வெள்ளி, ஏப்ரல் 15, 2011

இலக்கு - 7

இலக்கு - 7

வாழ்தலும் மகிழ்தலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. வாழ்வதற்காக உணவை உண்டாலும், அதைத் தெரிவு செய்வதில் ருசி, மணம் போன்ற குணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவை எரிபொருள் என்று மட்டும் நாம் நினைப்பதில்லை. அதனால் மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் வருமா என்றும் யோசிக்கிறோம். ஆரோக்கியம் மட்டுமே இலக்காகக் கொண்டு எப்போதும் உணவைத் தேர்ந்தெடுப்பதில்லை. உடம்புக்கு நல்லது; ஆரோக்கியம் தரும் என்று உணர்ந்திருந்தாலும் அதன் சுவை, மணம் காரணமாக உணவைத் தவிர்த்திருக்கிறேன். அதே போல ஆரோக்கியத்துக்கு அவ்வளவாக துணை போகாவிட்டாலும், சுவைக்காக உணவை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அனேகமாக எல்லோருமே வாழ்க்கையில் சில சமயங்களில் இந்த மாதிரி சுவையைப் பிரதானமாகக் கருதி உணவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

உலகில் உள்ள பெரும்பான்மையான மதங்களில் உணவைப் பிரதானமாக்கி வந்த பண்டிகைகள் இருக்கின்றன. இவை உணவை உண்ணும் விதமாகவோ, அல்லது உணவை விலக்கும் விதமாகவோ இருக்கலாம். வாழ்தல் பற்றி எழுதுகையில் சேர்க்க வேண்டியவைகளும் (உணவு) விலக்க வேண்டியவைகளும் (விஷம்) ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று குறிப்பிட்டிருந்தேன். பெரும்பான்மையான பண்டிகைகள் - அது எந்த மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி - உணவில் எதைச் சேர்க்க வேண்டும், எதை விலக்க வேண்டும், அல்லது எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்று குறிப்பிடும் விதமாகவே இருக்கின்றன. உணவு சம்பந்தப்படாத பண்டிகைகள் விகிதாசாரப்படி குறைவு.

எப்படி உணவு வயிற்றுப் பசியைத் தீர்த்து உடல் உறுப்புகளுக்கு சக்தியளிக்கிறதோ, அதே போன்று வேறு விதமான 'உணவுகள்' மற்ற புலன்களின் பசியைத் தீர்க்கின்றன. உடலின் மகிழ்ச்சியென்பது இம்மாதிரிப் புலன் பசித் தீர்வினால் வருகிறது. இசை (அல்லது சித்திரம்) காதின் (அல்லது கண்ணின்) பசி தீர்ப்பதால் வரும் உணர்வு மகிழ்ச்சி. வள்ளுவரின் குறள் நினைப்புக்கு வரலாம்:
செவிக்கு உணவில்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.
இந்த மகிழ்ச்சியை நாடாதவரை நான் சந்தித்ததில்லை; நானும் நாடித் தேடுகிறேன். இந்த நாட்டம் தவறா? இந்தக் கேள்விக்கு தீர்மானமாக உடனேயே பதில் அளிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம். இராமநாதபுரத்தில் வடக்கு வீதியில் வசிக்கையில் (முதலாம் வகுப்பு வரை அங்குதான் வாசம்) உணவு (பொரிவகைகள் - முட்டைப்பொரி மற்றும் அரிசிப் பொரி) மற்றும் உறவு (அப்பா, அம்மா, தம்பி, பாட்டி) தவிர்த்து மகிழ்ச்சி தந்த இரண்டு விஷயங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கின்றன. கதை மற்றும் பாட்டு. வாராவாரம் வீட்டில் ஆனந்த விகடன், கல்கி வாங்குவார்கள். நம் வீட்டில் ஒன்று, அடுத்த வீட்டில் மற்றொன்று. படித்துவிட்டு மாற்றிக் கொள்வோம். எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது. படத்தோடு இருக்கும் தொடர், துணுக்குகளை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். புரிந்தது என்றும் சொல்ல முடியாது; படித்ததில் அதனால் மகிழ்ச்சி வந்தது என்றும் சொல்ல முடியாது. பாட்டியைப் படித்துக் காட்டச் சொல்லி பின் கதையாகச் சொல்லச் சொல்வேன். கதையில் வரும் பாத்திரங்களைப் போல மரப்பாச்சி பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவேன். இந்த மாதிரி கதைகளைக் கேட்டு விளையாடியதில் வந்த சந்தோஷம் மகிழ்ச்சி வித்தியாசமானது; முழுமையானது.

அதே போல சில பாட்டுகள், அம்மா பாடியதாலோ, வீட்டில் வானொலியில் கேட்டதாலோ (காலம் சென்ற MS சுப்புலக்ஷ்மி அவர்களின் பாவயாமி ரகுராமம் மற்றும் பாப்பா பாப்பா கதை கேளு) இன்னமும் நினைப்பில் இருக்கிறது. இந்தப் பாட்டுகளைக் கேட்டதில், கதைகளைக் கேட்டதில் வந்த ஒரு மகிழ்ச்சி, மற்றும் திருப்தியை வெறும் புலன்களின் பசித் தீர்வு என்று ஒதுக்கி விட முடியவில்லை. இதே போன்ற சந்தோஷத்தை பின்னாளில் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கும் போதும் அனுபவித்ததுண்டு. ஆனால் அது திரைப்படப் பாடலிலோ அல்லது கதை கேட்டதிலோ, அல்லது திரைப்படம் பார்த்ததிலோ வரவில்லை. இந்தியா கிரிக்கட்டில் உலகக் கோப்பையை வென்ற பின் (1983) குளிர்பான (Thumbsup) விளம்பரத்திற்காக படப் புத்தகங்கள் வெளியிட்டது. சினிமா பிலிம் சுருள் பாணியில் கபில் தேவ் பந்து வீசுவதும், கவாஸ்கர் ஹூக் செய்வதும் ஒவ்வொரு வினாடிப் படங்களாக எடுத்து (கருப்பு வெள்ளை) புத்தகமாக தந்தார்கள். உள்ளங்கை அளவே இருக்கும் அந்தப் புத்தகங்களை வேகமாகப் புரட்டிப் பார்க்கையில் நிஜமாகவே ஓடி வந்து பந்தெரிவது போல இருக்கும். இந்தப் புத்தகங்களை தினமும் இருபது தடவையாவது பார்த்திருப்பேன் - அப்போது வந்த மகிழ்சியிலும் ஒரு விதமான திருப்தி இருந்தது. இப்போது தொலைக் காட்சியில் விளையாட்டை வண்ணத்தில் பார்த்தாலும், அந்த கருப்பு வெள்ளை புத்தகத்தைப் புரட்டியதில் வந்த மகிழ்ச்சி, திருப்தி இல்லை. புலன்களின் பசி தீர்ந்தாலும் மகிழ்ச்சி இல்லை.

வளர வளர இந்த மாதிரி முழுமை தந்த திருப்தியான மகிழ்ச்சி வெகு அரிதாகவே வந்தது. இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி, அதன் எதிர்பார்ப்பு பற்றி நான் படித்த பகவத் கீதை, பெட்ரண்ட் ரஸ்ஸல், வில்லியம் ஜேம்ஸ் மற்றும் இன்ன பிற படைப்புகளிலிருந்து நான் புரிந்து கொண்டவைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.