வெள்ளி, மார்ச் 24, 2006

ஓட்டுனர்கள்!

இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வேலை நிமித்தம் இரண்டு வாரம் பெங்களூர் சென்றிருந்தேன். அலுவலகத்திலிருந்து வீடு (கம்பெனியின் அபார்ட்மென்ட்) செல்ல அலுவலகக் கார் - கார் சோபையிழந்து இருந்தாலும், ஓட்டுனர் களையாக இருந்தார்! (தப்பான கற்பனைக்குப் போக வேண்டாம்!). என்னிடம் “என்ன 'சிடி' வேண்டும் - பாப்? ஹிந்துஸ்தானி? கன்னடம்?” என்றெல்லாம் நேயர் விருப்பம் போல் கேட்டார். அவரிடம் இருந்த செல்போன் வித விதமாய் சத்தம் போட்டது ('இது என் வீட்டிலிருந்து, இது என் மானேஜர்' என்றெல்லாம் விளக்கம் கிடைத்தது). வீடு திரும்புகையில் களைத்து உட்கார்ந்து இருக்கும் என்னையும், அவரையும் தூரத்திலிருந்து யாராவது பார்த்தால், ஓட்டுனர் யார் என்ற சந்தேகம் கட்டாயமாக வரும்! எனக்கு சிறு வயதிலிருந்து பார்த்த வித விதமான ஓட்டுனர்களின் ஞாபகம் வந்தது!

முதலாக பரமக்குடியில் என் பெரியப்பா வீட்டு 'டிரைவர் சந்தானம்'. ஊருக்குள்ளேயே சற்று தொலைவு போவதற்கும் (சினிமா, தெரிந்தவர் வீடு), மற்றும் முக்கியமாக மதுரை மற்றும் அக்கம் பக்கம் உள்ள கோர்ட்டுகளுக்கு (என் பெரியப்பா ஒரு வக்கீல்) போவதற்கும்தான் கார். அருமையாகப் பேசுவார்; கதை சொல்லுவார்; எல்லா விஷயமும் பேசுவார்! ஒரு ஐந்து வயதுப் பையனுக்கு வேறு என்ன வேண்டும்.

பின்பு பள்ளியில் படிக்கும் காலத்தில் (பட்டுக்கோட்டை, மன்னார்குடி) வெளியூருக்கு செல்லும் போது பார்த்த பேருந்து ஓட்டுனர்கள். அப்போது இருந்த முக்கியமான பஸ் பயணம் எல்லாம் சென்னைக்கு (திருவள்ளூவர் - இரவுப் பேருந்து); அல்லது திருச்சி, மதுரை போற 'லோக்கல்' பயணங்கள். அனேகமாக சற்று பருமனாகவும், முறுக்கு மீசை வைத்துக் கொண்டும், வழியில் நிற்கையில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, ஒரு பீடி வலிப்பவராகவும் இருப்பார்.

அடுத்ததாக கல்லூரியில் (திருச்சி) படிக்கையில் தனியார் பேருந்துகள், எப்போதாவது 'தீரன் சின்னமலை'. பெரிய முறுக்கு மீசை, பீடி எல்லாம் இல்லை; சிகரெட்தான்! இந்த ஓட்டுனர்கள் எல்லாம் கொஞ்சம் ஒல்லி - ஆனால் ரொம்பவும் போட்டி மனப்பான்மை நிறைந்தவர்கள். மெயின்கார்ட்கேட்டிலிருந்து மாலையில் (அல்லது காலையில்) செல்லும் எல்லாப் பேருந்தும் ரொம்பி வழியும். அதிலும் இராசநாயக்கன்பட்டி செல்லும் 45ம் நம்பர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய ஒரு பேருந்து - ஒரு வண்டியில் இத்தனை மனிதர்கள் போக முடியுமா?!? என் நண்பன் ஒருவன் சொன்னது 'இந்த கண்டக்டர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் நம் முகம் தெரியாது; நம்மையெல்லாம் ஒரு எட்டணா, அல்லது ஒரு ரூபாய் என்றுதான் அவர்களுக்குத் தெரியும்!'

பின்பு சென்னைக்கு வந்த பின் தினமும் 'பல்லவன்' ஓட்டுனர்கள் - இவர்களுக்கு வசூல் கவலையெல்லாம் கிடையாது; அதனால் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே கிளம்பிவிடுவார்கள் அல்லது சில நிறுத்தங்களை விட்டு விடுவார்கள். நகைச்சுவை உணர்வு நிறம்பியவர்கள். நமக்கு உடற்பயிற்சி தருவதற்காக, நிறுத்த வேண்டிய இடத்த்ற்கு முன்பாகவோ அல்லது தாண்டியோ நிறுத்துவார்கள். நாம் ஓடி வருவதைப் பார்த்தாலும் கிளம்பி விடுவார்கள்.

அமெரிக்கா வந்த பின் நானே என் வீட்டுக்கு (முக்கியமாக வீட்டு அம்மாவிற்கு) ஓட்டுனராகி விட்டதால் அதிகம் மற்ற ஓட்டுனர்களைப் பார்க்க முடிவதில்லை! வயதாகி வருவதால் இப்போதெல்லாம் முதன்மை ஓட்டுனரை - அர்ஜுனனின் சாரதியை - அதிகம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன்!

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

சூப்பராக் கவனிச்சிருக்கீங்க. ஒரு + போட்டுட்டேன்.

rv சொன்னது…

//நம்மையெல்லாம் ஒரு எட்டணா, அல்லது ஒரு ரூபாய் என்றுதான் அவர்களுக்குத் தெரியும்!'//
:))

நல்ல பதிவு. ஓட்டுநர்கள் பத்தி நான் தனிப் பதிவு தான் போடணும். :)


ரொம்ப நாளாச்சு பாத்து. எப்படி இருக்கீங்க?

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி துளசி. நன்றி இராமநாதன். இரண்டு மாசமா வேலை அதிகம் - அதனால அதிகமா இணையப் பக்கம் வர முடியல. மற்றபடி சுகம் தான்.

இன்னும் எத்தனையோ பார்த்து ரசித்திருக்கிறேன். முதன் முதலில் இராமநாதபுரத்தில் ஜீப்புக்கு முன்பக்கம் ஒரு 'டாணா' கம்பியை வச்சு சுத்தி வண்டியக் கிளப்பினதப் பார்த்தது (அப்ப எனக்கு 4 வயசு), அப்புறம் பஸ்ஸில் போகும் போது இரண்டு கையாலும் டிரைவர் கியர் மாத்தினதப் பார்த்து பயந்து போனது (ஸ்டியரிங்ல கையே இல்லயே!), பஞ்க்சனார டயரை மாற்ற 'டிரைவர் சந்தானம்' ஸ்டெப்னி வச்சு சக்கரம் மாத்தினது (காத்துக் கொண்டிருக்கையில் பெரியப்பா இளனி வாங்கித்தந்தது), பஸ்ஸில் பாம்பாட்டி கூடையோடு வர, எதுக்கும் இருக்கட்டும் என்று அவர் இறங்கும் வரை கூடையே பார்த்து வந்தது, எல்லாத்துக்கும் மேலா ஆந்திராவில் சித்தூருக்குப் பக்கத்தில் போகும் போது பஸ்ஸில் ஒருவர் ஆட்டை ஏற்றி வந்தது....எவ்வளவோ இருக்கு.

மன்னார்குடியில் பள்ளியில் ஒரு பஸ் மாடல் செய்து, அதில் உள்ள ஹெட் லைட் எதிரில் வரும் வண்டியின் வெளிச்சம் பட்டு தானாக 'டிம்' ஆவது போல் (போட்டோ எலக்டிரிக் செல்) செய்து வேலூரில் அறிவியல் கண்காட்சிக்காக எடுத்துப் போனது இன்னமும் நினைவில் நிற்கிறது. எல்லாம் அந்தக் காலம்! :0)

குமரன் (Kumaran) சொன்னது…

நல்லா கவனிச்சு எழுதியிருக்கீங்க ரங்காண்ணா.

ரங்கா - Ranga சொன்னது…

wanRi kumaran.