வியாழன், நவம்பர் 17, 2005

நான் யார்?

வெகு நாட்களாக (வருடங்களாக) மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. இப்போதைக்கு இதற்கு விடை கிடைக்கும் என்று தோன்றவில்லை. இந்தக் கேள்விக்காக இது வரை தேடி நான் தெரிந்து கொண்டது இதுதான்!

பொருட்களை வைத்து 'நான்' என்பதை விளக்க முடியாது. இந்த வேலை இல்லாவிட்டாலும் 'நான்' இருக்கிறேன். என் கார், வீடு, பணம் இல்லாவிட்டாலும் 'நான்' இருக்கிறேன்! உறவுகளை வைத்தும் 'நான்' என்பதை விளக்க முடியாது. என் தாத்தா பாட்டிக்கு 'நான்' பேரன். இப்போது அவர்கள் இல்லாவிட்டாலும், 'நான்' இருக்கிறேன்! என் உடல் 'நான்' அல்ல - என் முடி தான்; மொட்டை அடித்த பின்னும் 'நான்' இருக்கிறேன். பேசும் போது கூட 'என் கை', 'என் கால்' என்றுதான் கூறுகிறேன் - என் அவயங்கள் ‘என்னுடையது’ – ஆகவே 'நான்' என்பது என் உடலிலிருந்து வேறு பட்டது.

சரி. டெஸ்கர்ட்ஸ் சொன்னது போல 'நான் யோசிக்கிறேன்; அதனால் இருக்கிறேன்' என்று எடுத்துக் கொண்டால், தூங்கும் போது நான் யோசிப்பது இல்லை. (என் மனைவியின் கூற்றுப்படி விழித்திருக்கும் போதே நான் அதிகம் யோசிப்பது இல்லை!). ஆனாலும் தூங்கும் போது 'நான்' இருக்கிறேன் - அதனால் சிந்தனை 'நான்' இல்லை!

மனம் (இதை எப்படி விவரிப்பது? என் எண்ணங்களின் பிறப்பிடம்?) என்பதும் 'நான்' இல்லை - என் மனம் என்று அழைப்பதிலிருந்தே, அதுவும் 'என்' அங்கங்களில் ஒன்று - கால், கையைப் போல என்று புரிகிறது! ஆத்மா? நினைவஞ்சலி எழுதும் போது கூட 'அவருடைய ஆத்மா சாந்தியடைவதாக' என்று எழுதுவதால், ஆத்மாவும் மனதைப்போல ஒரு அங்கமா? 'நான்' என்பது என் ஆத்மாவையும் தாண்டியா?

சிவவாக்கியர் எழுதிய செய்யுள் புரிந்தும் புரியாதது போல் இருக்கிறது:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

இதில் அந்த 'ஒன்று' பிடிபட மாட்டேன் என்கிறது! விளக்க உரைகளைப் படித்தாலும் புரிபடுவதில்லை :-( புத்தகங்களைத் தேடிப் படிக்கும் போது ஔவையார் (நல்வழி: வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை...) ஞாபகம் வருகிறது. 'நான் யார்?' கேள்விக்கு படித்து விடை காணலாம் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.

பாதி இடங்களிலே 'நான்' ஒரு எண்தான் (social security no., employee id, bank account number, ticket number in post office) - சில இடங்களில் இரண்டு எண்கள்!! ( login id and password, bank card number and pin). "என்னடா இது இத்தனை வருடம் படித்து, உழைத்து வந்ததெல்லாம் ஒரு எண்ணாக மாறத்தானா?" என்று ஒரு கோபம் வருகிறது. 'நான் யார்' என்று தெரியாமலே வாழ்க்கை முடிந்து விடுமோ என்று அச்சமும் இருக்கிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும், வீட்டிற்கு சென்றவுடன் மூன்று வயது மகள் கண்களில் சந்தோஷத்துடன் ஓடி வந்து கட்டிக் கொண்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து 'அப்பா!' என்று கொஞ்சும் போதும், ஒரு வயது மகன் வேகமாகத் தவழ்ந்து வந்து காலைக் கட்டிக் கொள்ளும் போதும் 'நான் யாராயிருந்தால் என்ன? – Does it matter? - தெரிந்து கொண்டு என்ன சாதிக்கப் போகிறேன்?' என்று தான் எண்ணத் தோன்றுகிறது!!

8 கருத்துகள்:

மோகன் சொன்னது…

நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார் யார்....
தாய் யார்? மகன் யார்? தெரியார்...
தந்தை என்பார் அவர் யார்....

ஐய்யோ...என்ன ஆச்சி எனக்கு?

ம்..ம்ம்...இதுக்குதான் சொல்றது....படிச்சத அனுபவிக்கனும்....ஆராயக்கூடாது...

ரங்கா - Ranga சொன்னது…

கண்ணதாசனின் திரைப்படப் பாடலைக் கொடுத்ததற்கு நன்றி மோகன். நீங்களும் நியூஜெர்ஸிதானா? கிட்டத்தான் :-)

Alex Pandian சொன்னது…

Your blog featured in Dinamalar today - checkout Ariviyal Ayiram section.

Alex Pandian சொன்னது…

http://www.dinamalar.com/2005Nov20/flash.asp

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

http://www.dinamalar.com/2005Nov20/flash.asp

paarattukkal nanba....

ரங்கா - Ranga சொன்னது…

சுட்டி கொடுத்து தெரிவித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி அலெக்ஸ்/நிலவு :-)

ரங்கா - Ranga சொன்னது…



Nan=>Instance of God
Proof:

You=>yourfather=>Grandfather..etc
=>adam=>Ameba=>earth=>sun=>Gas(Hydrogen Helium)=>NOTHING(SPACE)

SPACE IS GOD.
YOU CAME FROM SPACE.
SO YOU ARE INSTANCE OF GOD.

ரங்கா - Ranga சொன்னது…

குருஜி,
http://www.blogger.com/profile/30336953

நீங்கள் தந்த பின்னூட்டம் என் கூகுள் மெயிலில் இருக்கிறது, ஆனால் ப்ளாக்கரில் வரவில்லை. ஆதாலால் நானே வெட்டி ஒட்டி விட்டேன்.

'அவன் நானே; இவன் நானே; எதில் நோக்கிலும் அவன் நானே' என்று கண்ணன் பாடுவது போல மாயாபஜார் படத்தில் வரும். :-)

பின்னூட்டத்திற்கு நன்றி.

ரங்கா