சென்ற வாரம் ஒரு ஜோலியாக முதல் முறையாக தெற்குப் பக்கம் (தெற்கு கரோலினா) சென்று வந்தேன். முதல் நாள் மாலை வீட்டம்மாவின் உதவியுடன் காரில் ரயில் நிலையத்தை அடைந்து, நியூஜெர்ஸி ட்ரான்சிட் தயவால் நூவர்க் விமான நிலயத்திற்கும் (பெரிய ரயிலிலிருந்து குட்டி மோனோ ரயில் மாறி) நேரத்தோடு போய் சேர்ந்தேன். வழக்கமான பாதுகாப்பு பரிசோதனை (கோட், பெல்ட், காலணி கழற்றி, மாட்டி) எல்லாம் முடித்து, இருக்கை வரிசையை கூப்பிடும் வரை காத்திருந்து போய் உட்கார்ந்து, ஒரு சுகமான பயணம். ஒன்றரை மணி நேரத்தில் சார்லெட் சென்றாயிற்று.
அங்கிருந்து ஃப்ளாரென்ஸ்க்கு ஒரு குட்டி விமானம் - டாஷ் 8 வகை. மொத்தமே பதினைந்து வரிசை தான் இருக்கும். இறக்கைகளில் பெரிய விசிறி (ப்ரொபெல்லர்); ஒரு கயற்றால் கட்டிப் போட்டிருந்தார்கள். படிக்கட்டுக்கு (கதவு தான் - திறந்தால் படி) அருகிலேயே இந்தப் பிரம்மாண்டமான விசிறி இருந்ததால், கயற்றால் கட்டியிருந்தது ஒரு தைரியத்தைக் கொடுத்தது. தெற்கில் உள்ளவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவது கஷ்டமாயிருந்தது. பதிலுக்கு ஒரே அல்ப சந்தோஷம் நான் பேசியதும் அவர்களுக்குப் புரியவில்லை என்பது தான்.
அதிகம் பிரயாணிகள் இல்லை என்பதால், விமானப் பணியாளர் கிடுகிடுவென்று தலைகளை எண்ணி (நம்மூரில் ஆம்னி பஸ் இரவில் ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி பின் கிளம்புகையில், கிளீனர் வந்து எண்ணுவாரே அது போல்) தன் பேப்பரில் சரிபார்த்து, காக்பிட்டில் உள்ள பைலட்டிடம் 'ரைட்' கொடுத்தார். அவரும் ஒரு முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு இவரிடம் ஏதோ சொல்ல, விமானப் பணியாளர் முதல் மூன்று வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களை பின் வரிசைகளுக்கு போகச் சொன்னார். மொத்தம் பதினைந்து பேர்தான் பயணம் என்பதால், விமானத்திற்கு பின் பாரம் வேண்டும் என்று இவ்வாறு செய்வதாகச் சொன்னார். எனக்கு கிராமத்திலிருந்து டவுனுக்கு வண்டி கட்டிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. வைக்கோலை எல்லாம் சரி பண்ணி, ஜமுக்காளம் போட்டு (சாய்ந்து கொள்ள சிவப்பு குஷண் எல்லாம் இருக்கும், சின்னச் சின்ன கண்ணாடிகள் தைத்து), ஏறி உட்கார்ந்தால், பெரியவர்கள் வந்தவுடன், வண்டிக்காரர் நம்மை எழுப்பி, கொஞ்சம் 'முன்னேவா - பின்னே போ' என்றெல்லாம் பாரம் சரி பண்ணியது நினைவுக்கு வந்தது.
இருபது நிமிடப் பிரயாணம் என்பதால் கடலை, காப்பி எல்லாம் கிடையாது. ஃப்ளாரன்ஸ் போய் இறங்கினால் ஒரே மழை. என்னிடம் ஒரே ஒரு கைப்பெட்டிதான்; எடுத்துக் கொண்டு சற்று மெதுவாக ஓடி (தண்ணீர் வழுக்கும் என்று பயம்) விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டேன். முன் கதவைத் திறந்து கொண்டு நாம் வந்தால், பின் கதவை (விமானத்தின் தொப்பை) திறந்து பொட்டியை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய பெட்டி கொண்டுவந்தவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம். எல்லாப் பொட்டிகளையும் இறக்கும் வரை காத்திருப்பதா (மழையில் பொட்டி நனைந்து கொண்டிருந்தது வேறு கவலை), அல்லது பேசாமல் ஓடிப் போய் பொட்டியைத் தூக்கிக் கொண்டுவருவதா என்று யோசித்துக் கொண்டு ஒதுங்கி இருந்தார்கள்.
அங்கிருந்து காரில் ஹார்ட்ஸ்வில் பயணம். 40 நிமிடப் பயணம் எனக்கு ஒரு மணி ஆயிற்று - இரவில் திருப்பம் தெரியாமல் தவறாக 6 மைல் போய் திரும்பியதால். மறுநாள் மாலை ஜோலியெல்லாம் முடித்து வெயிலிலேயே திருப்பம் - கார் (இந்த முறை 35 நிமிடங்களில் வந்தாயிற்று), குட்டி விமானம் (திரும்பும் போது மொத்தமே 12 பேர் தான் விமானப் பணியாளரையும் சேர்த்து - மறுபடி முன் பாரம் பின் பாரம் தமாஷ்), பெரிய விமானம், மோனோ ரெயில், பெரிய ரெயில், வீட்டம்மா கார் என்று குளிரில் நடுங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.
வீட்டிற்கு வந்து சாப்பிட்டு (ஒரே பசி), குழந்தைகளோடு அரை மணி விளையாடி, படுத்துத் தூங்கினால் எட்டு மணி கழித்துதான் எழுந்திருந்தேன். இருந்தும் அலுப்பு போகவில்லை. யோசித்துப் பார்த்தால், சிறு வயதில் மாதவனூரிலிருந்து வண்டி கட்டி தேவிப் பட்டணம் போய், பஸ்ஸில் இராமனாதபுரம், பின் குதிரை வண்டியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கு வீதி வீட்டுக்கு போனதிலிருந்த களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை.
9 கருத்துகள்:
ரங்கநாதன்,
நீங்க வேலூர் மாவட்ட மாதனூர் அதை சேர்ந்தவரா என்ன? நம்க்கு பக்கத்துல திருப்பத்தூர் தான்.
Smiling faces, beautiful places - உண்மை! தெக்கத்தியார்களின் உபசரிப்பும், அன்பும், அமைதியான ஊர்களும் எனக்கு என்றைக்கும் விருப்பம். ஆமா, சார்லஸ்டன் பக்கம் போகலையா?!
இல்லீங்க சந்தோஷ். இராமாநாதபுர மாவட்ட மாதவனூர். ரொம்ப சின்ன கிராமம் - நான் இருக்கையில மின்சாரம் கிடையாது, மொத்தமே 2 வீதிதான். தேவிப் பட்டணம் பக்கம். ஒரு வருஷம் கழிஞ்சூரில (வேலூர் - சித்தூர் ரோடு) படிச்சிருக்கேன், வீடு வேலூர் ஈ.பி. காலனி.
ஆமா சுந்தரவடிவேல் சார். புரிய கஷ்டப்பட்டாலும், இதமா இருக்காங்க. முரளி கிட்ட கேட்டு கொலம்பியா போகலாமான்னு யோசனை!
ரங்கநாதன்,
நல்லா எழுதியிருக்கீங்க. அந்த முன்பாரம் பின் பாரம்
எல்லாம் ஞாபகப் படுத்துனதுக்கு 'நன்றி':-))))
பாராட்டி பின்னூட்டமிட்டதற்கு நன்றி துளசி.
சுந்தரவடிவேல் சார் - சார்லஸ்டன் எல்லாம் போகலை.
//களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை//
ரங்காண்ணா. எனக்கும் இப்படித் தோன்றியதுண்டு. வயதாகி விட்டது என்று எண்ணிக்கொள்வேன். :-)
குமரன்,
வாஸ்தவம் - வயதும் ஒரு காரணம். உடல் களைப்பை விட மனக் களைப்பு அதிகம் - அதுதான் ஏனென்று தெரியவில்லை.
Anonymous,
In my one day trip I did not find anything racial. But I have heard comments about South - both about their hospitality and racism. I do not have personal knowledge to support them; and I am not comfortable in generalizing a statement.
Ranga.
கருத்துரையிடுக