ஒரே குழப்பம் - என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று ஓயாமல் சிந்தனை - நடுவே முதல் பழமொழி நினைவுக்கு வந்து, இந்த குறிக்கோள் பற்றிய யோசனையில் சில வாழ்க்கை மணிகளைத் தொலைத்துவிட்டேனோ என்ற குழப்பம்.
இப்படி எல்லாம் சிந்தனைகள் வந்து போய்க் கொண்டிருக்கும். அடிக்கடி திடீர் ஞானோதயம் வரும்; போகும். சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு ஞானோதயம் இது. வாழ்க்கை என்பது ஒரு பெரிய சந்தோஷத்தைத் தேடி அலைவது என்றில்லை. வழியில் ஆங்காங்கே வரும் - யாருக்கும் தீமையோ தொந்தரவோ தராத அல்ப சந்தோஷங்களிலும் ஒளிந்திருப்பதுதான் வாழ்க்கை.

உதாரணமாக எனக்கு காய்கறி நறுக்குவது - அதிலும் முக்கியமாக ஒரே சீரான அளவோடு நறுக்குவது பிடிக்கும். ஒரு வேளைக்கான வெண்டைக்காயை (அல்லது வேறு எந்தக் காய்கறியையோ) ஒரே சீராக நறுக்கி முடித்தால் வரும் திருப்தியிலும் என் சந்தோஷம் இருப்பதைப் பார்க்கிறேன். இதில் மட்டுமல்ல - புல்லை வெட்டுவதிலும், காரை சுத்தம் செய்வதிலும், அலுவலகத்தில் ஒரு மின் மடல் எழுதியவுடன், 'ஸ்பெல் செக்' செய்து ஒரு தவறும் இல்லை என்று கணினி சொல்லும் போதும் மனதுக்கு ஒரு திருப்தி வருகிறது. எல்லாமே பைசா செலவில்லாத அல்ப சந்தோஷம் தான் - இருந்தாலும் எனக்கு அது வேண்டியிருக்கிறது.

குடும்பத்தோடு லண்டன் சென்று இரண்டுவாரம் செலவு செய்து வந்த திருப்தியோடு இவைகளை என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும், அல்லது இந்த மாதிரி அல்ப சந்தோஷங்கள் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் சந்தோஷத்தோடு கூட, தினமும் கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று அல்ப சந்தோஷங்கள் என் தினசரி வாழ்க்கையை ஒரு உற்சாகத்தோடு நடத்த உதவுகிறது.

இப்போதெல்லாம் தினசரி வாழ்க்கையில் திருப்தியும், சந்தோஷமும், ஒரு விதமான contenment தரும் நிகழ்ச்சிகளை கொஞ்சம் உணர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஞானோதயம் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியவில்லை; இருக்கும் வரை தினசரி வாழ்க்கை டானிக் போல் இருக்கும் இந்த அல்ப சந்தோஷங்கள் வாழ்க!

6 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

quote - மேற்கோள்

சரிதானே? சரியா இருந்தா சொல்லுங்க. அந்த அல்ப சந்தோஷம் எனக்கு கிடைக்கட்டும். :)

மட்டுறுத்தல் செய்வதால் word verification வேண்டாமே. எடுத்துவிடுங்களேன்.

துளசி கோபால் சொன்னது…

இந்த அல்ப சந்தோஷங்கள் தான் மனசுக்குப் புத்துணர்ச்சி தருது. இதையெல்லாம்
விட முடியாது.

இந்த வேர்டு வெரிஃபிகேஷன் இன்னும் வேணுமா? சந்தோஷத்தைக் குறைக்குதே.

Alex Pandian சொன்னது…

quotation is மேற்கோள்

(remove word verification option in comments - when there is already moderation enabled)

ரங்கா - Ranga சொன்னது…

தமிழ் சொல்லை சுட்டிக் காட்டியதற்கு நன்றி இலவசக் கொத்தனார், அலெக்ஸ். 'பொன்மொழி' என்ற சொல்லையும் பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

ஆமாம் துளசி - இதை விட முடியாது தான்.

ஒரே நாளில் மூன்று பேர் வந்து சொல்லி விட்டீர்கள்; எடுத்து விட்டேன் 'word verification'ஐ.

நன்றி ;-)
ரங்கா.

மாதங்கி சொன்னது…

நல்லதொரு பதிவு

ரங்கா - Ranga சொன்னது…

வந்து படித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி மாதங்கி.

ரங்கா.