வியாழன், அக்டோபர் 06, 2005

'திருவிளையாடல்'

சென்ற வாரம் நான் பார்த்த தமிழ்ப் படம் 'திருவிளையாடல்'. நடிகர் திலகம், நடிகையர் திலகம், திரு. பாலையா நடித்த ஒரு அருமையான படம். தருமியாக வந்து சிரிக்க வைத்த நாகேஷ், ஔவையாக வந்த திரு. கே.பி. சுந்தராம்பாள் இன்றும் மனதில் நிற்கிறார்கள். முக்கியமாக சிவாஜியின் முகபாவம் (குறிப்பாக பாட்டும் நானே பாடும் போதும், நக்கீரரோடு வாதிடும் போதும்), அருமையான இசையோடு கூடிய பாடல்கள். பாதிப் படத்திற்கு நானும் என் மனைவியும் வசனம் சொல்லிக்கொண்டே வந்தோம்!

இம்முறை படத்தைப் பார்த்தபின் ஐந்து நாட்களாக ஒரே யோசனை. இறைவன் இந்த மாதிரியெல்லாம் விளையாடுவாரா? படத்திற்காக கதை கொஞ்சம் ஜனரஞ்சகமாக மாறியிருந்தாலும் 'இறைவன் ஏன் சோதிக்க வேண்டும்? ஏன் சுற்றி வளைத்து காரியங்கள் செய்ய வேண்டும்?' என்றெல்லாம் யோசனை. உதாரணமாக ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க எண்ணினால், போட்டியில் பாடும் போது அவர் குரலைக் கெடுத்திருக்கலாம்! தருமிக்கு பணம் வேண்டுமென்றால் ஒரு புதையல் கிடைத்திருக்க வழி செய்திருக்கலாம். ஒரே குழப்பம்.

நடுவில் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் (சி.டி.) கேட்டேன். அதில் அவர் ஓரிடத்தில் 'இறைவன் செய்யும் எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவர் ஸ்வாமி - நாமெல்லாம் தொண்டர்கள். ஸ்வாமி செய்யும் எல்லாமும் நமக்குப் புரிந்துவிட்டால் நமக்கும் அவருக்கும் தொண்டன் - ஸ்வாமி என்னும் உறவே இல்லாமல் போய்விடும்' என்கிறார். உண்மைதான்.

யோசித்ததில் என் வாழ்க்கையில், பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொல்வது போல:
"கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை" வரை வந்தாயிற்று. இனிமேல் எப்படிப் போகுமோ? யாருக்குத் தெரியும்?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எதுவும் சுலபமாக கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது.

கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பிரசவ வேதனையில் தவித்து பெற்ற குழந்தையை பார்க்கும் போது இருக்க்கும் மகிழ்ச்சி,

கடையில் வாங்குவது போல், இல்லங்களில் சென்று தத்தெடுப்பதில் கிடையாது.


கடவுள் செயல் நமக்கு புரிவதில்லை.. அவ்வளவு ஏன்

நாமே சில சமயம் சில விஷயங்களை நேரடியாக பேசுவதில்லை..

"சொன்னா தப்பா நினச்சுக்க மாட்டியே .."

"அது என்னன்னா.. வந்து.. போயி.."

என்று ஊரை சுற்றி வருவோம்.

அதுபோலதான்.

------------

மேலும் ஜனரஞ்சகமான சினிமாவாக காட்டும் போது சில நீட்டல், குறைத்தல் செய்யதான் வேண்டும்.

பாலையாவின் குரல் கட்டினால் அது அகம்பாவத்தை அழிக்காது, அது ஒரு சாக்காக போய்விடும், ஒன்றுக்கும் உதவாத ஒரு விறகுவெட்டி தன்னை விட நன்றாக பாடுகிறான் என்னும் போதுதான் அது அடங்குகிறது.

ரங்கா - Ranga சொன்னது…

So true Anonymous.