ஞாயிறு, அக்டோபர் 23, 2011

பேசு மனமே பேசு! - 2

பேசு மனமே பேசு! - 2

சி.ஏ. படிப்பு முடிந்து ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கிடைத்தது. பதினெட்டு மாதங்கள் டிரெயினிங் - ஊர் ஊராகப் பயணம். முதல் முறையாக மகன் வீட்டை விட்டு வெளியூர் போகிறானே என்ற கவலை அம்மாவிற்கு. சமாதானமாக 'வாரா வாரம் தவறாமல் பக்கத்து வீட்டுக்குப் ஃபோன் செய்கிறேன்' (வீட்டில் அப்போது ஃபோன் கிடையாது) என்று சொல்லி பம்பாய் கிளம்பினேன். அப்போது ஆரம்பித்தது, வாரமொருமுறையாவது ஃபோனில் பேச்சு என்று - இன்று வரை தொடர்கிறது. அம்மாவும், அப்பாவும் என் வீட்டிற்கு வந்து தங்கும் நாட்கள் தவிர, ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இரண்டு நிமிடங்களாவது பேசி விடுவது என்று! பேசுவதற்கு உருப்படியான சமாசாரம் ஏதும் இல்லாது போனாலும் 'உன் குரலையாவது கேட்கணும்டா!' என்று சென்டிமென்டலாக அம்மா சொன்னதால் பதினேழு வருடங்களாகத் தொடர்ந்து வருவதற்கு ஃபோன் தான் காரணம்.

டிரெயினிங் முடிந்து சண்டிகரில் போஸ்டிங். ஒரு வீட்டின் அவுட் ஹவுசில் குடியிருந்தேன். ஒரு சிறு அறை, படுக்கையறை, சமையல் மற்றும் குளியலறை. வேலை நிமித்தம் வீட்டில் ஃபோன், எஸ்.டி.டி. வசதியுடன். நான்காவது மாதம் ஃபோன் பில்லைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது - ரூபாய் இருபதாயிரத்துக்கும் கொஞ்சம் அதிகம். பில்லை சரிபார்க்கலாம் என்றால் அந்த நாட்களில் எண்ணிக்கை வாரியாக பட்டியல் கிடையாது. அப்புறம் தான் தெரிந்தது, எஸ்.டி.டி. இருக்கும் வீட்டுக் காரர்கள் தொலைபேசி வாரிய ஊழியர்களை சரியாக 'கவனிக்கவில்லை' என்றால், மற்ற வீட்டு தொலை தூரக் கட்டணமெல்லாம் நம் வீட்டு ஃபோனிற்கு வந்து விடும் என்று. இது பரவலாகத் தெரிந்திருந்த ரகசியமானதால் அலுவலத்தில் பில்லை கட்டிவிட்டு, எஸ்.டி.டி. இணைப்பை மட்டும் துண்டித்து விட்டோம். இந்த பில் தகிடுதத்தம் பரவலாகிப் போனதால், பின் நாளில் எல்லா எக்சேஞ்களையும் மாற்றி, எண் வாரியாக கட்டண விவரம் தரும் முறையைக் கொண்டு வந்தார்கள்.

எண்பதுகளின் இறுதியில் இந்தியாவில் பரவலாக வந்த ஒரு விஷயம் 'எஸ்.டி.டி. பூத்' என்று தனியாரால் இயக்கப்பட்ட தொலை தூர இணைப்பகங்கள். சண்டீகரில் வசிக்கையில் (92-94) இந்த மாதிரியான ஒரு தொலை தூர இணைப்பகத்தில் எனக்கு 'கணக்கு' இருந்தது. நான் வீட்டிலிருந்தே அவர்களுக்கு ஃபோன் செய்து சென்னையின் எண்ணைக் கொடுத்தால் அவர்கள் அங்கிருந்து இணைப்புக் கொடுப்பார்கள். முதலில் கொஞ்சம் 'டெபாசிட்'; பின் மாதா மாதம் அவர்களுக்கான கட்டணத்துடன் 'அக்கவுண்ட்' செட்டில் பண்ண வேண்டும். இந்த முறையில் சேதாரம் அதிகம் இல்லை. 94 மே மாதம் காசியாபாத் (உ. பி.) வரும் வரை இந்த முறையில் தான் தொலை தூர ஃபோன் பேச்சு.

உத்திரப் பிரதேசத்தில் வேறு விதமான பிரச்சனை. அரசு அலுவலக ஊழியருக்கு எப்போதெல்லாம் பணத் தட்டுப்பாடு வருகிறதோ அப்போதெல்லாம் நம் வீட்டு ஃபோன் வேலை செய்யாது. அவர் வந்து கை வைத்ததும் வேலை செய்ய ஆரம்பிக்கும்; அதற்காக அவர் கையில் ஏதாவது வைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நடக்கும் விஷயம் இது. பண்டிகைக் காலங்களில் மாதத்தில் இரண்டு தடவையாவது இந்தத் தடங்கல் வரும். 94 கடைசியில் வேலை மாறி ஆஸ்திரேலியா சென்றேன். சிட்னியிலிருந்து திருச்சிக்கு வாரக் கடைசியில் அம்மாவுக்கு ஃபோன். பரமக்குடியில் முதல் முதலாக அடுத்த தெருவுக்கு தூக்க முடியாமல் தூக்கி மூன்று எண்கள் சுற்றி பேசியதில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பேச எடையும் கயறும் (அதான் சார் wire) இல்லாத ஃபோனில் பத்து எண்கள் அழுத்திப் பேச முடிந்த முன்னேற்றத்தை நான் காண கிட்டத்தட்ட இருபது வருடம் ஆனது.

சிட்னியிலிருந்து திரும்பி டில்லி வந்த போது முதல் முறையாக செல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம். ஒரு குட்டி செங்கல் அளவு, கனம்; ஆனால் கருப்பு நிறம். அதற்காக தனி பாட்டரி, அதை மின் இணைப்பில் பொருத்தி புத்துயிர் கொடுக்க தனியாக இன்னுமொரு சாதனம். அந்நாளில் தச்சர்கள் மரத்தை இழைப்பதற்காக ஒரு கருவி வைத்திருப்பார்களே, அது போல இருக்கும். நான்கு மணி நேரம் மின் இணைப்பில் வைத்திருந்தால், ஃபோனும் நான்கு மணி நேரம் உயிரோடு இருக்கும்! நாள் முழுவதும் வேண்டுமென்றால், இரண்டு பாட்டரிகளை முதல் நாள் இரவு உயிர்ப்பித்து வைத்திருக்க வேண்டும். இந்த எல்லா உபகரணங்களையும் சேர்த்தால் முன்னாளின் கருப்பு ஃபோன் அளவுக்கு எடை! இருந்தாலும் 'என்னே தொழில்நுட்ப வளர்ச்சி' - எங்கிருந்து வேண்டுமானாலும் பேச முடிகிறதே!

இந்த ஆகஸ்ட் மாதம் கூகுளின் நெக்சஸ் ஃபோன் வாங்கினேன். இதில் பேச மட்டும் செய்ய வேண்டாம். பாட்டு கேட்கலாம்; படம் பிடிக்கலாம்; புத்தகம் படிக்கலாம்; இணையத்தில் மேயலாம். இன்னம் எத்தனை எத்தனையோ விஷயங்கள். ஆனால் தடவிக் கொடுத்துத் தான் வேலை வாங்க வேண்டும். அந்தக் காலத்தில் சினிமாவில் கோபத்தைக் காட்ட வேகமாக ஃபோனை வைப்பார்கள்; இப்போது என்னதான் கோபம் இருந்தாலும் மெதுவாக அழுத்தத் தான் வேண்டும். கையளவே இருக்கிறது; இருந்தாலும் ஏகத்துக்கு வேலை செய்கிறது!! முதல் முதலாக கல் அளவில் பார்த்த செல் ஃபோனுக்கும், இதற்கும் எத்தனையோ வித்தியாசம்; இந்த மாற்றத்திற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள்.

பேச உதவும் கருவியில் நாற்பது வருடங்களில் நான் கண்ட முன்னேற்றம் அதிகம். என்ன பேசினேன், யாருடன் பேசினேன் என்பதிலும் நிறைய மாற்றங்கள். அதைப் பற்றி அடுத்த பதிவில்.